Friday 27 June 2014

தீனா - ஜூலை

தீனா "கொரலு"

எமனை கண்டுக்கினவன் ஆரு.? பட்ச்ச மன்சங்க சொன்னத வச்சு அவுரு இப்டித்தான் இருப்பாருன்னு ஓசிச்சு வச்சேன் ஆனா இப்ப நேராவே கண்டுக்கினேன்.. அட ஆமா நைனா.! அத்து ஆருன்னு தெரிமா?ஆள கொல்லுற அம்பு கணக்கா கண்ணால லுக்கு வுட்டு நம்மளை கொல்ற பொண்ணுதான் எமன்..! உமன் தான்பா எமன்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1083 ]


தீனா "கொரலு"

உன் மூஞ்சியில இர்க்குற சிரிப்பையும்.. உன் மன்சுக்குள்ளாற இர்க்குற சந்தோஸ்த்தையும் கொல்றதுக்கு ஒரு வழி கீது! அது இன்னான்றியா!அதான் நைனா நீ ஒண்டி காண்டானேன்னு வய்யி இத்தெல்லாம் அப்டியே புட்டுக்கும்.. இந்த மேறி ஒரு கொலையை உன் கோவத்த தவிர வேற எந்த பகையுமே செய்ய மிடியாதுப்பா.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 304 ]


தீனா "கொரலு"

நம்ம மன்சு தான் நம்மளுக்கு நல்ல தோஸ்த்து.. ஒர்த்தரோட நெஞ்சே அவருக்கு ஒறவா இல்லாங்காட்டி மத்தவங்கோ ஒறவில்லாம போறது ஒண்ணியும் பெர்ய விஸ்யமே கெடியாத்து...! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நெஞ்சோடுபுலத்தல் : குறள் எண் : 1300 ]


தீனா "கொரலு"

அன்பான வழியில நட்ந்துக்கிற மன்சனோட ஒடம்பு தான் மெய்யாலுமே உசுரு இர்க்குற ஒடம்பு.. அன்புன்னா இன்னான்னே தெர்யாத ஜனத்தோட ஒடம்பு.. எலும்ப போத்திக்கினு இருக்குற தோலு தான்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புத்தோல் போர்த்த உடம்பு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அன்புடைமை : குறள் எண் : 80 ]


தீனா "கொரலு"

ஒண்ணுமே இல்லாதவன ஒரு பொருளா கூட மதிக்க முடியாதவன.. மதிக்க வக்கிறது எது தெரிமா? துட்டு தான்.. ! அந்தய துட்டு கய்ல இர்ந்தா அத்து மாதிரி மன்சனை மதிக்க வக்கிற ஒரு விஸ்யம் இந்த ஒலகத்துல வேற ஒண்ணியும் கெடியாத்து..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

[ பொருட்பால் : அதிகாரம் : பொருள் செயல்வகை : குறள் எண் : 751 ]


தீனா "கொரலு"

தமாசு இன்னான்னா.! எந்த கண்ணால பாத்து எனுக்கு காதல் வந்திச்சோ அதே கண்ணு தான் என் ஆளை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ அவுர நென்ச்சி நான் எப்படி பேஜாராவுறனோ அத்தே மேறி அதுவும் ஏங்கி ஏங்கி பொட்டுத் தூக்கம் கூட தூங்காமகீது..! இதுவும் நல்லது தான்..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : கண் விதுப்பழிதல் : குறள் எண் : 1176 ]


தீனா "கொரலு"

மன்சால ஒண்ணு சேராத மன்சங்க ரெண்டு பேரு சேந்து வாழ்ற வாழ்க்க எப்டி இர்க்கும் தெரிமா..! ஒரு சின்ன குடிச வூட்டுக்குள்ள ஒரு பாம்போட இர்ந்தது கணக்கா ஒவ்வொரு செகண்டும் பயந்துகினே பேஜாரா வாழணுமாம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : உட்பகை : குறள் எண் : 890 ]


தீனா "கொரலு"

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு.

