Sunday 1 June 2014

பந்தி-1 மதுராந்தகம் ஹை வே இன்

#பந்திக்கு_முந்துங்க

ஒரு கோப்பை இட்லி..!  (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்.! அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக  நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான்  காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!


மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை: 

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!


மசாலாவை அம்மியில் கையால் அரைத்தால் சுவை இன்னும் அலாதி..!




2 comments:

  1. நீங்க சாப்டதை விட சுவையாக பரிமாரிட்டீங்க நண்பரே...

    அருமை,,,,

    ReplyDelete