Friday 21 February 2014

பூசணியும்... ஈசனும்...!

கவி காளமேகத்தின் சிலேடை வெள்ள(ல்ல)ம்....

பூசணிக்காயும்... பரமசிவனும்...


பாடல்...

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக்

கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - வடிவுடைய

மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்

பூசணிக்கா யீசனெனப் போற்று.

இதில் கடைசி வரிக்கான விளக்கம் பூசணியை ஈசன் என்று கருதி போற்ற வேண்டும் ஏனெனில்.... இனி சிலேடையை பார்க்கலாம்...

பூசணி..... அடி நந்தி சேர்தலால் : அடிப்பகுதியிலே பெரிய காம்பு சேர்ந்து இருப்பதால், ஆகம் வெளுத்து கொடியு மொரு பக்கத்திற் கொண்டு : உடல் வெளுத்து ஒரு பக்கம் கொடியைக் கொண்டு, வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு: அழகான வெண் சுண்ணத்தை மேற்புறத்தே கொண்டு, வளைத்தழுப்பு பெற்றதனால் : வளைவான தழும்புகள் பெற்றதனால்...

பரமசிவன்.... அடி நந்தி சேர்தலால் : திருவடியிலே நந்திப் பெருமான் வீற்றிருக்க, ஆகம் வெளுத்து கொடியு மொரு பக்கத்திற் கொண்டு : திருநீறணிந்து உடல் வெள்ளையாகித் தோன்ற பூங்கொடி போன்ற உமையவளை ஒரு பக்கம் கொண்ட, வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு: சிறந்த பாம்பாபரணத்தைக் கொண்டிருப்பதனாலும், வளைத்தழுப்பு பெற்றதனால் : அம்மையின் கரங்கள் திருமேனி தழுவியே இருப்பதால் அவர் வளையல்கள் அழுத்திய தழும்பு உடையவர்...


என்னுடைய பஞ்ச் : ஈசன் முடி சந்திர பிம்பத்திற்கும் அரிந்த பூசணித்துண்டிற்கும் ஒரே பெயர்.! அது என்ன?

விடை: "கீற்று"

No comments:

Post a Comment