Thursday 5 June 2014

குருஜி - ஜூன்

ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு காட்டில் நரியும் பூனையும் சந்தித்துக் கொண்டன.. நரி பூனையிடம் தன்னைப் பற்றிய பில்டப்புகளை அள்ளி விட்டது.. "பூனையே நான் மிகுந்த தந்திரசாலி பகைவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும்" அநேகமாக இதை நூலாக எழுதி அடுத்த மாதம் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.. சரி உனக்கு எத்தனை வழிகள் தெரியும் என்றது..!

பூனை அலட்டிக்கொள்ளாமல்"நரியாரே உங்களைப்போல நான் பெரிய தந்திரசாலி இல்லை.. எனக்கு ஆயிரம் வழிகள் தெரியாது.. எனக்கு தெரிந்து ஒருவழி தான் அந்த ஒரு வழியை வைத்துதான் இதுவரை பல முறை தப்பித்துள்ளேன்.. அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி எனக்கு சிறந்ததாக தெரியவில்லை"..." என்வழி - ஒரே வழி "என்று பஞ்சியது..!

அட முட்டாள் பூனையே ஒரே ஒரு வழியை வைத்துக் கொண்டு எப்படி பகைவர்களிடம் இருந்து உயிர் பிழைப்பாய்..? இந்த கேள்வியை நரி கேட்ட போது வேட்டை நாய்களின் குரைக்கும் சப்தமும் அதன் பின்னே வேடர்கள் ஓடிவரும் சத்தமும் கேட்டது.. ஆபத்தை புரிந்து கொண்ட பூனை அருகில் இருந்த மரத்திற்கு தாவி வேகமாக உச்சிக்கு சென்றது.!

ஆயிரம் வழிகள் தெரிந்த நரி எந்த வழியை உபயோகிப்பது என்று குழம்பி .. யோசனை வருவதற்குள் வேட்டை நாய்களால் சூழப்பட்டு வேடர்களிடம் பிடிபட்டது..!

நீதி : சந்தேகத்திற்குரிய நூறு வழிகளை விட பத்திரமான ஒரு வழி சிறந்தது..


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

மாலை நேரம்.! இரு வேடர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.. அதில் ஒருவன் "நாளை நாம் வேட்டைக்கு வரும் போது ஆமையை பிடிக்க வேண்டும்.. காட்டு ஆமைக்கறி சாப்பிட்டு வெகு நாளாயிற்று என என் மனைவி ஆசைப்பட்டு கேட்டாள்" என்றான்.! "ஆமாப்பா ஆமைக்கறி செமயா இருக்கும் கட்டாயம் நாம நாளை ஆமை பிடிக்கிறோம்" இது இன்னொருவன்.!

இவர்கள் பேச்சை புதருக்குள் ஒளிந்திருந்த ஆமை ஒன்று கேட்டது.. அதற்கு உயிர் பயம் ஏற்பட்டது.. நம்மால் வேகமாக ஓடவும் முடியாது.. ஒளிந்து கொண்டாலும் முதுகு ஓடு நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும்.. எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் போது நண்பன் கொக்குவின் ஞாபகம் வந்தது.. கொக்கு வசிக்கும் மரம் அருகே சென்றது ஆமை..!

மாலை நேரம் என்பதால் ஸ்னாக்ஸாக ஃபிஷ் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு அப்போது தான் கூடு திரும்பியிருந்தது கொக்கு.! ஆமையை பார்த்ததும் குட் ஈவினிங் ஆமை மச்சி ஹவ் ஆர் யூ என்றது கொக்கு.! என்னப்பா எல்லார் மாதிரி நீயும் குட் ஈவினிங் ஸ்டேட்டஸ் போடுற.. நாளைக்கு எனக்கு குட்மார்னிங்கே கிடையாது அது தெரியுமா உனக்கு என்றது ஆமை.!

