Friday, 7 February 2025

🦌 #வெங்கடேசன்_வெனிஸன் 🦌


வெனிஸன் என்றால் மான் இறைச்சி! ஆட்டிறைச்சியை  மட்டன், மாட்டிறைச்சியை  பீஃப் என்பது போல! எங்கள் அமெரிக்கப் பயணத்தில் டெக்ஸாஸில் நிறைய இடங்களில் நம்ம ஊரில் டிபன் ரெடின்னு போர்டுகள் உள்ளது போல் மான் இறைச்சி கிடைக்கும் என்ற போர்டுகளை பார்க்க நேர்ந்தது! என் பார்வை போன திசை பார்த்து என் ஆசையை அறிந்துகொண்டார் நண்பர் சுந்தர்! 


என்னா வெங்கி இன்று மான் கறி வாங்கி சமைச்சுடலாமா என்றார்! மிகச் சரியாக அப்போது காரில் இருந்த ஆடியோ சிஸ்டத்தில் இருந்து ஓ மானே மானே என்று SPBயும் கூப்பிட நண்பரிடம் ஓகே க’மான் என்றேன்! நம்ம ஊரில் மீன் மார்க்கெட் போல அங்கே மான் மார்க்கெட்டே இருந்தது! ஆம் மான்கறியில் ஏராளமான வகைகள்! மானின் படம் வரைந்து அதன் பாகங்களை குறித்து அவற்றை..


பார்ட் பார்ட்டாக கழட்டி வைத்திருந்தனர்! மார்க்கெட் உள்ளே நுழைந்தால் எங்கும் மானின் படம் வரைந்து பாகங்களை குறிக்கும் போஸ்டர்களே தென்பட்டன! பன்றியோடு சேர்ந்த கன்றையும் அங்கு கண்டேன்! ஆம் அங்கே ஆடு, மாடு, பன்றி என எல்லா இறைச்சிகளும் இருந்தன! மான்கறி விற்கும் இடத்தில் ஒரு பெண் மான் ஒருத்தி நின்று தன் மீன் விழியால் என்ன வேண்டும் என்றாள்!


அப்பெண்மான் அப்படி விழியால் கேட்ட அழகிற்கே அம்மானைப் பற்றி ஒரு அம்மானை பாடவேண்டும் போலத் தோன்றியது! (என்ன வாலி ரேஞ்சுக்கு எதுகையா) மான் பாகங்கள் குறித்த படத்தைப் பார்த்து இதில் எந்தப் பகுதி சுவையாக இருக்கும் என்றதற்கு கழுத்து, மற்றும் முதுகு என்றாள் அப்பொன்மான்! அற்புதமான பேக்கிங்கில் அந்த இறைச்சிகளை வாங்கிக் கொண்டு பில்..


செலுத்த வரும் இடத்தில் எங்கு சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறுகளைச் சொல்லும் அமெரிக்க சாஸ்திரலுபடி மான் இறைச்சி பற்றிய குறிப்புகளை பிரவுஷர்களாக வைத்திருந்தனர்! அதை எடுத்துக்கொண்டு மான் பெண்ணிடம் விழிகளால் விடை பெற்றுக் கொண்டு புள்ளி மான் போலத் துள்ளி குதித்து காரில் ஏறினோம்! வீடு திரும்ப 1 மணி நேர கார்ப் பயணம் இருந்தது!


மான் இறைச்சியைப் பற்றிய பிரவுஷரில் என்ன எழுதியிருக்குன்னு படித்தால் பல சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன! இங்கு பிரதான மான் வகைகள் இரண்டு, வெள்ளை வால் மான், கறுப்பு வால் மான்! எல்க், மூஸ், கரிபூ, கழுதை மான் இந்த ஆறு வகைகள் தான் இங்கு வாழும் மானினங்கள்! இதிலிருந்தே பல்வேறு வகை இனங்கள் தோன்றியுள்ளன! இதில் இருந்த இன்னொரு சுவாரஸ்யத் தகவல்! 


