Monday 17 August 2015

டென்மார்க்.

டென்மார்க் என்றவுடன் பால் பண்ணைகள் நம் நினைவுக்கு வரும்.. இந்த நாட்டில் ஏராளமான பால் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்த்துள்ளது.. பால் பொருட்கள் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் ஆரோக்கியத்திற்கான நிறுவனங்களும் நிறைந்து உள்ளது.  

உலகில் சிறந்த பால் பண்ணைகள்  டென்மார்க்கில் அமைந்ததற்கு முக்கிய காரணம் நகர பகுதிகளை விட கிராமங்கள் மிக அதிகம்.கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலங்கள், தீவனங்கள் தயாரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கிராம புறங்களை, நிலங்களை அக்கறையோடு  பாதுகாத்து வருகிறார்கள். 

முறையான ஆவணங்கள் இருந்தால் பால் பண்ணை அமைக்க 1மணி நேரத்தில் வங்கிக்கடன் கிடைக்கும்.. அதே ஒரு நட்சத்திர ஓட்டலோ, ஷாப்பிங் மாலோ அமைக்க என்ன முறையான ஆவணங்கள் இருந்தாலும் குறைந்தது 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் கிராமங்களை போற்றுகின்றனர்.

இங்குள்ள "வாம்ப்பர்ட்" என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி..ஓஸ்லோவில் இருந்து பண்டிலா ஏர்போர்ட்டை அடைந்து அங்கிருந்து 1மணிநேர கார்ப் பிரயாணம் இரவுப்பயணம் என்பதால் ஒன்றும் தெரியவில்லை.. விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால்..ஆஹா.. அழகான ஐரோப்பிய கிராம வாழ்க்கை.

பசுமை வயல்களுக்கு நடுவே அழகிய பண்ணை வீடு நாங்கள் போனது கடும் பனி காலமனதால் அந்த காலத்தில் விளையும் ஒரு வகையான புற்களை பயிரிட்டு இருந்தார்கள்.. யூகலிப்டஸ் மரம் போன்ற ஒரு குட்டிச் செடி.. பண்ணை வீடுகள் என அந்தப்பகுதியே ரம்மியமாக இருந்தது.

அங்குள்ள பசுக்களை பார்க்க ஆவலாக இருந்தது குளிர் காரணமாக மாடுகளை வேறு கதகதப்பான கூடத்திற்கு மாற்றி விட்டதால் காண முடியவில்லை. வெளியே கிராமமாக இருந்தாலும் உள்ளே ஹைடெக் வசதி வீடு..200 தமிழ்க் குடும்பங்கள் வழக்கம்போல் அதே அன்பு உபசரிப்பு.

இங்கு இரவு நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு உறைய வைத்த குளிரான அனுபவம்.. அங்கிருந்து கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று மீண்டும் ஜெனீவாவில் இறங்கவேண்டும்.. அதிகாலை 3 மணிக்கு டிரெயின் நாங்கள் இரவு ஒருமணிக்கே அங்கு போய்விட்டோம்.

அந்த ரெயில் நிலையம் ஒரு 18 ஆம் நூற்றாண்டு கட்டிடம் மலைப் பகுதிகளில் உள்ளது போல கல்லால் கட்டப்பட்ட கட்டிடம்.. அடித்த குளிர் அப்படியே உள்ளே இறங்கியது அதிகபட்சம் அரைமணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை வெயில் தாங்கியது போல குளிர் தாங்க முடியவில்லை.

உல்லன் கிளவுசுகளுக்குள் விரல்கள் விறைத்ததை உணர முடிந்தது.. பற்கள் இறுகிக் கொண்டன.. உடல் நடுங்க ஆரம்பித்தது..எங்களை இறக்கி விட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர் மட்டும் எங்களுடன் இருக்க மற்றவர்கள் போய்விட்டனர்.. இருந்தது ஒரே கார் நாங்கள் 13பேர்.

அதில் நான்கு பேர் பெண்கள் அவரது காரில் ஹீட்டரை போட்டுவிட்டு முதலில் ஒரு 6 பேர் 10 நிமிடம் அடுத்த 10 நிமிடத்தில் அடுத்த 6 பேர் இப்படி மாறி மாறி அமர்ந்து எங்களை வெப்பப் படுத்தி கொண்டோம். இப்படி ஒரு ஒரு மணிநேரம் திடீரென அய்யோ என்றார் அமைப்பாளர்.!