என்னப்பா பிரச்சனை..? ஆமை விளக்கி கூற.. இப்ப என்ன செய்யலாம் என்றது கொக்கு.! எப்படியாவது நாளைக்கு காலையில என்னை இந்த இடத்துல இருந்து தூக்கிட்டு போய் நீங்க மீன் சாப்பிடுற குளத்துகிட்ட பாதுகாப்பா இறக்கி விடு நண்பா அது போதும் என்றது ஆமை..! அது சரி நண்பா.?உன்னை எப்படி நான் தூக்குவது அது கஷ்டமில்லையா..?

ஆமை ஒரு யோசனை சொன்னது "நண்பா நீயும் இன்னொரு கொக்கு நண்பனும்  ஒரு கனமான நீள குச்சியின் இரு முனைகளை ஆளுக்கொருவராக பிடித்துக் கொள்ளுங்கள் குச்சியின் நடுப்புறத்தை நான் கவ்விக்கொள்கிறேன்.. அப்போது என்னை தூக்கி பறந்து விடுங்கள் இருவர் சேர்ந்து என்னை தூக்குவதால் சிரமமும் இருக்காது..ஓகேவா" என்றது..!

ஓகே டன் என்று கொக்கும் ஒப்புக் கொண்டது..! மறுநாள் அதே போல ஆமை ஒரு கம்பை எடுத்து வர அதன் இரு முனைகளை இரு கொக்குகள் அலகில் கவ்விக்கொள்ள ஆமை நடுவில் கவ்விக் கொள்ள ஆமையை தூக்கி கொண்டு பறந்தன..! இந்த காட்சி வேட்டைக்கு வந்து கொண்டிருந்த அந்த வேடர்கள் கண்ணில் பட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்..!

அட இந்த பறவைகளை பாரேன்..ஒரு ஆமையையே தூக்கிப் பறக்க கற்றுக் கொண்டனவே.. ஒரு குச்சி அதை இரு புறம் பறவைகள் பிடிக்க நடுப்புறத்தை ஆமை பிடிக்க இப்படி ஒரு அறிவு.. இப்படி ஒரு யோசனை எப்படி வந்திருக்கும் புத்திசாலி கொக்குகள் தான்.! என்று வியப்பின் உச்சத்தில் உரக்க பேச இது வானத்தில் இருந்த ஆமை காதில் விழுந்தது..!

"அந்த ஐடியா என்னோடது" என்று அவசரத்தில் ஆமை வாய் திறக்க குச்சியின் பிடியை விட்டு நேராக வேடர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஓடு சிதற விழுந்து இறந்தது..!

நீதி : சாதுர்யமாக இரு.. சாதுர்யம் பேசாதே..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

உங்களுக்கு ஹடயோகம் பற்றித் தெரியுமா.? நீரின் மீது நடந்து செல்லும் சக்தி தான் ஹடயோகம் எனப்படும்.. ஒரு அயல் நாட்டுத் துறவி 20 ஆண்டுகள் கடினப் பயிற்சி எடுத்து இந்த ஹடயோகத்தை கற்றுக்கொண்டார்..! இப்போது அவரால் தரையில் நடப்பது போல சர்வ சாதாரணமாக தண்ணீரில் நடக்க முடியும்.. அவர் ஒரு முறை நம் நாட்டுக்கு வந்தார்..!

இந்தியாவில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்..! அந்த துறவி ராம கிருஷ்ணரிடம் "நான் 20 ஆண்டுகள் பாடுபட்டு ஹடயோகத்தை கற்றுக் கொண்டேன்... என் இந்த சக்தியால் இந்தியாவின் பெரிய நதியான கங்கை நதி மீது எளிதில் நடந்து போய் அக்கரையை அடைந்து விடுவேன்", என்றார் பெருமிதமாக..!

நாலணா கொடுத்தால் எந்தப் படகோட்டியும் உங்களைக் கொண்டு போய் அக்கரையில் விடுவானே..! இதற்காகவா 20 ஆண்டுகளை வீணடித்தீர்கள் என்றார் பரமஹம்சர்.. அந்தத் துறவி வெட்கி தலை குனிந்தார்..!

நீதி : உண்மையான ஞானம் இது போன்ற சக்திகளை விரும்பாது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்..

