Monday 2 June 2014

கலைஞருக்கு...

உயிர்மெய் எழுத்தின் முதல் எழுத்து க"என்பது தமிழுக்கு பெருமை

கழகத்தின் உயிர் மெய் நீ என்பது உலகறிந்த உண்மை..! தலை

வெற்றியை குளித்தலை"யில் கண்ட தலைவன் நீ.. பல போராட்டங்களுக்கு 

தலை" தந்து வெற்றி தந்தவன் நீ..! பெரியார் பல்கலைக்கழகம் வரும் 

முன்பே பல்கலையும் அங்கு கற்ற கழகம் நீ.. அண்ணாவின் உடன் பிறவா 

தம்பி நீ... உடன் பிறப்பே என்று நீ அழைக்கும் ஒரு மந்திரச் சொல்லே 

உலகத்தின் உற்சாக பானம் என்பார்.. அந்த உறவு முறை சொல்லிலேயே

இரும்புக்கம்பியையும் வளைத்திடும் வல்லவன் நீ.. உன் பேனா தலை குனிந்த

போதெல்லாம் தமிழ் தலை நிமிர்ந்திருக்கிறது.. கர கர குரலில் உன் பேச்சு

கரகரப்ரியா ராகம் கேட்ட இசைப் பிரியனாய் தொண்டர்களை ஆக்கியிருக்கிறது..

சோதனைகளை கண்டு சோர்ந்ததில்லை சாதனை செய்ததும் ஆர்ப்பரித்ததில்லை

ஃபினிக்ஸ் என்ற பறவையினம் இல்லாதிருந்தால் அழிவிலிருந்து எழுச்சிக்கு 

உன்னை தான் உலகம் உதாரணம் காட்டியிருக்கும்.. சேற்றை வாரி இறைத்தாலும்

சந்தனம் பூசினாலும் ஒரே இன்முகம் காட்ட உன்னால் தான் முடியும்.. இருபதாம் 

நூற்றாண்டிலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்திய அரசியல் வரலாறு

உன் பேர் இல்லாது எழுதப் பட்டிருக்காது.. முதுமையிலும் உழைப்பு, நக்கல் 

நையாண்டி, சிலேடை என நீ என்றும் இளைஞனாகவே இருக்கிறாய்.. உலகிலேயே

ஓய்வுக்கு ஓய்வளித்தவன் நீ தான் என்பதை எந்த ஆய்வும் இன்றி சொல்லலாம்...

பழித்தாலும், துதித்தாலும், பதவி இருந்தாலும், போனாலும் செய்திகளின் நாயகன் நீ.!

உன் அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் அளப்பரிய ஆற்றல் பெற்றவன் நீ.. 

துயர் எனும் இருள் சூழும் போது இரவு வந்தால் தானே பகல் வரும் என்று எதையும்

சாதாரணமாக கடக்கும் சூரன் நீ.. கழகத்தின் சூரியன் நீ.. சில அரசியல் காரணங்களுக்கு

நீ விமர்சிக்கப்பட்டாலும் தமிழகம் விமரிசையாக கொண்டாடும் தலைவர்களுள் ஒருவன் நீ.!

தள்ளாத வயதில் நினைவுகள் தவறுமாம்.. உனக்கு மட்டும் இது பொருந்தாது... 

எல்லோருக்கும் மெமரி மைனஸ்... ஆனால் உனக்கு அது மெமரி ப்ளஸ்

அகவை 91 என்பது உலகுக்கு ஆனால் உனக்கு அது 19.. எத்துணை சிக்கல் என்றாலும் 

கதிரவனுக்கு முன் கரையும் பனித் துளியாய் அதை கரைத்துவிடும் சக்தி பெற்றவன் நீ

ஆற்றல் மிக்க இளைஞனே.. கழகத்தின் தலைவனே.. கலைஞர் எனும் ஒருவனே... 

கலைஞர் என்றால் கழகம்... கழகம் என்றால் கலைஞர் இதைத் தவிர வேறென்ன..!

முத்தமிழே உனை வந்து வாழ்த்தும் போது... என் வாழ்த்து அதற்கு ஈடாகுமா..!

பறக்கும் விமானத்தை கீழிருந்து பார்ப்பது போல இங்கிருந்தே பார்த்து வியக்கிறேன் ..!



1 comment:

  1. அருமை....அருமை......

    முத்துவேலர் மைந்தருக்கு
    முத்தமிழறிஞர் கலைஞருக்கு
    முத்தான சொல்லெடுத்து கோர்த்து
    முத்து(பா)மாலையாக்கி கொடுத்துவிட்டீர்கள்

    ReplyDelete