Tuesday 24 June 2014

கண்ணதாசன் - விஸ்வநாதன்.!

இரு சிகரங்கள்..!

நட்புக்கு இலக்கணம் என்ற பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்து இருக்கும் இரு பெயர்கள் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன்.! தமிழ்த்திரையுலகின் இசை வரலாற்று ஜாம்பவான்கள் இருவருக்கும ஒரே நாளில் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு.!

இருவரும் சேர்ந்து கொடுத்த இசை ஆறு இன்னும் வற்றாது காலம் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது..! இவர்கள் இருவரும் பல பாடல்களுக்கு இசையமைத்தது, பாடல் எழுதியது எல்லாம் மிகுந்த சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டது..!

போனால் போகட்டும் போடா என்று கவிஞர் எழுதிய போது மெல்லிசை மன்னர் அது மரியாதையாக இல்லையே என்று சொல்ல அப்ப அதை நீ மரியாதையா பாடு என்று கவிஞர் சொன்னவுடன் போங்க வாங்கன்னு பாடிப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்களாம்..!

ஆனால் அந்தப்பாட்டு பாமரனையும் எளிதில் முணுமுணுக்க வைத்தது..! காரணம் அந்த போடா என்ற வார்த்தை..! அதன் பிறகு போடா பாடல்கள் பல எழுதி அவையும் வெற்றி பெற்றன. அண்ணன் என்னடா தம்பி  என்னடா பாடல் கவிஞர் சகோதரனிடம் உதவி கேட்டு தராத போது உதித்த பாடல்..!

அதே போல் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என்ற வரிகள் MSV அவர்கள் பள்ளிக்கு செல்லாது நாடக கொட்டகைக்கு வெளியே நின்று பாடல் கேட்ட பள்ளிப் பருவத்தை வைத்து எழுதப்பட்டது.! கண்ணதாசன் இக்கட்டான அரசியல் சூழலில் இருந்த போது எழுதப்பட்டது தான்  யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க பாடல்..!

இயக்குனர் ஶ்ரீதர் காதலிக்க நேரமில்லை பாடத்துக்கு ட்யூன் தாமதமானதால் மெல்லிசை மன்னரைப்பார்த்து "விஸ்வநாதன் வேலை சீக்கிரம் வேணும்ப்பா" என்று சொல்ல அங்கிருந்த கவிஞர் சட்டென்று அந்த வார்த்தையையே முதல் வரியாக்கி "விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை எழுதினாராம்..! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது..!

மலர்ந்தும் மலராத பாடலில் கவிஞரின் வரியா? மெல்லிசை மன்னரின் இசையா? எது அழகு? என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை..! அவை இரட்டைகிளவி போல் சேர்ந்தே இருந்தன.! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல் இன்னொரு ரசனையான உதாரணம்.! இந்தப் பாடலுக்கான காட்சியமைப்பு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் யோசனை..!

கம்போஸிங் செய்யும் போது கவிஞரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்து ட்யூன் போடுவதை பல முறை பார்த்த கே.பி. அவர்கள் படத்திலும் நாயகன் நாயகிக்கு அது போல சிச்சுவேஷன் வைத்துவிட கவிஞர் அதை மிகவும் ரசித்து பாராட்டி பாடல் எழுதினாராம்..! இந்த இரு இமயங்களைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது.. இது சிறுதுளி தான்..!

இந்த இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வதற்கு நாம் ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.!ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்.எஸ்.வியும் வரியாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.! இருப்பார்கள்..! 

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும் போது எங்கோ வானொலியில் இருந்து மிதந்து வந்து செவிகளுக்குள் நுழைகிறது அப்பாடல் "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்" "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்".. உண்மைதானே..!

1 comment:

  1. ///// "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்" "சந்தங்கள்

    நீயானால் சங்கீதம் நானாவேன் //////
    இசை மேதைகளின் படைப்புகளை அனுபவித்து எழுதிய உணர்ச்சிகரமான வரிகள்,

    ReplyDelete