பந்தாடும் பாப்பாக்களுடன் நெடியதொரு டெஸ்ட் மேட்ச் கனவில் ஆடிய புத்துணர்வுடன் எழுந்து காலை 6 மணிக்கே குளித்து டைனிங் டேபிள் வந்தால் சூடான இட்லி, நெய் மணக்கும் முந்திரிப் பொங்கல், சட்னி, பிரட் ஆம்லெட்,தோசை, முட்டை தோசை, சாம்பார் & சிக்கன் குழம்பு என மெனுக்கள் காத்திருந்தன... அதிகாலை என்பதால் அவ்வளவாக பசியில்லை அத்தனையிலும் இரண்டிரண்டு லைட்டாக சாப்பிட்டுவிட்டு (?!!!) ஒரு கப் டீ..
இந்த சிம்பிளான உணவை முடித்துவிட்டு... உட்லேண்ட்ஸ் காக்கி கார்கோ பேண்ட் அணிந்து அடர் நீல முழுக்கை லீவிஸ் பனியன் அணிந்து காலில் ஷு சாக்ஸ் மாட்டி மஞ்சள் நிற சில்க் ஸ்கார்ஃப்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு என் ஓக்ளே கூலர்சை மாட்டிக்கொண்டு டூயட் பாடப்போகும் ஹீரோ போல ரெடியாகி நின்றேன் கிறிஸ்டோ சசியும் இதே காஸ்ட்யூம் மேல உள்ள பனியன் மட்டும் ரெட் பிளாக் அவ்வளவு தான்.. மணி காலை 7 ஆகியிருந்தது.
நாங்கள் மியாமியில் டாக்டர் பழனிச்சாமி வீட்டில் தங்கியிருந்தோம். அந்தத் தம்பதியினர் ஓய்வு பெற்றவர்கள் ஆனாலும் எங்களை நன்கு கவனித்துக் கொண்டனர் வீட்டில் அந்த மேடம் எங்களிடம் எவர் கிளேட்ஸ் தானே போறிங்க என அடிக்கடி கேட்டார்.. பாவம் வயதானவர் மறதி போல அது தான் திரும்ப திரும்ப கேட்கிறார் என நினைத்துக் கொண்டேன். வாசலில் உள்ள தோட்டத்துக்கு வந்தோம் வாசலில் பென்ஸ் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கியவர் ஹாய் அயாம் சுந்தர் என்றபடி எங்களை நோக்கி கையசைக்க அவரைப் பார்த்து நாங்கள் ப்ப்ப்ர்ர்ர்ர்ர் என வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில் சிரித்தோம்.. ஏனெனில் அவர் சாதாரண ஷார்ட்ஸ் டி- சர்ட்டில் வந்து இருந்தார்.. அவர் எங்களிடம் நீங்க எவர் க்ளேட்ஸ் வரலியா என்றார் சந்தேகத்துடன்.. அதுக்கு தானே நிக்கிறோம் என்றேன்.. நல்லா கேளுங்க சுந்தர் எனக்கும் அந்த டவுட் தான் என்றார் திருமதி பழனிச்சாமி.!
பிறகு தான் தெரிந்தது இந்த உடை அங்கு தேவையில்லை என்பது.. அந்த மேடம் காலையில் அடிக்கடி கேட்டது வயோதிகத்தால் அல்ல என்பதும் இப்போது புரிந்தது.. அவர்கள் இருவரும் தங்கள் மனதுக்குள் ப்ப்ப்ர்ர்ர் எனச் சிரிப்பதை எங்கள் காதுகள் கேட்டன.. ஷார்ட்ஸ் பனியனுக்கு மாறி ஹவாய் செப்பலுடன் கிளம்ப இப்ப தான் நீங்க பர்ஃபெக்ட் மியாமி டூரிஸ்ட் என்றதை எங்கள் பிடரி வழியாகக் கேட்டு காரில் ஏறினோம்.. வண்டி கிளம்பியது..
அரைமணி நேரப்பயணம் கார் எவர் கிளேட்ஸ் பகுதிக்கு வந்தது..கண்ணுக்கு எட்டியவரை கோரைப் புற்கள் வளர்ந்த பெரிய ஆறு மரத்தால் போடப்பட்ட பாலம் ஒரு பெரிய படகுத்துறை பெரிய பெரிய வித்யாசமான போட்டுகள்.. ஆங்காங்கே முதலைகளின் படங்கள் போர்டுகள் இவையெல்லாம் அங்கு பார்க்கிங்கில் இறங்கியதும் கண்ணில் பட்டவை.. என்ன இந்த ஆற்றில் ஒரு நூறு முதலைகள் இருக்குமா என்றேன் சோம்பல் முறித்தபடி..
சுந்தர் சிரித்துவிட்டு சொன்ன பதிலில் என் சோம்பல் மட்டுமல்ல எங்கள் இதயங்களே முறிந்தது.. அவர் சொன்னது.. "இல்ல வெங்கி ஒன்றரை மில்லியன் முதலைகள்..இந்த ஆற்றில் தான் நம் பயணம் போகப்போறோம்" என்றார்... யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
(வரும்...)