Sunday 9 August 2015

தினமணிக்கதிர்.

#வாசிப்பு

என் அப்பா பக்கா தி.மு.க காரர் காலையில் முரசொலியும் தினகரனும் படிக்காவிட்டால் அவருக்கு பொழுது போகாது... அன்றைக்கு அந்த பேப்பர்கள் வாங்கும் காசிருந்தால் 2 பன்னும் 1 பார்சல் டீயும் வாங்கி குடும்பமே குடித்து பசியாற முடியும்... முதல் நாள் இரவு பட்டினியுடன் படுத்த எங்களுக்கு அடுத்த நாள் காலை உணவாக அதைக் கொடுக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பளித்ததில்லை எங்கள் மிஸ்டர் தகப்பன்..

இந்த நாளிதழ்களை நானும் வாசிப்பேன்.. கழகச் செய்திகளும் சாதாரணச் செய்திகளும் என்னைக் கவரவில்லை.. நேர் எதிர் வீடு கணபதி சித்தப்பா வீடு அவர் காங்கிரஸ் காரர்.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பத்திரிக்கை இல்லை என்பதாலும் திமுக போல் கட்சி பத்திரிக்கை இல்லை என்பதாலும் அவர் நடுநிலையாக தினமணி வாங்குவார்..

ஒருநாள் சித்தப்பா வீடு வெள்ளையடிக்கப்பட்ட போது சித்தப்பா பெண் தங்கை உலகம்மாள் என் உடன்பிறந்த தங்கை உமா (முகநூலில் உமா மகி) ஆகிய மூவரும் சுத்தப்படுத்தினோம் அப்போது பொக்கிஷமாக கிடைத்தது தான் தினமணிக் கதிர் வார புத்தகங்கள்.. மொத்தமாக ஒரு 35 புத்தகங்கள் இருக்கும்.. அதை எடைக்கு போடாது சித்தப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி பெற்றுக் கொண்டது இன்றும் நினைவில் உள்ளது.

இதற்கு எனக்காக வாதாடி உதவிய தங்கைகள் உலகம்மாளுக்கும் உமாவிற்கும் பல நன்றிகள்.. முரசொலி தினகரன் போன்ற கட்சிசார்பு பத்திரிக்கைகள் படித்த எனக்கு தினமணிக் கதிரின் வாசிப்பானுபவம் புதுமையாக இருந்தது..! அந்த 35 புத்தகங்களைபடித்த பின் நான் தீவிர தினமணிக் கதிர் வாசகனாகிப் போனேன்.

அதன் பின் வாராவாரம் என் ஞாயிறு சித்தப்பா படித்துவிட்டு விட்டெறியும் தினமணிக்கதிருக்காக காத்திருப்பேன்.. ஞாயிறு எனக்கு அது படித்தால் தான் விடியும்..சில நேரங்களில் விரைவாகவும் பல நேரங்களில் தாமதமாகவும் அந்த பத்திரிக்கை கைவசப்படும். 

ரகமி எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய தொடர்கள்.. ராண்டார் கை எழுதிய புகழ்மிக்க மனிதர்கள் பற்றிய தொடர்கள்.. சுசி கணேசன் எழுதிய வாக்கப்பட்ட பூமி தொடர் என் ஆசான் சுஜாதா கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதிய நிலா நிழல் தொடர்.. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்து பிரெஞ்சு கலாச்சாரமிக்க தொடரான...

பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படும் தொடர் என நான் மூழ்கி குளித்த முத்துக்கள் ஏராளம்.என்னை வேறு விதமான வாசிப்பு தளத்திற்கு அழைத்துப் போனது அந்த தினமணிக்கதிர் தான்.. அதன்மூலமாகவே என் ஆசான் சுஜாதாவையும் பிரபஞ்சனையும் அறிமுகப்படுத்தியது தினமணி. இதற்கு நடுவே அசோகமித்திரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், கதைகளும் வந்தன.

என்னைப் போன்ற சராசரி வாசிப்பனுக்கு தினமணி விருந்து படைத்தது 2 மணி நேரம் அந்தப் பத்திரிக்கை கை வர காத்திருந்தாலும் அத்துணை விஷயங்களும் மிகப் பெரிய அறிவு.. அதிலும் ராண்டார்கை எழுதிய எல்லா தொடர்களுக்கும் நான் அடிமை.. சுஜாதாவின் விஸ்வரூபத்தை கண்டதும் இங்கே தான்... ரகமியின் தொடர்களும் விறுவிறுப்பானது. 

இதன்பிறகே என் வாசிப்பனுபவம் பண்பட்டது.. தேடித் தேடி பல விஷயங்களைப் படிக்க தினமணிக் கதிர் தான் காரணம் என்பதை நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன் இதில் எந்த சுயநலமோ துதியோ இல்லை.. 

பிரபஞ்சனின் ஆனந்தரங்கப்பிள்ளையும், சுஜாதாவின் முகுந்தனும்,  ரகமியின் தியாகராஜ பாகவதர் & கலைவாணரும் ராண்டார்கையின் செண்பகராமன் பிள்ளையும் ஹிட்லரும் எம்டன் கப்பலும்... சுசிகணேசனின் கிராமங்களின் வாழ்க்கையும் என்றென்றும் என்னைத் தாலாட்டும்.

No comments:

Post a Comment