Thursday, 4 August 2016

1🚗 🏝 க்யூபா கடல் எல்லைப்பயணம் 🏝 🚘1

"கீவெஸ்ட்" இந்தியாவிற்கு எப்படி கன்னியாகுமரியோ அதே போல இது அமெரிக்காவின் தென்முனை.. இந்த கடலுக்கு அந்தப்பக்கம் க்யூபா, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா இப்படி கலவையாக பல நாடுகள்.. அட்லாண்டிக் என்கிற கோதாவரி கடலுக்குள் அம்மையப்ப முதலியார் சொல்லாமலேயே கோடு இழுத்து எல்லை பிரித்து வைத்திருக்கிறது. க்யூபா இங்கிருந்து 90 மைல்கள் தான். நாங்கள் இருந்தது ப்ளோரிடாவில்.

அங்கிருந்து கீவெஸ்ட் 160 மைல்கள்.. கிட்டத்தட்ட 300 கி.மீ தூரம்.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் போல எங்கள் வேதாள பிக்னிக் பேக்கை சுமந்து கொண்டு கார் ஏறினோம். திருமதி. பாபி, அவரது கணவர் சின்னப்பன், ரெவரண்ட் ஃபாதர் நேத்திரன் ஆகியோர் எங்களுடன் வந்திருந்தார்கள்.. அதிலும் ஃபாதர் நேத்திரன் சர்ச் ஊழியம் செய்பவர் என்பதை நம்பவே முடியவில்லை.. இளம் பேராசிரியர் லுக்கில் இருந்தார்.

ப்ளோரிடாவில் இருந்து கீவெஸ்ட் போகும் வழியில் 50 மைல் தள்ளி ஃபாதர் இருந்தார் போகும் வழியில் அவரை பிக்கப் செய்து கொண்டு ஒரு ஹைவே மோட்டலுக்கு சென்றோம்.. அங்கே இருந்த பேக்கரியில் வாயில் நுழையாத ஸ்பானிஷ் பெயர்களில் வாயில் நுழையக் கூடிய பிஸ்கெட், குக்கீஸ், மினி இட்லி போல குட்டி டொனெட்டுகள் வாங்கிக் கொண்டோம். மதிய உணவை பாபி வீட்டிலேயே சமைத்து ஹாட்பேகில் எடுத்து வந்திருந்தார்.

காரின் ஆடியோ ப்ளேயரில் சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே என எஸ்.பி.பி பாடத் தொடங்க எங்கள் பயணம் தொடங்கியது.. இன்னும் சில மைல்கள் கடந்துவிட்டால் அப்புறம் இருபக்கமும் கடல்கள் தான் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் தான் இந்த டிரைவிங்கே அலாதியாக இருக்கும் என்றபோதே எங்கள் கார் கடல் பாலத்தில் ஏறியிருந்தது. இரு புறமும் அகண்ட நீலத்துணியை விரித்தது போல அட்லாண்டிக் தெரிந்தது.

கார் 7 மைல்ஸ் பிரிட்ஜ் என்னும் சரித்திர புகழ் வாய்ந்த பாலத்தில் வந்து நின்றது. இது பழைய 7 மைல்ஸ் பிரிட்ஜ் ஆகும்.. இதே பெயரில் புதிய பிரிட்ஜ் ஒன்றும் உள்ளது.. தற்போது மராமத்து பணிகள் நடந்து வரும் இப்பாலத்தில் தமிழகம் பாகவதர் படங்களை கொண்டாடிக் கொண்டு இருந்த காலங்களில் இரயில் ஓடியிருக்கிறது.. பிற்பாடு சைக்கிள் பைக் ரேஸ் பிரியர்களுக்கு மைதனமாக மாறி இருந்தது.. இதன் கீழே இறங்க ஒரு வழி..

அதன் வழியாக போனால் சிமெண்ட் பாதை அமைத்து தடுப்புக் கம்பி அமைத்து இருந்தனர்.. அங்கிருந்து கடலை நன்கு ரசிக்க முடியும்.. வீசிய காற்றுக்கு விக் வைத்தவர்கள் அங்கு வந்தால் அசிங்கப்பட்டு இருப்பார்கள் காற்று பிய்த்து உதறியது.காலாற நடந்து கொண்டே மினி டோனெட்டுகளை கொறித்தோம்.. 20 நிமிடம் கழித்து மீண்டும் புறப்பட.. கடல்.. பாலம்.. கடல்.. பாலம்.. கடல்.. ஒரு வழியாக கீவெஸ்ட்டுக்கு வந்தடைந்தோம்.

காரை பீச் அருகே நிறுத்திவிட்டு திரும்பினால் கொக்கரக்கோ என கோழி கூவும் சத்தம்.! திரும்பினால் அட நம்ம ஊரு சேவல் ஒருகணம் நாம் இருப்பது கிடாரிப் பட்டியா அல்லது கீவெஸ்ட்டா என குழம்பிப் போனோம்.. ஆங்காங்கே இது போல பல சேவல்கள் மேய்ந்து கொண்டிருந்தன.. கடற்கரையிலேயே அழகான பார்க்.. குடையுடன் கூடிய டேபிள்கள் நிறைய இருந்தன.. எங்கள் சாப்பாட்டுக் கூடைகளை அங்கே வைத்தோம்.

சின்னப்பன் தன் பேகில் இருந்து ஒரு நீளமான தங்க நிற அட்டைப் பெட்டியை எடுத்தார்.. சாண்டில்யன் கதைகளில் வருவது போல மதிய கதிரவன் ஒளியில் அது ஸ்வர்ணம் போல ஜொலித்தது.. அதுவும் வாயில் நுழையாத ஸ்பானிஷ் பெயரில் வாயில் நுழையக் கூடிய க்யூபா ரம் எனப் புரிந்து கொண்டோம்.. கச்சேரி களை கட்ட க்யூபா பற்றி உங்களுக்கு சொல்லட்டா என்றார் ஃபாதர் அவர் சொல்லச் சொல்ல வியப்படைந்தோம்!

அது பற்றி நாளை... (வரும்..)

No comments:

Post a Comment