Wednesday 4 June 2014

ஒரு துளி காதல்.

உன் தோளில் வந்தமர்ந்தது ஒரு

முட்டாள் வண்ணத்துப் பூச்சி தேன் 

உன் இதழிலல்லவா இருக்கிறது..!


நீ வெட்கப்பட்டாய்

பூக்களுக்கு 

பாடம் புரிந்தது..!


பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும்

உன்னை ஏன் கைது செய்யக் கூடாது.

அந்தக் கண்கள்..!


உன் பல்லிடுக்கில் மாட்டிக் 

கொண்ட என் மீசை முடி

மோட்சத்திற்கு போனது.


உன் முகத்தில் பரு

ரோஜாவில் முள்.!


இரு கைகளில் காபி கோப்பையைப் பிடித்து

அருந்தும் போதெல்லாம் உன்னை முத்தமிட்டது

நினைவுக்கு வருகிறது..!


சிறுவயதில் தட்டாம்பூச்சி வாலில் 

நூல் கட்டி துன்புறுத்தியவனை 

இறந்து கிடக்கும் பட்டாம்பூச்சிக்கு

அழ வைத்துவிடுகிறது காதல்.


நீ இருக்கும் போது எனக்கு புரையேறினால்

உன் கண்ணில் கோபம் தெரிவது ஏன்.?


நான் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு

உதடு பிதுக்கி இல்லை என்கிறாய்

இந்த அழகுக்காகவே இது போல 

நிறைய கேள்விகள தயார் செய்ய வேண்டும்..


உன் கொலுசில் இருந்து ஒரு முத்து 

உதிர்ந்து விட்டது என்கிறாய்..தவறு

அது இறந்து விட்டது..!


சோப்பு நுரை குமிழிகளை ஊதி விளையாடுகிறாய்

உன் உதட்டருகே ஒவ்வொரு முறை வரும் போதும்

அந்த வட்டக்கம்பி சொர்க்கத்தை தரிசிக்கிறது..!


அலைபேசியில் நீ அழைத்தால் உன் எண்ணுக்கு

என்ன பெயர் கொடுக்கலாம்.. ரோஜா, தென்றல்,

செல்லம், ஹனி, குட்டிமா, புஜ்ஜி, சிந்தனை நீண்டு

கொண்டிருக்க அலைபேசி ஒலிக்கிறது.. திரையில்

உன் எண்..! எண்ணத்தில் உன் எண்களெல்லாம்

பதிந்திருக்க எப்பெயரும் வேண்டாம் என முடிவெடுத்தேன்.


சூரியன் உதித்த போது பூமியில் ஒரு

நிலா கோலமிட்டுக்கொண்டிருக்கும் 

அதிசயத்தை இன்று தான் பார்க்கிறேன்.


வானவில்

எப்போது

கருப்பானது?

அவள் புருவங்கள்!


ம்ம் என்ற சொல் உதிர்த்து சம்மதம் தெரிவித்த 

பின் வேறு எதுவும் பேசமுடியாது அவள் இதழ்கள்

என்னிதழ்களால் சிறைபிடிக்கப்பட்டது..


டிஷ் ஆன்டெனாவாக அவள் அழகை

ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது

காதோரத்து ஒற்றை ரோஜாப்பூ.


கோப்பை நிறைய தேநீர் தந்து 

உபசரிக்கிறாய்.. ததும்ப ததும்ப 

அருகில் நீயும் இருக்க... நான் 

எதைப்பருக.!?


உன் காதோரம் சுருண்டிருப்பது

குழல் அல்ல என்னை சுருட்டிய சுழல்.!


இதயத் திருட்டுக்கு 

நேச நீதிமன்றத்தின்

தண்டனை.. காதல்..!


மீன்களும் வலைவீசும் என்பதை

அவள் விழிகளை பார்த்தபின்பு

அறிந்துகொள்ளலாம்.


உன்னைக் காணவில்லை என்றேன்

உன்னைத் தான் காணவில்லை என்றாள்

இரண்டுமே சரிதான்.! நானும் நீயும் ஒன்றல்லவா.!


உன் மேலுதட்டுக்கு 

மேலே மீசையாய்

அரும்பியிருக்கும்

வியர்வை முத்துக்கள்

கோர்த்து ஒரு மாலை 

செய்து தருவாயா..!


உன்னைப் பிரிந்து வேலைக்காக வேறு ஊர் போவதை 

சொன்னவுடன் கண்ணீருடன் இழுத்தணைத்து முத்தமிட்டாய்

நான் அந்த வேலையில் சேரவே இல்லை.


ரூபாய் நோட்டைக் இதழில் கவ்விக்கொண்டு

கைப்பையில் சில்லறை தேடிக் கொண்டு

இருக்கிறாய் எனக்கு அந்த ரூபாய் மேல்

பொறாமை வருகிறது..


தொலைபேசி வழியாக குடியேறிவிட்டது

என் செவிகளுக்குள் உன் குரல்..


என்ன ஆச்சரியம்..! உன்னை புகைப்படம் 

எடுக்கும் போதெல்லாம் காமிரா சிரிக்கிறது.!



நீ கழற்றி வைத்துப்போன

காதணிகள் கதறி அழுகின்றன..!



என் உடைக்குள் புகுந்த 

எறும்பாக உறுத்துகிறது

உன் மெளனம்..!



விரைகிற பேருந்தின் சன்னலோர இருக்கை.. என் தோள் மீது 

தலை சாய்த்து சலனமின்றி உறங்குகிறாய்.... உன் நாசியின்

சூடான மூச்சுக்காற்று என் சட்டையை ஊடுருவி என் நெஞ்சில் 

சுடுகிறது..ஒரு கையால் என் ஒரு கையைச் சுற்றிக் கொண்டு நீ 

தரும் அழுத்தத்திலேயே... நான் உன்னிடம் பாதுகாப்பாய் 

இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகிறாய்... சன்னல் 

காற்றில் கூந்தல் பாம்புகள் எழுந்தாடிக் கொண்டிருக்கிறது.. 

அனிச்சையாய் உன் கரம் விலகும் ஆடையை சரி செய்து 

கொண்டிருக்கிறதுமூடிக்கிடக்கும் இமையின் அழகையும் நாசி 

நூனியின் குங்குமச்சிவப்பையும்  ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. 

வெளியே மழை வரலாம் என வீசும் குளிர்க் காற்று கட்டியம் 

கூறுகிறது.. மெல்ல அரை விழி திறந்து சினேகமாய் புன்னகைத்து 

மீண்டும் உறங்குகிறாய்.. பிறிதொரு நாளில் உன்னொரு தோளில் 

நான் தூங்க நேரிட்டாலும் உன் நேசத்தை நீ உணர்த்தியது போல் 

நான் உணர்த்த முடியுமா..? தெரியவில்லை..!



No comments:

Post a Comment