இதுக்கு இன்னா அர்த்தம்ன்னா... குத்தமில்லாத மன்சனோட சினேகிதத்த நீ மர்ந்திடவே கூடாத்து..அத்தே நேர்த்துல நீகஸ்டத்துல இர்க்க சொல்லோ உன் கூட கில்லியா நின்னான் பாரு அவுனோட சினேகிதத்தை எப்யுமே வுட்றவே கூடாத்து..! சோக்கா கீது இல்லப்பா..

[ அறத்துப்பால் : அதிகாரம் : செய்நன்றியறிதல் : குறள் எண் : 106]


தீனா "கொரலு"

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி.

இதுக்கு இன்னா அர்த்தம்ன்னா... காதலிச்சுகினு இர்க்கவங்கோ கரீட்டான நேரத்துல மீட் பண்ணி ஒர்த்தருக்கு ஒர்த்தரு அன்பா பேஸ்றது உலகத்துல இர்க்குற மன்சாளுக்கு வானம் மழய கொட்த்து காப்பாத்தாறா மேறி இர்க்குமாம்.. சோக்கா கீது இல்லப்பா..!

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர் மிகுதி  : குறள் எண் : 1192 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா...இந்த பொண்ணுகீறாளே அவுளோட சரியாத மாரை மர்ச்சினுகீதே முந்தானை அது எப்டி இர்க்கு தெரிமா.? ஆள கொல்ற மதம் புட்ச்ச யானையோட கண்ணை கவசம் போட்டு மர்ச்சது கணக்கா என் லவ்வு ஃபிலிங்கை மறக்க உட்டுருது.. அத்து மட்டும் இல்லின்னா என் ஆசய கண்ட்ரோல் பண்ணவே மிடியாது..! கரீட்டா சொன்னாக்கா...

"மதயானைகண்ண மறைக்க முகமூடி.. அவ முந்தான என் ஆசைக்கு போட்ட மூடி"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலை மேல் துகில்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1087 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா...நல்ல தண்ணியா இர்ந்தாலும் அத்து எந்தமேறி நெல்த்துல சேருதோ அந்தய நெல்த்தோட தன்மய்க்கு ஏத்தா மேறி மாறிடும் அத்தே மேறி தான் மன்சனும் அவன் யாரோட சேந்துகினானோ அந்த ஜனத்தோட அறிவு தான் அவுனுக்கும் வரும்! கரீட்டா சொன்னாக்கா

"நெலத்துக்கு ஏத்தா மேறி தண்ணி மாறும்.. இனத்துக்கு ஏத்தா மேறி அறிவு மாறும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்துஇயல்பது ஆகும் அறிவு.

[ பொருட்பால் : அதிகாரம் : சிற்றினம் சேராமை : குறள் எண் : 452 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா... படச்ச கடவுளு மேல வச்சிக்கிற ஆசய மட்யும் நீ கப்புன்னு புட்ச்சுக்கினு இர்க்கணும்.. மத்த ஆசயெல்லாம் ஒழிக்கணும்ன்னு நென்ச்சியானா இந்த கடவுள் மேல வக்கிற ஒரு ஆசய மட்டும் வுட்டுறவே கூடாத்து.. கரீட்டா சொன்னாக்கா...

"ஆண்டவன் மேல ஆசவய்யி.. மத்ததெல்லாம் தூரவய்யி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : துறவு : குறள் எண் : 350 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..அல்லாத்தையும் வுட உம்மேல தான் அம்மாம் காதலாக்கீரேன்னு தெர்யாம காதலிகிட்ட சொல்லிட்டேன்பா.. இப்ப அவ இன்னா கேக்குறான்னா அல்லாத்தையும் வுட அப்டின்னியே அப்டின்னா உனுக்கு எத்தினி பேரு இர்க்கா சொல்லு சொல்லுன்னு கேட்டு எம்மேல கோவமாகீரா.. ஒரே பேஜாருபா.. .! கரீட்டா சொன்னாக்கா...

