Friday 28 August 2015

கபாலி.

#கபாலி_திரைக்கதை

கபாலி வடசென்னையில் ஒரு தாதா, மீனவ நண்பன்.. தன் தேவைக்கு மேலே பிடிக்கின்ற மீன்களை ஏழைகளுக்கு கொடுத்துவிடுவான் ஆனால் அவர்களின் ஏழ்மையை இதுவரை அவன் ஒழித்ததே இல்லை. இதற்காக யாரும் அவனைத் தவறாக எண்ணவேண்டாம் ஏனெனில் அவன் மீது குற்றமில்லை ஸ்க்ரீன் ப்ளேவே அப்படித்தான் எந்த டைரக்டரும் அப்படி சிந்திக்கவில்லை.

கடல் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மலேசிய நாட்டு மாணவி ராதிகா அந்த குப்பத்துக்கு வருகிறாள்.. அவளுக்கு உதவுகிறான் கபாலி.. அவள் தங்கியிருப்பது கபாலிக்கு சொந்தமான ஒரு வீட்டில் தான்.. ஒருமுறை ராதிகா வீட்டுக்கு வரும் கபாலிக்கு அவள் ஒரு குட்டி மேசை மீது வைத்து உணவு பரிமாறுகிறாள்.. அந்த மேசை தான் டேபிள்மேட்.

அதன் அழகில் மயங்குகிறான் கபாலி.. அதில் 18 வகையான பயன்பாடுகள் இருப்பது பற்றி தெரிந்ததும் இன்னும் ஆவலாகிறான்.. அதற்குள் அந்த குப்பம் முழுக்க அந்த டேபிள்மேட் பற்றி தகவல் பரவ "அந்த ஏரியாவுல இருக்கு இந்த ஏரியாவுல இருக்கு மேலத்தெருவுல இருக்கு கீழத்தெருவுல இருக்கு ஆனா நம்ம குப்பத்துல இருக்கா"ன்னு மக்கள் ஏங்குகிறார்கள்.

அப்போதே அந்த ஏழைகளுக்கு வீட்டுக்கு ஒரு டேபிள்மேட் வாங்கித்தர முடிவு செய்கிறான் கபாலி.. அதற்கு இங்கு வேலை பார்த்தால் ஆகாது என மலேசியா செல்ல முடிவெடுக்கிறான். ராதிகாவின் துணையுடன் மலேசியா வருபவன் அங்கு மலேசிய டேபிள்மேட் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்கிறான்.. அவனுக்கும் 50805080 என்ற எண் வழங்கப்படுகிறது.

தினசரி அந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுப்பவர்களை கண்டுபிடித்து வீடு தேடிப்போய் அடித்து உதைத்து டேபிள் மேட் வாங்க வைக்கவேண்டும் இதுதான் கபாலியின் வேலை.. ஏற்கனவே குப்பத்துராஜா,காளி, பில்லா, ரங்கா, தீ, போக்கிரிராஜா, நல்லவனுக்கு நல்லவன், பாட்ஷா, என பல அடிதடி அனுபவங்களில் வல்லவனான கபாலி தூள் கிளப்புகிறான்.

மலேசியாவே அவனைக்கண்டு நடுங்குகிறது அவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டேபிள் மேட்டாக வாங்கி குப்பத்துக்கு அனுப்புகிறான் குப்பத்து மக்கள் அனைவரும் பழைய சோறை அதில் வைத்து சாப்பிட்டு ஆனந்தமாக வாழ்கிறார்கள்.. அவ்வப்போது டொக்..டொக்.. என அதில் தாளமிட்டு தங்கள் மகிழ்ச்சியை குப்பத்தில் எதிரொலித்து வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் கடல் ஆராய்ச்சிக்கு போன ராதிகாவை ஒரு பாம்பு மீன் கடித்துவிடுகிறது இதனால் ராதிகா உடல்நிலை பாதிப்படைந்து நோய் வாய்ப்படுகிறாள் அவளது தலைமுடி உதிரத் தொடங்குகிறது இதற்கு தென்அமெரிக்காவின் வடக்கில் தென்கிழக்கே வடகிழக்கு நோக்கி அமைந்துள்ள தென்மேற்கு என்னும் நிறுவனத்தில் மருந்து உள்ளது அந்த மருந்து வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என நாலா திசைகளிலும் பிரபலம்.

அந்த மருந்தின் பெயர் அர்மைவாட்டின் என அறிகிறான் அவர்களும் கபாலி வேலை பார்க்கும் கம்பெனி போல 50905090 என ஒரு நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லுகிறார்கள். கபாலி மிஸ்டுகால் தர அங்கிருந்து ஒரு பயங்கர அடியாள் கும்பல் கபாலியைத் தேடி வருகிறது அவர்களும் கபாலி போல மிஸ்டுகால் கொடுப்பவர்களை வதைக்கும் கும்பல் தான்.

ஆனால் கபாலி அடி உதை தான் தருவான் இவர்கள் ஆளையே க்ளோஸ் செய்யும் அநியாயக்காரர்கள் என்பது தெரிந்து வெகுண்டு எழுந்து பீட்டர் ஹெய்ன் இல்லாமலேயே சண்டைக்கு தயாராகிறான்.. சண்டை முடிந்ததும் கபாலி ஏமாந்த நேரத்தில் ராதிகாவை கடத்திப் போகிறது வில்லன் க்ரூப்.. ஆவேசமான கபாலி அமெரிக்க கைக்கூலியான அந்த நிறுவனத்துடன் 

மோத சபதமேற்கிறான். கபாலி சபதத்தில் வென்றானா, ராதிகா உயிர் பிழைத்தாளா, அவளுக்கு மயிர் மீண்டும் வளர்ந்ததா, கபாலி கடைசியில் இருக்கப்போவது குப்பமா, மலேசியாவா அல்லது வழக்கம் போல் இமயமலையா இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல விரைந்து வருகிறான் கபாலி.. மீதியை வெண்திரையில் (அழுக்காயிருந்தாலும்) காண்க..

#மிஸ்பண்ணிடாதிக_அப்புறம்வருத்தப்படுவீக

No comments:

Post a Comment