காட்டில் கொம்புள்ள கலைமான் ஒன்று இருந்தது... ஒரு நாள் அது அழகான குட்டி ஒன்றை ஈன்றது.. பிறந்த அந்த குட்டியை கண்ணும் கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக வளர்த்தது.. கொடிய மிருகங்களிடம் இருந்து அதை பாதுகாப்பது தானே சவால்..! குட்டியும் வளர்ந்தது..!

பயமறியாது துள்ளித்திரிந்த அக்குட்டிமானுக்கு தினசரி அறிவுரை சொல்லும் தாய்மான்..! சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் குணநலன்கள், அவை தாக்கும் முறை, அதில் இருந்து எப்படி ஓடி தப்புவது.. இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்தது தாய்மான்..!

ஒரு நாள் ஓநாயிடம் இருந்து தப்புவது பற்றிய பேச்சு வந்தது.. அப்போது குட்டி மான் கேட்டது.. அம்மா உனக்கு நாய் உடலை விட பெரிய உடல், அதை விட வேகமாய் ஓடுகிறாய், தலையில் நீள கொம்புகளும் உள்ளது அப்புறம் ஏன் அதைக்கண்டு பயம்.?

தாய்மான், "மகனே நீ சொல்வதெல்லாம் சரிதான்.. நான் ஓநாயை விட நீ சொன்ன அத்தனை தகுதியும் உடையவன் தான்.. ஆனால் என்ன செய்ய ஒற்றை ஓநாய் குரைத்தாலும் குலை நடுங்கி ஓடும் குணமும் இருக்கிறதே.. அது எப்படி மாறும் என்றது..!

நீதி : எந்த தகுதி இருந்தாலும் கோழைக்கு தைரியம் வராது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு அரசியல்வாதி இருந்தார்.. அசகாய சூரர் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியில் இருப்பார்..! பணம் சம்பாதிப்பது மட்டுமேஅவரது குறிக்கோள்.. எல்லா நெளிவு சுளிவுகளும் தெரிந்தவர்.. இனிக்க இனிக்க பேசுவார் உள்ளுக்குள் விஷம் இருக்கும் அது அரசியல்வாதிகளுக்கு பிரத்யேக குணம் அல்லவா..! 

ஒரு வெளிநாட்டு நிறுவனம் தொழிற்சாலை கட்ட இவர் உதவியை அணுகியது.. அவர்கள் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள்.. பெரும் தொகை கமிஷன் தருவதாக சொன்னார்கள். சிக்கல் என்னவென்றால் அவர்கள் சொன்ன இடத்தில் 5000 ஏக்கரில் 4000 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டார்கள் அதில் 1000 ஏக்கர் ஒரு பெரும் தொழிலதிபருடையது.!

அவர் அதை விலைக்கு தர மறுத்துவிட்டார்.. எனவே அரசியல்வாதியை அணுகினார்கள்..! அந்த தொழிலதிபரை அரசியல்வாதி நன்கு அறிவார்.. நான் இதை முடித்து தருகிறேன் என வெளிநாட்டு நிறுவனத்திடம் உறுதியளித்துவிட்டு தொழிலதிபரை சந்திக்க சென்றார்.. அவரும் செல்வாக்கு உடையவர் என்பதால் மிரட்டியெல்லாம் பணிய வைக்க முடியாது...!

ஆகவே, இனிதாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள முடிவுசெய்தார் அரசியல்வாதி..! தொழிலதிபரை சந்தித்தார்.. வேறு சில விஷயங்களை பேசிவிட்டு மெதுவாக விஷயத்தை சொன்னார்.. அந்த தொழிலதிபரோ இல்லை என்னால் அந்த இடத்தை தர முடியாது என்று மறுக்க.. சரி நீங்க எதிர்பார்க்காத தொகை வாங்கித்தரவா என்றார்..!

தொழிலதிபர் அதை மறுக்க.. சரி உங்கள் தொழிலுக்கு அரசியல் ரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று நமக்குள் எழுதாத ஒப்பந்தம் போடுவோம்.. உங்க தொழிலில் நானும் ஒரு பங்குதாரரா இருக்கேன் அப்ப ஓகேவா என்றார்.. தொழிலதிபர் சற்று யோசித்து.. சரி அப்ப அதை சட்டப்படி எழுதிதாங்க என்றார்..!