"அல்லாத்தவுடன்னு சொன்னதா குத்தம்.. ஆருன்னு கேட்டு போடுறா சத்தம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி நுணுக்கம் : குறள் எண் : 1314 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா.. உன்யோட எதிரி மூஞ்சியில கரியப் பூஸ்னும்ன்னு நெனிக்கிறியா..? அப்ப நீ செய்ய வேண்டியது ஒன்யே ஒண்ணு தான்.. நல்லா ஒழச்சு நெறியா துட்ட சம்பாதிச்சிகினே இரு நீ துட்டை சேக்க சேக்க உன் எதிரியோட திமிரு அழிஞ்சிப்பூடும்..! கரீட்டா சொன்னா

"நெறியா சம்பாதிக்குற துட்டு.. உன் எதிரிக்கு வய்க்கிற கொட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

[ பொருட்பால் : அதிகாரம் : பொருள் செயல்வகை : குறள் எண் : 759 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா.. ஒரு நாட்டுக்கு மந்திரியா இர்க்கவரு எப்படி இர்க்கணும் தெரிமா? ஆட்சியில இர்க்குறவருக்கு நான் ரொம்பய நாளாவே தோஸ்த்துன்னு நென்ச்சுகிட்டு கெட்டதாவே செய்க்கூடாததெல்லாம் செஞ்சா அத்து அவருக்கு கேடாத்தான் மிடியும்..! கரீட்டா சொன்னாக்கா..

"ராஜாவோட தோஸ்த்துன்னாலும் நல்லது செஞ்சா மந்திரி.. இல்லாட்டி நீ எந்திரி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

[ பொருட்பால் : அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல் : குறள் எண் : 700 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கின வாழ்க்க எப்டி தெரிமா இர்க்கணும்.? பெர்சான கோவமும் சிர்சான சண்டயும் அதுக்கப்றம் சமாதான்மும் இத்தெல்லாம் இர்ந்தா தான் நல்லா இர்க்கும்.! அப்டி இல்லின்னா வாழ்க்க ரொம்ப பயுத்து அழுகுன பழமாவோ, இல்ல முத்தாத பிஞ்சு காயாவோ பிர்யோஜன்மில்லாம பூடும்.! கரீட்டா சொல்லணும்ன்னா..

"அப்பப்ப கா ஊட்டுக்காதா காதலு.. அழுகுன பழமா புட்டுக்கும்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி : குறள் எண் : 1306 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! மன்சனோட தலயெழ்த்து கீதே அத்த மாத்தவே மிடியாது.! தலயெழ்த்த கெலிச்சி காட்றேன்னு சொல்லி நாம எத்தாவது வேற வழிய நெனிச்சாலும் இல்ல போனாலும் அந்த வழில அல்லாம் அந்த விதி தான் மின்னாடி வந்து நிக்கும்.. ஏன்னா உன் விதி அம்மாம் இஸ்ட்ராங்கானது..! கரீட்டா சொல்லணும்ன்னா...

"விதிய மாத்த நெனிக்கிறது ராங்கு... எப்யும் விதி தான் ஸ்ட்ராங்கு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஊழ் : குறள் எண் : 380 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! சோத்த துண்றத வுடொ துண்ண சோறு ஜீர்ணமா ஆவுறது சொகம்..! அத்தே மேறி காதல்ல கட்டிலு மேல குஜாலா இர்க்கறத வுடொ அதுக்கு மின்னாடி செல்லமா சண்ட போட்டுகினு ஊடால பேசாம இர்க்குறது பெர்ய சொகம்..! கரீட்டா சொல்லணும்ன்னா...

"சோறு செமிச்சாசொகம்.. குஜாலுக்கு செல்ல சண்ட சுகம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை: குறள் எண் : 1326 ]

No comments:

Post a Comment