Tuesday 28 July 2015

அப்துல்கலாமுக்கு...

#வாலி_பாணியில்_அய்யா_கலாமிற்கு_ஓர்_புகழஞ்சலி..

தெற்கில் உதித்து வடகிழக்கில் மறைந்த சூரியனே

தெள்ளிய முடிவோடு லட்சியம் கொண்ட காரியனே

நீ பிறந்ததால் பெருமை கொண்டது சேது

இப்படி சொன்னால் அதை மறுப்பவர் ஏது

குடியரசுத் தலைவராய் இருந்த விஞ்ஞானியே

மதங்களுக்குள் சிக்காத அஞ்ஞானியே

மெய்ப்பொருள் கண்டிட்ட மெய்ஞானியே

உனக்கு வாரிசாக இல்லை ஒரு செல்வன் செல்வி

உனக்கு வாரிசாக இருந்த ஒரே செல்வம் கல்வி

நீ விஞ்ஞான பாரதி அறிவியலின் சாரதி

பாரதிக்கு கவிதை மட்டுமே வந்தது

உன்னால்தான் கவிதையோடு கணிப்பொறியும் சிறந்தது

அர்ஜுனன் கணை தொடுத்து புகழ் பெற்றவன்

நீ அக்கணையை கண்டுபிடித்து அதை  அர்ஜுன் ஆக்கியவன்

உனது கணைகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தன

உன் புகழ் சொல்லியே பல வாய்கள் ஓய்ந்தன

வானவியல் அறிவோடு வள்ளுவனையும் போற்றினாய்

வளந் தமிழுக்கும் பெருந்தொண்டு ஆற்றினாய்

மரங்கள் வளர்க்கச் சொல்லி நட்டாய் பல கன்று

வருங்காலத்தில் அவை உம் பேர் சொல்லும் வளர்ந்து நின்று

வல்லரசு கனவு கண்ட நல்லரசே

வாழ்வாங்கு வாழ்ந்த அறிவியல் பேரரசே

நீ அக்னிச்சிறகுகள் விரித்தாய்

அதில் உன் எண்ணத்தை விதைத்தாய்

அப்பெரு நெருப்பில் உலகை எரித்தாய்

ஆம் எங்கும் எரிகிறது  நீ வைத்த அறிவு நெருப்பு

இது நிஜமானால் அந்த வெற்றிக்கு நீ ஒருவனே பொறுப்பு

இதைவிடவா இருக்கப் போகிறது இந்தியாவிற்கு சிறப்பு

கலங்கள் பல கலாமின் பேர் சொல்லும்

அறிவியல் தலைவன் என உன்னை மட்டுமே ஊர் சொல்லும்

உனக்கு மாலைகள் இடவேண்டும் என்பதற்காகவே

பல மாபெரும் சபைகள் உருவாகின

உன் அறிவியல் எண்ணத்தில் மண்ணில் சிகரங்கள் தொட்டாய்

அக்னிச் சிறகுகள் கொண்டு இன்று விண்ணில் பறந்திட்டாய்

எங்கள் விஞ்ஞான தேவனே

உன்னை வென்றிட்டான் காலனே

அழிந்தது உன் புகழுடம்பு

பெரும் புகழோடு ஏறினாய் விசும்பு

விசும்புகிறோம் நாங்களெல்லாம் மீண்டும் பூமிக்குத் திரும்பு.

No comments:

Post a Comment