Thursday 5 March 2015

மில்லாயணம்.

 #மாவு_அரைக்கும்_மில்

சக்தி மசாலாக்களும் MTR மசாலாக்களும் வராத காலமது.! திடீர் ரசப்பொடி திடீர் சாம்பார் பொடி என்னும் அதிர்ச்சி தரக்கூடிய பொடிகள் அப்போது கிடையாது.! ஒரு நாள் செய்த புளியோதரை எந்த ரெஃப்ரிஜிரேட்டரின் உதவியும் இல்லாது ஒரு வாரம் தாங்கும் டெக்னாலஜி இருந்த காலம் அது.அதற்கு அரைக்கும் துவையலும் கெடாது.

அன்று கோதுமை மாவு முதல் அரிசி மாவு பிறகு மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகள் வரை மிஷினில் கொடுத்து தான் அரைப்பார்கள். இதற்கான மாவு மில்கள் இருக்கும்.. வீட்டில் அந்தந்த பொருட்களை நன்கு வெயிலில் காய வைத்து எடுத்துச் சென்று மிஷினில் அரைப்பார்கள். அங்கு செல்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.!

மாவு மில்லின் கதம்ப வாசனை எனக்கு பிடிக்கும். அந்த மிஷின் இடும் இரைச்சலில் ஒரு இன்னிசை இருக்கும். அந்த கேன்வாஸ் பெல்ட்டுக்களில் ஒட்டு போட்டு பெரிய சக்கரத்தில் மாட்டி அதன் எதிர் முனையை சிறிய சக்கரத்தில் மாட்டுவார்கள்.. டபக்..சிக்.. டபக்.. சிக்.. என அது போடும் சத்தமும் ஒரு ரிதம் போல இருக்கும்.!

எனக்கு ரொம்பப் பிடித்தது நாம் கொண்டு செல்லும் அரிசி, கோதுமை மாவாகும் போது அதில் தெரியும் வெப்பம்.! அப்போது பிளாஸ்டிக் உபயோகம் அவ்வளவாக கிடையாது பித்தளை வாளியில் எடுத்து சென்று அரைத்து வருவோம்.. மாவில் கை வைத்து அந்த வெப்பத்தை உணர்வது எனக்குப் பிடிக்கும்.

இதையே மிளகாய் மல்லி பொடிகளில் கை வைத்து பார்க்க மாட்டேன். தவறுதலாக கண்ணில் பட்டால் எரியும் அல்லவா.! சொல்லப்போனால் ஆண்கள் சிறுவயதில் இது போன்ற சமையலைறை பொருட்களை தெரிந்து கொண்டது இங்கு தான்.அதற்கான இடமாகத்தான் இந்த மாவரைக்கும் மில் இருந்தது என்பதே உண்மை

பெரிய புனல் போன்றதொரு இரும்பு வாயின் மேற்புறம் நாம் எடுத்து வரும் வாளியை கவிழ்ப்பார்கள். அது இரைச்சலிட்டுக் கொண்டே அரைக்கத் தொடங்கும். பிறகு அந்த மிஷினின் முன்னால் யானையின் தும்பிக்கை போல தொங்கும் துணி வழியாக அரைத்து வெளி வரும் மாவு நமது வாளியை நிரப்பும்..இடையில் அதை கதவு போல ஒரு சதுரத்தகடில் அடைத்து விட்டு... 

அரைபடும் மாவை இரண்டு மூன்று முறை அரைப்பார்கள். நன்கு அரவையான பின் மடை திறந்த நதியாக திறந்து விடுவார்கள். அது முதலில் அரைபடும் சத்தமும், இறுதியில் அது மாவான பின் அரைபடும் சத்தமும் எனக்கு மனப்பாடம்.! இடையில் கேன்வாஸ் பெல்ட்டுகளின் பக்க வாத்தியம் வேறு.! அது தான் நான்  சரவுண்ட் சவுண்ட் எஃபக்டில் கேட்ட முதல் அதிரடி ஜாஸ் இசை

அரவை மில் சத்தத்தை வெளியே இருந்து கேட்பதற்கும்.. அந்த மிஷினின் முன் பக்கம் நின்று கேட்பதற்கும் பின் பக்கம் அந்த பெல்ட் பகுதிக்கு சென்று கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. மாவரைக்கப் போகும் போது அந்த மெஷின் இரைச்சலையும் மீறி பெண்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள்.!

அது என்ன விளங்கும் என்பது இப்போது வரை விளங்கவில்லை..! கத்தி கத்தி பேசினாலும் கேட்காத அவ்விரைச்சலில் ஊர்க்கதை பேசும் பெண்களின் திறமை இப்போது தான் புரிகிறது.. மின் தடையின் போது அதே கதைகள் அடிக்குரலில் பேசப்படும்..அப்போது நான் வெற்றிலை வாங்க அனுப்பப்படுவேன்.!

அம்மா தரும் காசு இதைப்போல பிரைவஸி விரும்புபவர்கள் தரும் காசு என மாவரைக்கும் மில்லுக்கு போவது நல்ல சம்பாத்தியம் தரும் குழந்தைகள் தொழிலாக இருந்தது அப்போது.! பித்தளை வாளியில் அதை தூக்கிக் கொண்டு வருகையில் காலில் அது உரசி அந்த வெப்பம் ரகளையான ஒரு அவஸ்தையைத் தரும்.!

ஆணுக்கு பெண்களின் வேலையை தெரியப்படுத்தும் அந்தக்கால நுட்பம் இப்போது இல்லை.. எல்லாம் ஃபாஸ்ட்டாக மாறி வாழ்க்கையும் ஃபாஸ்ட்டாகி விட்டது. இதை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்யாமல் அப்படியே ரீவைண்ட் செய்தால்... அடடா.! இப்போதும் காதில் ஒலிக்கிறது அதே சப்தம் கொஞ்சமும் ஜதி மாறாமல்......

#டபக்_சிக்_டபக்_சிக்_டபக்_சிக்_டபக்_சிக்

1 comment:

  1. கத்தி கத்தி பேசினாலும் கேட்காத அவ்விரைச்சலில் ஊர்க்கதை பேசும் பெண்களின் திறமை இப்போது தான் புரிகிறது.. மின் தடையின் போது அதே கதைகள் அடிக்குரலில் பேசப்படும்..அப்போது நான் வெற்றிலை வாங்க அனுப்பப்படுவேன்.!..........................REWIND A LOT.........

    ReplyDelete