Sunday 29 March 2015

அழகிய மழை நாள்....

#அன்று

முற்றத்து வீட்டில் ஒரு மழை நாளின் மாலை கூட்டுக்குடும்பத்தின் கலகலப்பான பேச்சும், மாலை நேரச் சிற்றுண்டி சமைக்கும் மணமும். குழந்தைகளின் கும்மாள சப்தமும் வீடெங்கும் நிறைந்து கொண்டிருக்கிறது. அழையாது வந்த விருந்தாளியாய் முற்றத்தில் பெய்த மழையும் சள சளவென்று எங்களோடு பேசுகிறது. 

எங்கள் வீட்டு தேநீர் மணத்தை அதுவும் நுகர்கிறது,அங்கு முற்றத்தை சுற்றி நின்று தூறலில் தங்கள் கைகளை நீட்டி நனைக்கிற குழந்தைகளின் கன்னங்களில் தன் சாரல் விரல் தொட்டு சில்லென கொஞ்சுகிறது. மழையின் சப்தமா.! குதூகலத்தின் எதிரொலியா.! எனப் பிரித்துப் பார்க்க முடியாத இன்ப பேரிரைச்சல். 

விருந்தாளியாய் வீட்டிற்குள் வந்த மழை ஓய்கிறது. மழை நின்ற பின் தெருவிற்கு விரையும் பிள்ளைகள் மழை கழுவி விட்ட வீதியில் குயவன் சக்கரம் போல் சுழித்தோடும் செம்மண் நிறகால்வாய் நீரில் கால் நனைக்கிறார்கள் இதோ இந்த மழை நீரில் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் காகிதக் கப்பல்கள் ஓடும்.!

போக்குவரத்து தொடங்கும்.. வீட்டில் எங்களோடு விளையாடிய அதே மழை நீர் புரண்டோடும் கால்வாயில் வந்து சேரும்.. மீண்டும் அது குழந்தைகளோடு ரசித்து விளையாடும்... அது ஒரு அழகிய மழைப்பொன் மாலை..!

#இன்று

உயர்ந்து நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் காற்றுக்காகவென கட்டிவிட்டு கொசுவிற்காக ஜன்னல்களை இறுக அடைத்து மூடியிருக்கிறோம். இதோ மழை வருகிறது மழை ரசிக்க ஜன்னல் திறக்கப் போகும் பிள்ளைகளை அதட்டுகிறோம் வீட்டிற்குள் மழை நீர் வந்து ஈரமாகிவிடும் உனக்கு காய்ச்சல் வரும் என்று.!

ஆண்டாண்டு காலமாய் நம் வீட்டிற்குள் வந்து நம்மோடு பேசிப்போன மழையை இன்று வீட்டிற்குள் சாரலாக கூட அனுமதிப்பதில்லை.! ஆர்வமாய் நம் வீடு தேடி வரும் மழையை நகரத்தில் எந்த வீடுமே ஏற்கவில்லை.! ஆற்றாமையிலும் ஆவேசத்திலும் நகரத்தை பழி தீர்க்க இப்போது மழை கொட்டித் தீர்க்கிறது.!

மழை நின்ற பின்பு சாலையெங்கும் வெள்ளக்காடு.. ஓப்பனை கலைத்த நடிகையின் முகம் போல அரசாங்கத்தின் லட்சணங்கள் மழை நீரில் அழிந்து விடுகிறது.. கற்கள் பெயர்ந்த சாலைகள், மூடியில்லாத பாதாள சாக்கடைக் குழி, அறுந்து விழுந்த மின் கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் இணைப்பு துண்டிப்பால் எங்கும் இருள்.! 

பாலத்தின் அடியில் பாதி மூழ்கிய பேருந்து..இயங்க மறுக்கும் இரு சக்கர வாகனங்கள், அநியாய வாடகையில் ஆட்டோ டாக்சிகள்.. பேருந்து நிறுத்தத்தில் தவிக்கும் மக்கள பாதாள சாக்கடை குழிக்கும் அறுந்த மின் கம்பிக்கும் பயந்து தேங்கிக் கிடக்கும் மழை நீரில் கால் வைத்து நடக்க தயங்குகிறார்கள்.!

எங்கும் அங்கலாய்ப்புகள், எரிச்சல்கள், பேரிரைச்சல்கள், எப்ப வீட்டுக்கு போறது பாழாப்போன மழை கெடுத்துடுச்சு சார்"புலம்பல்கள்.. சாலையில் பென்ஸ் கார்கள் கிழித்து செல்லும் தேங்கிய மழை நீர் நம்மிடம் கேட்கிற கேள்வி அன்று வீட்டிற்குள் வந்த மழையை ரசித்தவர்க்கு மட்டும் கேட்கிறது...

#நான்_வராத_வீட்டிற்கு_நீங்கள்_மட்டும்_ஏன்_போகவேண்டும்


No comments:

Post a Comment