சட்டப்படியா ஏன் எம்மேல நம்பிக்கையில்லையா.? என அரசியல்வாதி கேட்க.. தொழிலதிபர்.. அய்யா! அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை கட்சி மாறிடுறிங்க.! நாளைக்கு ஆட்சிக்கு வர்றவங்க அந்தத் தொழிற்சாலையை மூடணும்ன்னா அப்ப அந்த கட்சிக்கு மாறிப் போன நீங்க அதுக்கு சாதகமா பேசுவிங்க உங்களை எப்படி நம்புறது.?என்றார்..!

அப்ப உங்க முடிவுதான் என்ன? அரசியல்வாதி,.. சட்டப்படி எழுதி பத்திரம் போடுங்க அப்புறம் பேசலாம் என அதிபர் கூற.. பத்திரமெல்லாம் எதுக்கு என் வாக்குல நம்பிக்கையில்லையா என்றார் அரசியல்வாதி.. குபீரென சிரித்த தொழிலதிபர் இதை வாக்குன்னு நம்ப நான் என்ன கேனையனா என்றார்..! அரசியல்வாதி தலைகுனிந்து வீடு திரும்பினார்..!

நீதி : நம்புவதற்கு முன் கட்டாயம் சோதிக்க வேண்டும்..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஹரி பூட்டு சாவிகள் விற்பனை செய்பவன்.. எல்லாவிதமான சாவிகளுக்கும் அவை தொலைந்தால் டூப்ளிகேட் சாவி செய்து தரும் சேவையும் அவனிடம் உண்டு.. ஆனால் இந்த தொழிலில் வரும் லாபத்தில் அவனுக்கு திருப்தி இல்லை.. இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.. நிறைய பணம் இருக்க வேண்டும் என்பது அவனது ஆசை..!

ரவி..பிரபலத் திருடன் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய வங்கியை கொள்ளையடித்து தப்பியவன்... கடந்த வருடம் தான் கைதானான்.. இந்த வழக்கில் பிடிபடாத நான்கு வருடங்களில் பெருந்தொகையை தான் உல்லாச வாழ்க்கைக்கு செலவிட்டதாக நீதிமன்றத்தை நம்ப வைத்தான்..! 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றான்..!

ஆனால் அவன் கொள்ளையடித்த பெரும் பணத்தை நம்பிக்கையானவர்களிடம் தந்து வைத்துள்ளான்.. ஒருநாள்... சிறைக்கு அவனை பார்க்க வந்த ஒரு உறவினர் மூலம் தான் பணம் கொடுத்து வைத்த நபர்கள் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு வேறு ஊருக்கு போகப் போகிறார்கள் என்பதை அறிந்து சிறையிலிருந்து தப்ப திட்டமிட்டான்..!

அவனை பார்க்க வந்த அதே உறவினனை திரும்பு வரவழைத்து நீ உடல்நிலை சரியில்லாதது போல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு சிறைக்கு தகவல் அனுப்பு.. நான் உன்னை பார்க்க வரும் போது தப்பிவிடுகிறேன் என்று திட்டத்தை சொன்னான்.. அதே போல் அவனும் செய்ய... ரவி நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றான்...!

அவனை கைவிலங்கிட்டு போலீஸ் அழைத்து சென்றது.. மருத்துவமனை போகும் வழியில் ரவி சந்தர்ப்பம் பார்த்து சாமர்த்தியமாக தப்பிவிட்டான்..போலீஸ் விரட்டியது.. ரவிக்கு கைவிலங்கோடு ஓடுவது கடினமாக இருந்தது.. இந்த வாய்ப்பில் மாட்டினால் இனி அவ்வளவு தான் என்ற உத்வேகம் அவனை செலுத்தியதால் புது சக்தியுடன் ஓடி மறைந்தான்..!