என்னங்க என்றோம் வண்டியை ஆன் செய்து ஹீட்டர் உபயோகித்ததால் பெட்ரோல் அளவு குறைந்திருந்தது இங்கிருந்து அடுத்த பெட்ரோல் பங்க் போக 35 கி.மீ தூரம் அவர் சுமார் 100 கி.மீ பயணிக்க வேண்டும்.. இப்போது இருக்கும் பெட்ரோல் அதிகபட்சம் 40 கி.மீ தான் வரும் ஆகவே..

வண்டியை அணைத்து விட்டு மீண்டும் குளிர் குகைக்கு திரும்பினோம். மணி 2 இனி அடுத்த ஒரு மணிநேரம் மீண்டும் குளிர் அரக்கனின் பிடி இறுகியது.. அப்போது தான் ஒரு யோசனை வந்தது பீட்ஸா அட்டைப்பெட்டிகள் காரில் இருந்தது ரயில் நிலைய குப்பைக்கூடையிலும் நிறைய காகிதங்கள்..!

ஆளுக்கு ஒரு கை அள்ளி ரயில் நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து கொட்டி தீமூட்டினோம்... பற்றாக்குறைக்கு எங்கள் பெட்டியில் எங்களது அழுக்கு ஆடைகளும் அங்கு போடப்பட்டன.. அந்நிய துணிகளை எரித்தது அன்றைய சுதந்திர போராட்டம் சொந்தத் துணிகளையே எரித்தது..எங்கள் தந்திர போராட்டம்.. 

10 நிமிடம் கூட இருக்காது விரைந்து வந்து நின்றது ஒரு கார்.. இறங்கியவர் அந்த ஸ்டேஷன் அதிகாரி.. இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்றவர் தீயை அணைக்கச்சொன்னார் உள்ளே எங்களை அழைத்து போய் அவரது அறையைத் திறந்து ஹீட்டரை ஆன் செய்தார்.10 நிமிடத்தில் இன்னும் 4 ரெயில்வே பணியாளர்கள் வந்தார்கள்.. அவர்கள் டூட்டி நேரம் காலை 3 மணிக்கு தானாம்

ஆனால் அதுவரை நிலைய பாதுகாப்பில் இரண்டு செக்யூரிட்டிகள் அங்கு இருக்கவேண்டும்..அவர்கள் எங்கே? ஏன் பயணிகளை இப்படி நடுங்க விட்டீர்கள் என சத்தம் போட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.இரு செக்யூரிட்டிகளில் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவானதாகவும் மற்றவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் தான் யாருமே இல்லை என்பதும் தெரிய வந்தது.. 

அவ்வளவு பெரிய ஸ்டேஷனுக்கு மொத்தமே 6 பேர் தான் பணியாளர்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம். இப்போது மணி 2:45 ரெயில் 20 நிமிட தாமதம் என்றார்கள் கடும் பனிப் பொழிவு காரணமாக என்றார்கள்.. ஒரு வழியாக ரயிலில் ஏறியதும் தான் குளிர் அடங்கியது.. 3 மணிநேர பயணத்திற்கு பின் கோபன்ஹேகன் விமானநிலையத்திற்கு உள்ளேயே டிரெயினில் இருந்து இறங்கினோம்.

லட்சகணக்கான வெண் இறகுகள் பறப்பது போல பனி பெய்து கொண்டிருந்தது ஏதோ தேவர்கள் பூமாரி பொழிந்தது என்பார்களே அது போல் விமானமும் 3 மணிநேர தாமதம் என்றார்கள் ஆனால் கதகதப்பான அந்த அழகிய விமான நிலையத்தின் எழிலில் குளிரை மறந்தோம்.

விமானம் தாமதமானதால் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு.. டென்மார்க்கின் பாலினால் தயாரிக்கப்பட்ட பல வகை உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.. செமி ஸ்லீப்பர் இருக்கைகள் கொண்ட லாஞ் தந்தார்கள் நன்கு தூங்கினோம். டென்மார்க்கிற்கு கனவில் 100 மார்க் போட்டேன்.


இங்கு என் உள்ளே " வெளியே" புகைப்படங்கள்.

No comments:

Post a Comment