Saturday 1 February 2014

காளமேகப் புலவர்...!

சிலேடை...கவி காளமேகம்.!

( முதல் வாரம் என்பதால் கவி பற்றி அறிமுகம் )

கவி காளமேகத்தை அறியாதோர் சிலேடை பற்றியும் அறிந்து இருக்க முடியாது.! இவர் திருக்குடந்தையில் பிறந்தவர் என்றும் திருமோகூரில் பிறந்தவர் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. திருமோகூர் பெருமாளின் பெயரும் காளமேகமே! 

இருப்பினும் இவர் இயற்பெயர் வரதன் என்பதும் ஶ்ரீரங்கம் கோவிலில் பரிசாரகராக பணி புரிந்தவர் என்பதும் அவ்வூரில் தேவதாசியாக இருந்த மோகனா என்பவளை காதலித்து அவளுக்காக சைவ மதத்திற்கு மாறினார் என்பதும் சுவையான விஷயங்கள்...

தேவி உபாசகர் ஒருவர் தவமிருந்த போது தேவி தோன்றினாராம் வந்தது தேவி எனத்தெரியாது அவர் அலட்சியப்படுத்த தேவி கோவிலில் படுத்திருந்த காளமேகத்திற்கு தன் அருளை தந்துவிட்டாராம்! அன்றிலிருந்து தான் வரதன் கவி காளமேகமானாராம்.!

புலவரான பின்பு தமிழகம் முழுவதும் பயணப்படலானார் கவி. நாகைக்கு அருகில் உள்ள திருமலைராயன் பட்டினத்தின் சிற்றரசன் தனது அவையில் தண்டிகை புலவர்கள் என்று 64 பேரை வைத்திருந்தான்.. அதன் தலைமைப் புலவன் அதிமதுர கவிராயன்..!

செருக்கோடு இருந்த இந்த தண்டிகை புலவர்களோடு முதலில் மோதலில் துவங்கியது காளமேகத்தின் முதல் சந்திப்பு..! அவர்களுடன் போட்டியிட்டு வென்ற போதும் அம்மன்னன் உரிய மரியாதையை கவிக்கு தராததால் அவனை வசை மாறி பாடி அகன்றார் கவி.

அவர் வசை பாடியது போலவே கடற்சீற்றத்தால் அழிந்தது அந்நாடு.! ஆனால் அங்கு தப்பி பிழைத்த அதிமதுரர் மட்டும் கவியின் பெருமையை தானும் தம் மன்னனும் உரிய படி மதிக்கவில்லையே என மனம் வருந்தினார்.

பின்னாளில் அதிமதுர கவிராயர் காளமேகத்தை புகழ்ந்து பாடினார் என்பது தனிக்கதை.. இவ்வாறாக வாழ்ந்து தன் முதுமை காலத்தில் திருவானைக்காவில் மறைந்தார் கவி.. 

அவர் எழுதிய நூல்கள் மூவர் அம்மானை, திருவானைக்கால் உலா, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம் முதலியவை ஆகும்.. இதில் அம்மானை முழுவதும் முற்றுப் பெறவில்லை..


இனி சிலேடை..

திருமலைராயன் பட்டினத்தில் கவி நுழைகையில் பல்லக்கில் ஊர்வலமாக அரசர்களைப் போல அதிமதுர கவிராயர் வந்து கொண்டிருந்தார் மக்கள் சாலையின் இரு புறமும் நின்று வாழ்த்து கோஷங்களிட்டு வரவேற்றது கவியை முகஞ்சுளிக்க வைத்தது . அப்போது....

காவலன் ஒருவன் கவியை பார்த்து நீயும் வாழ்த்திப்பாடு என கட்டாயப் படுத்தினான்.. ஆத்திரத்துடன் கவி பாடிய பாடல் இதோ...

அதிமதுரம் என்றே அகிலம் அறியத் 
துதிமதுர மாயெடுத்துச் செல்லும்-புதுமையென்ன
காட்டுச் சரக்குலகிற் காரல் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு.

அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு அதை ஏன் துதி பாடி தூக்கிச் செல்லவேண்டும் அதை ஏன் போற்றி புகழ்ந்திட வேண்டும்... என்பதே இதன் அர்த்தம். 

இந்நாளிலும் சிலேடை சொல்வதில் பெண்கள் வல்லவர்கள்.. இதோ இன்னும் 5 நிமிஷத்தில் ரெடியாகிவிடுவேன் என்று மனைவி சொல்வதும் சிலே(ட்)டையே..

No comments:

Post a Comment