விரட்டி வந்த போலீசார் இவன் எங்கே போனான் என்று தெரியாது குழம்பி தலைமை நிலையத்துக்கு தகவல் அனுப்பினார்கள்.. போக்குவரத்து உஷார் படுத்தப்பட்டது.. பேருந்து ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டன.. 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் ரவியின் புகைப்படத்தோடு செய்தி வந்துகொண்டே இருந்தது..!

பூட்டுக்கடையில் அமர்ந்திருந்த ஹரியும் டிவியில் அதை பார்த்தான்.. இரவு 9 மணி கடையை மூடப்போகும் போது ஒரு நபர் வேகமாக கடைக்குள் புகுந்து கதவை மூடினார்.. அது தப்பி ஓடிய ரவி..! ஹரி பதட்டமானான் முதலில் யாரோ திருடன் என்று நினைத்தான்.. பிறகு தான் டிவியில் பார்த்த ரவியின் முகம் நினைவுக்கு வர... அவசரமாக செல்போனை எடுத்தான்.!

செல்போனை பாய்ந்து பிடிங்கினான் ரவி.! நண்பா இரு என்னை காட்டி கொடுத்தால் உனக்கு என்ன பெருசா கிடைக்கப் போகுது.? ஆனால் எனக்கு உதவி செஞ்சா உனக்கு பெரும் பணம் கிடைக்கும் என்ன சொல்கிறாய்.? என்றான் பணம் என்றவுடன் சபலப்பட்ட ஹரி என்ன உதவி.? என்றான்...!

பூட்டு சாவிக்கடைக்கு எதுக்கு வந்தேன்.. இந்த விலங்கை கழட்டு அந்த உதவி போதும் என ரவி சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் அதை கழட்டி விட்டான் ஹரி.. ரொம்ப நன்றி நண்பா நான் வர்றேன் என ரவி கிளம்ப முற்பட எனக்கு பணம் எப்ப தருவே என ஆவலுடன் கேட்டான் ஹரி..! பணமா.! உனக்கா.! எதுக்கு.? என ரவி அலட்சியமாக கேட்டான்..!

அதிர்ந்து போன ஹரி "விலங்கை கழட்டினால் தருவேன்னு நீ தானே சொன்னே..? என்றான் நண்பா நீ இந்த உதவி செஞ்சது போலீசுக்கு தெரிஞ்சா நீயும் உள்ள தான் போகணும்.. நான் இப்ப நினைச்சா கூட உன்னை கட்டிப்போட்டுட்டு இங்க இருக்குற காசை கொள்ளையடிக்க முடியும் அப்படி செய்யாததே நான் உனக்கு செஞ்ச பேருதவி.. புரியுதா..!

இதை தைரியமிருந்தா வெளிய சொல்லிப்பாரேன்..! உன்னால என்னை ஒண்ணுஞ் செய்ய முடியாது.. வரட்டுமா என்று சொல்லி கதவை திறந்து வெளியேறினான் ரவி.!

நீதி : கெட்டவனுக்கு பலனை எதிர்பார்த்து செய்யும் சேவை பலன் தராது..!

ஜென்வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ரவி கடின உழைப்பாளி.. நேரத்தை வீணடிப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..! காலை 5 மணிக்கே எழுந்துவிடுவார் டாய்லட் போகும் போதே பேப்பர் படிப்பார், ஜிம்மில் ஓடிக் கொண்டே டிவி பார்ப்பார், குளிக்கும் போதே பல் துலக்குவார், உணவு அருந்தும் போது படித்துகொண்டே ஹெட்போனில் இசை கேட்பார்.. அவருக்கு ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம்.. அத்தனையும் பணம்.. நேரத்தை யாரும் வீணடித்தால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது..வாழ்க்கையில் அப்படி ஓடிக்கொண்டிருந்தார்.!

ஒருநாள் தனது அலுவலகத்தில் தனது மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு லேப்டாபில் மும்முரமாக மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார்.. செல்போன் ஒலித்தது பிளக்கிலிருந்து சார்ஜை உருவினால் அதற்கு சில வினாடிகள் தாமதமாகுமே என்று அப்படியே அதை கழற்றாமல் பேசினார்..அப்போது திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தினால் அவரது கையிலிருந்த செல்போன் வெடித்து விட்டது ஒரு விரலும் காதும் துண்டாகி விட்டது.. அலுவலகமே பரபரப்பாகி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தது..!

