Friday, 19 August 2016

1💃🏻 👙🎉 18+ நகரம் 🍺 நியூ ஆர்லின்ஸ் 👙💋🎉 1

நியூ ஆர்லின்ஸ்.. லாஸ்வேகாசிற்கு அடுத்த அமெரிக்காவின் கேளிக்கை நகரம்.. லூசியானா மாகாணத்தின் தலைநகரம்.. பாரீஸ் போன்ற கலாச்சாரமும், இரவு விடுதிகளும், மதுவகங்களும், நடன விடுதிகளும் நிறைந்த நகராகும்.. எனக்குத் தெரிந்து நம் டாஸ்மாக் நண்பர்களைப் போல வீதியில் விழுந்து கிடந்த அமெரிக்க பெருங்குடி மக்களை நான் இங்கு தான் கண்டேன். கடந்த பிப்ரவரியில் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடக்கும் Mardi Gras என்னும் கார்னிவல் நாங்கள் சென்ற அன்று தான் துவங்கியது.. அதென்ன மேர்டி கிராஸ்??? பொறுமை அது நான்காவது ரீலில் வரும் சம்பவம் இப்போதே சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.. அங்குள்ள இரவு விடுதிகள், நடன அழகிகள், நியூ ஆர்லின்ஸ் இரவு வாழ்க்கை இது போன்ற நிகழ்வுகள் பற்றி முடிந்த அளவு விரசமின்றி எழுத உள்ளேன். அதையும் மீறி புகைப்படத்தில் அடல்ட் லுக் வந்துவிடுவதால் தான் சுதாரிப்பாக தலைப்பிலும் 18+ சேர்த்துவிட்டேன்

அமெரிக்கப் பயணத்தைப் பற்றி இதுவரை 70க்கும் மேல் கட்டுரைகள் எழுதியாயிற்று இந்த நகரைப் பற்றி 7 வது கட்டுரையாக எழுதவேண்டியது.. இங்குள்ள கிளு கிளு சமாச்சாரங்களை கொஞ்சம் நினைத்து தயங்கித் தயங்கித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து 6 மாதங்கள் கழித்து இதை எழுத துணிவு  வந்ததால் எழுதுகிறேன். முதலில் இந்த ஊருக்கு எங்களை அழைத்துச் சென்ற அருமை அண்ணன் சாம்பியன் அவர்களுக்கு நன்றி.

நாங்கள் இருந்தது அலபாமாவில் அங்கிருந்து மிசிசிபி என்னும் ஒரு மாநிலத்தையே கடந்து செல்ல வேண்டும் 308 மைல்கள் அமெரிக்க வழக்கப்படி நான்கரை மணிநேர டிரைவிங்.. உங்களுக்கு புரியும் படி சொன்னால் பாலக்காட்டில் இருந்து பாண்டிச்சேரி செல்வது போல இடையில் தமிழகம் வருகிறதல்லவா அது போன்று தான். சாம்பியன் அண்ணன் காரை ஓட்ட காலை 9 மணிக்கு நியூ ஆர்லின்ஸ் புறப்பட்டோம்.

சாம்பியன் அண்ணன் அறிவியல் படித்தவர் அமெரிக்காவில் அறிவியலாளர் ஆக பணி புரிகிறார்.. பரந்துபட்ட ஞானம் உடையவர், புத்தக அனகோண்டா அரசியல், சினிமா, ஆராய்ச்சி, கதை, கவிதை எல்லாவற்றிலும் கில்லி, அருமையாக கிடார் வாசிப்பார், சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவார் இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவாகவே போடலாம்.. அண்ணனுடன் பேச கேட்டுக் கொண்டே வரலாம் அவர் ஒரு பல்கலைக் கழகம்.. ஓ.கே..

காருக்குள் வாருங்கள் மிசிசிபி என்பது செவ்விந்தியப் பெயர் அமெரிக்க மாகாணங்கள் நதிகள் சாலைகள் பல இன்றும் செவ்விந்திய மொழியில் உள்ளன  உலகின் 5 வது பெரிய நதியான மிசிசிபி பாயும் மாநிலம்(ஆற்றின் பேரும் அது தான்) 3000 மைல் நீளமுள்ளது இந்நதிக்கரை நாகரீகம் பற்றி செவ்விந்தியர் வாழ்க்கை முறை பற்றி சுவாரஸ்யமாக அண்ணன் சொல்லக் கேட்டுக் கொண்டே வந்தோம்.. பாதி மாநிலத்தை கடந்து வண்டி நின்றது.

பர்கர் கிங் என்னும் கடையிலும் பாப்பாய் என்னும் கடையிலும் (KFCபோல) நிறுத்தி பர்கர் & சிக்கன் வாங்கிக் கொண்டோம்..மீண்டும் பயணம் ஆரம்பித்தது மிசிசிபி அமெரிக்காவின் ஆறு மாகாணங்களை கடந்து லூசியானா வழியாக மெக்ஸிகோ வளைகுடாவில் கலக்கிறது.. ஆம் நியூ ஆர்லின்ஸ் கடல் எல்லையில் மெக்ஸிகோ தேசமும் வருகிறது மிசிசிபியை கடந்து லூசியானா மாநகரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என..

ஸ்பானிஷிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த அறிவிப்பு பலகையை கடந்ததும் பெருங் கடலும் ஒரு பாலமும் தென்பட்டது 4 மைல் நீள பாலம் அது நீருக்குள் பேங்க்க்க்க் என அலறியது ஒரு பெருங் கப்பல் இது தான் மெக்ஸிகோ வளைகூடாவா அண்ணே என்றேன். தம்பி இது கடல் அல்ல ஆறு என்றார்.!இது ஆறா..! ஆச்சரியத்தில் உறைந்து போனோம்.. 

ஓ.. அப்போ இது தான் மிசிசிபியா என்றேன்.. அதுவுமில்ல இது பாஞ்சண்ட்ரான் என்னும் நதி என்றார்..இதுவும் செவ்விந்தியப் பெயர்.. சரக்குக் கப்பல் போகும் அளவிற்கு பெரிய நதியை பார்ப்பது என் வாழ்நாளில் அதுவே முதல் முறை.. வியப்பு தணிவதற்குள் லூசியானா சுற்றுலாத் துறை விடுதியில் நின்றோம்.. அந்த சுற்றுலாத் துறை விடுதியில் எங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன..

(வரும்..)


No comments:

Post a Comment