மான்களுக்கு கொம்பில் தான் அதன் வாழ்க்கையே! ஆண் மான்கள் ஜனவரியில் தங்கள் கொம்பை இழந்து ஜுன் மாதத்திற்குள் முழுக் கொம்பையும் பெறுகின்றன! பிறகு இந்த கொம்பின் மேல் தோல் வளர்கிறது! அதை வெல்வெட் என்கிறார்கள்! இந்த வெல்வெட் கொம்பின் வளர்ச்சியை தடுத்து மான்களுக்கு அசவுகரியத்தை தரும்! இது தானாகவே உதிரும் என்றாலும் மான்கள் அடிக்கடி..


மரங்கள் பாறைகளில் கொம்பை தேய்த்து இந்த வெல்வெட்டை உதிர்க்கும்! சில நேரம் “எங்கிட்ட சண்டைக்கு வர்றியா” நீ எல்லாம் எனக்கு சிப்சுன்னு இன்னொரு ஆண் மானிடம் போயி மோதும் இந்த பக்ஸு! ஆம் அமெரிக்கர்கள் இதை செல்லமாக பக்ஸ் என்று அழைக்கின்றனர்! கொம்பில் இருந்து வெல்வெட் முழுதும் உதிர்ந்த பின்பே மான் இனவிருத்திக்கு தயாராகும்! 


இந்த மான்களை வேட்டையாட மாநிலத்துக்கு மாநிலம் பல சட்டங்கள் உண்டு! துப்பாக்கியால் சுடுவது! கண்ணி வைப்பது, தூண்டில் வைப்பது, பின் தொடர்ந்து/மறைந்திருந்து சுடுவது என பல்வேறு வகைகள் உள்ளன! வில் அம்பு உபயோகிக்க பல ஊர்களில் அனுமதியில்லை! சோளம், முள்ளங்கி, டர்னிப் போன்ற மான்களின் விருப்ப உணவுகளை மான் வரும் வழித்தடங்களில்..


போட்டு அதை குறிப்பிட்ட இடத்துக்கு திசை மாற்றி வரச்செய்து பிடிப்பதும் உண்டு! வயது முதிர்ந்த வெள்ளை வால் மான்களை கொல்வது மிகவும் சிரமம்! அமெரிக்க நண்பர்களைக் கேளுங்கள் சாலையில் உங்கள் காரின் முன் மான் பாய்ந்துவிட்டால் அவ்வளவு தான் காரின் விண்ட்ஷீல்ட் முதல் பேனட் வரை யானை மோதியது போல சேதமாகும்! இந்த மான்கள் அத்தனை வலுவானவை!


மான் வேட்டைக்கான காலம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்! இங்கிலாந்து/அயர்லாந்தில் மோப்ப நாய்களுடன் சென்று வேட்டையாடுவார்கள்! இங்கு அவ்வழக்கம் இல்லை! வீடு வந்தாச்சு அடுத்த 30 நிமிடத்தில் நெய்சோறு, அவித்த முட்டை, மான் கழுத்து கறிக் குழம்பு, க்ரில்களில் சுழன்று வெந்த மான் முதுகு, சப்பாத்தி என்று டைனிங் டேபிளை நிரப்பியிருந்தார் நண்பர் சுந்தர்! 


தட்டில் பிராந்திக் கலரில் நெய் மிதக்கும் கழுத்துக்கறி குழம்பு உற்ற சுடச்சுட பஞ்சு போன்ற சப்பாத்தியை ஒரு விள்ளல் எடுத்து குழம்பில் தோய்த்து ஒரு பெரிய கறி துண்டோடு சாப்பிட ஆஹா! என்ன ஒரு அற்புதம்! க்ரில் மான் முதுகு மசாலா மற்றொரு சேம் அற்புதம்! நெய் சோறும் க்ளாஸிக்! அன்றைய தினம் இந்த மானை ருசிக்கவே இந்த மானிடப் பிறவி எடுத்தது போல உணர்ந்தேன்! 


🦌 ஏவ்வ்வ்வ்வ் 🦌




No comments:

Post a Comment