அதோ..அங்கே பூங்காவில் நீண்டநேரம் அமர்ந்திருப்பது யார் தெரிகிறதா.? நம் ரவியே தான்.! இப்போதெல்லாம் பூங்காவில் வந்து அமர்கிறார்..பூக்களை ரசிக்கிறார்..தன் ஒரு காதால் பறவையின் குரல்களை கேட்கிறார்.. நேரம் பொன்னானது என்றால் மெலிதாக ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறார்.. அவ்வப்போது கேமிராவை எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்கு செல்கிறார்.. மணிக்கணக்கில் காத்திருந்து உயிரினங்களை புகைப்படம் எடுக்கிறார்.. எதையும் நிதானமாக அணுகுகிறார்..செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்கிறார்.. இப்போதெல்லாம் அவர் ஒரு வேலை செய்யும் போது இன்னொரு வேலை செய்வதே இல்லை.. வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்..!

நீதி : நேரம் பொன்னானது தான் ஆனால் வாழ்க்கை அதை விட பொன்னானது..!


நீதிக்கதை - 2

காட்டில் புதிய அரசு பதவியேற்றது.. ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என்று தேர்தல் கோஷமிட்ட சிங்கராஜா முடி சூடிக்கொண்டார்..! புலி, யானை, கரடி,சிறுத்தை போன்ற அமைச்சர் பெருமக்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்..! காட்டு நலத்திட்டங்கள் இயற்றப்பட்டன.. விலங்குகள் சொந்தத்தொழில் செய்ய அரசு உதவி உண்டு என்று அறிவிக்கப்பட்டது..!

கேரட் பண்ணை அமைக்க லோன் கேட்டது முயல், டான்ஸ் ஸ்கூலுக்கு லோன் கேட்டது மயில், கன்சல்டண்ட் ஏஜென்சிக்கு நரி லோன் கேட்க, ஹேண்டிகிராப்ட் பள்ளிக்கு தூக்கனாங்குருவியும், ஸ்போக்கன் கோர்சுக்கு கிளியும், பாட்டு கிளாசுக்கு குயிலும் லோன் கேட்க.. "எனக்கு ப்யூட்டி பார்லர் அமைக்க லோன் வேண்டும்"என சத்தமாக ஒரு குரல்..!

கேட்டது ஒரு தவளை.! "நீ எதற்கு ப்யூட்டி பார்லரை தேர்ந்தெடுத்தாய்"அமைச்சர் புலி கேட்க.."காடு முன்பு போல் தூய்மையாக இல்லை, காட்டுக்கருகே உள்ள வீடுகள், தொழிற்சாலை கழிவுகளால் பாதிப்பு, பாலிதீன் குப்பைகளால் பாதிப்பு இப்படி பல பாதிப்புகளால் வனச்சூழலே மாறி விட்டது.. வாட்டர் பொல்யூஷனும் இருக்கு..!

விலங்குகளின் தோலில் 10 விதமான ஸ்கின் பிராப்ளம் வந்து எல்லா விலங்கும் அழகிழந்து விட்டன.. அவர்களுக்கு பேஷியல் செய்து அரோமாதெரபி செய்து முகத்தை ப்ளீச் செய்து அவர்களை கொழுக் மொழுக் என ஹன்சிகா போல அழகு படுத்ததான் என்றது தவளை..!

சிங்கம்"தவளையே உன்னை நீ நன்றாக பார் நீயே அவலட்சணமாக சொறி பிடித்த தோலுடன் சொர சொரவென்று இருக்கிறாய் உன்னையே அழகுபடுத்திக் கொள்ள முடியாத நீ பிறரை எப்படி அழகு படுத்துவாய்..உன் மீது யாருக்கும் நம்பிக்கை வராது போய் உனக்கு பொருத்தமான தொழிலை தேடு.. இப்போதைக்கு உன் லோன் கேன்சல்", என்றது..!

நீதி : நம் தகுதியை யோசிக்காமல் பேசக்கூடாது..


No comments:

Post a Comment