Tuesday 4 August 2015

ஆடி வந்த நட்பு...

#உண்மையான_நட்பு_தினம்

சென்னையின் பல பகுதிகளில் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா கூழ் ஊற்றி கொண்டாட்டம்.. என் வீட்டிற்கு பக்கத்திலும் காலை ஐந்து மணிக்கே L.R.ஈஸ்வரி என்னை எழுப்பிவிட்டார் அங்காளம்மா எங்கள் செங்காளம்மா.. சிவப்பு சேலை கட்டிகிட்டு.. வேப்பிலைய எடுத்துகிட்டு... செல்லாத்தா எங்க மாரியாத்தா.. வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்.. கண்ணபுரம் நாயகியே மாரியம்மா.. என அவரது ட்ரேட் மார்க் அம்மன் பாடல்கள் ஹைடெசிபலில் ஒலிக்க துவங்கி சிங்கம் 2 சூர்யாவை வெட்கி தலை குனிய வைத்தது.

என் தூக்கம் என் உரிமை என்ற கோஷத்தை இளைய திலகம் பிரபு பாணியில் செயல்படுத்த தனி ஒருவனாக எந்த PGM மியூசிக்கும் இல்லாமல் ஹீரோ போல வெ"குண்டு"(நானே) கிளம்பினேன்.. PGM ஒலித்திருந்தாலும் இந்த சவுண்டில் கேட்டிருக்காது என்பது வேறு விஷயம்... அடுத்த தெரு தான் 3 நிமிட நடை சின்ன பையன் ஒருவனிடம் விழா கமிட்டி பொறுப்பாளர்களை பார்க்க வேண்டுமென்றேன் அவன் வாங்க என ஜிம்னாஸ்டிக்ஸ் போல வளைந்து நெளிந்து கூட்டி போனான்.

சத்யமாக பாம்பு கூட அப்படி வளைந்து போகாது... ஒரு வழியாக பந்தல் ஒன்றிற்கு கூட்டி போனவன் இதான்பா என்று சொல்லி மறைந்து விட்டான்..உன் நான் சற்று ஆசுவாச படுத்திக் கொண்டு அந்த பந்தலை பார்த்தேன் ஒரு பக்கம் கூழ் காய்ச்சி கொண்டிருந்தனர் மறுபக்கம் மஞ்சள் வேட்டி கையில் காப்பு துணி கட்டி கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர் அவர்களை அணுகி பொறுப்பாளர் யார் என்ற போது பக்கத்து வீட்டை காட்டி அண்ணா உன்ன தேடிணா என L.R.ஈஸ்வரியை விட அதிக டெசிபலில் அழைத்தனர்.. உள்ளிருந்து வந்..... இது... இது... இவரா அது..!

ஏராளமான படங்களில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரோடு மோதும் ஸ்டண்ட் நடிகர் அவர்..! என்னப்பா என்று அவர் கேட்டதே ஒரு குத்து விட்டது போல இருந்தது.. வந்த போராட்டம் மறந்து .. சார் நான் புதுசா குடி வந்துருக்கேன் அறிமுகபடுத்திக்க வந்தேன் ஹி.. ஹி.. என்று வழிந்து திரும்பினேன்.. தம்பி.. ஒரு நிமிஷம் என்றவர் ஏரியாக்கு புதுசா வீடு எங்க என கேக்க.. நான் சொன்னேன் உடனே மற்ற ஆட்களை பார்த்து கண்ணால் ஏதோ கேக்க ஆமாண்ணா நம்ம ஏரியாவுக்குள்ள தான் வருது என அவர்கள் பதிலளிக்க.. தம்பி கோவில் வரி ₹500/- கட்டி ரசீது வாங்கிக்கங்க என்று கட்டளை இட்டார்.

வந்ததற்கு அதை அழுது வரும் வழியில் மெடிக்கலில் பஞ்சு வாங்கி கொண்டு வீடு திரும்பினேன்... மாலை வரை L.R.ஈஸ்வரி ஓயவில்லை... அந்த பஞ்சையும் பஞ்சராக்கி பாடல் காதுக்குள் ஒலித்தது வெறுப்பாக இருந்தது திடீரென்று மாலை பாடல் நின்று விட்டது.! மின் தடையா?! இல்லையே வெளியில் வந்து காதில் பஞ்சை எடுத்தேன் ஆஹா ஆனந்தம் சாலையில் வாகனம் செல்லும் ஓசை தூரத்தில் மசூதி பாங்கு ஓதும் ஓசை இவை எல்லாம் இன்பமாக காதில் ஒலித்தன.

மெல்ல நடந்து விழா நடக்கும் இடத்திற்கு போனேன் மைக்செட் ஆபரேட்டரே இருந்தார் அவரிடமே கேட்டேன் ஏன்பா பாட்ட நிறுத்திட்ட... அவர் சொன்னார்.. அட இன்னாபா நீ மசூதில பாங்கு ஓதுற சவுண்டு கேக்கல உனக்கு அத்த டிஸ்டப் பண்ண வோணான்னு தான் பாட்டை நிறுத்திக்கிறேன் என்றார்.

ஆஹா... இதுவல்லவோ "மத நல்லிணக்கம்" இது தாண்டா உண்மையான ஃப்ரெண்டஷிப் டே.. இப்போது வீடு திரும்பினேன் மன நிறைவாக இருந்தது.

No comments:

Post a Comment