Friday 24 April 2015

வெட்டினாலும் வளரும்.

#சொக்கன்_மாமா

சொக்கன் மாமா முடி திருத்தும் தொழிலாளி சேலம் திருச்சி மெயின் ரோட்டில் எங்கள் கடைக்கு சைடு எதிர்புறம் (வகிடு எடுப்பது போல்)சலூன் கடை  வைத்திருந்தார். பிரத்யேகமாக எங்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்தே வெட்டி விடுவார். அப்பாவின் நண்பர்அவரை சொக்கா சொக்கா என்று அப்பா அழைப்பதை பார்த்து ஒரு முறை நான் சொக்கா நீ என்ன மக்கா என்று டி.ஆர் ஸ்டைலில் என் க்ரியேட்டிவிட்டியை எடுத்து விட வாயில் உதடு தெறிக்கும்படி அப்பாவும் விட்டார் ஒரு அடி..!

மாமா என்று அழை அது தான் மரியாதை என்று சத்தம் போட்டார்.. உதடு கிழிந்து ரத்தம் வடிந்த என்னை வாரியணைத்துக் கொண்ட சொக்கன் மாமா தான் என்னண்ணா இது புள்ளைய இப்படியா நத்தம் வர்றா மாறி அடிக்கிறது சின்னப்பையன் தானே என்னைய சொன்னா என்ன தப்பு..! என்றபடி வெளியே கடைக்கு கூட்டிப்போய் சர்பத் கடை ஐஸ்கட்டியை உதட்டில் வைத்து வலியை குறைத்து வேணுங்கறதை வாங்கிக்க கண்ணு என்று என் பைகளை மிட்டாய்களால் நிரப்பினார்.. என் மனதிலும் நிரம்பினார்.

அன்றுமுதல் எப்போதும் அவரை சொக்கன் மாமா என்று தான் அழைப்போம். பழைய நடிகர் மாலி என்பவர் கருப்பாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி ஒரு தோற்றம். கணுக்கால் தெரிய கதர் வேட்டி காமராஜர் ஸ்டைலில் முரட்டுக் கதரில் முக்காகை சட்டை முள் முள்ளாக லேசான நரைத்த தாடி இது தான் சொக்கன் மாமா.TASரத்தினம் பட்டணம் பொடி மட்டை இடுப்பிலிருந்து லாவகமாக எடுத்து அதை இரு விரலில் ஒரு சிட்டிகை அள்ளி மூக்கில் வைத்து சர்னு உறிஞ்சும் ஸ்டைல் ஒரு கெளபாய் ஹீரோ துப்பாக்கியை கையாள்வது போல அவ்வளவு ஸ்டைலாக இருக்கும். 

அவரது அந்த பொடி மணமும் கதர் உடை சலவை மணமும் எனக்கு பிடிக்கும்.அப்பாவின் மேற்பார்வையில் எங்களுக்கு நடக்கும் முடிவெட்டு ஒரு கடா வெட்டு போல மாதாமாதம் நடக்கும்.. பலிபீடத்தில் (பலகை) அமர வைக்கப்பட்டு சொக்கன் மாமாவின் மிஷின் எங்கள் தலையில் ஓடுவதை பார்த்தபின்பு தான் புல் வெட்டும் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டது என்றால் சத்தியமாக அதை நான் ஒப்புக்கொள்வேன். ஆசை தீர அது ஓடிய பின்னும் கடைசியாக அப்பா ஃப்ரூப் பார்ப்பார்.!

இடது காதுக்கு மேல இன்னும் கொஞ்சம் குறைச்சிடு (கரைச்சிடு) சொக்கா..பிழைகள் திருத்தப்பட்டு அப்பா தலையாட்டும் போது நம் தலை தொங்கியிருக்கும்.. கண்ணாடியில் பார்த்தால் பரதேசி அதர்வா கூட நம்மை கிண்டல் செய்வார்.. பட்டையும் கொட்டையும் அணிந்தால் ஏதாவது ஒரு மடத்தின் இளைய சந்நியாசின்னு ஒப்புக் கொள்ளும் அளவுக்கு எங்கள் தோற்றம் இருக்கும். ஒரே மகிழ்ச்சி சொக்கன் மாமா போகும் போது கொடுக்கும் புளிப்பு மிட்டாய்.! 

சோகத்தை ஸ்வீட் எடு கொண்டாடு என அன்றே கொண்டாடியிருக்கிறோம். எனக்கு தம்பிக்கு அப்பாவுக்கு எல்லோருக்கும் முடித்துவிட்டு 15 ரூபாய் வாங்கிக் கொண்டு கிளம்புவார் இதில் அப்பாவுக்கு செய்யும் ஷேவிங்கும் அடங்கும்.. சிலநேரம் அப்பா 20 ரூபா தந்து வச்சுக்கோ என்பார்.வேணாங்கண்ணா தேவைப்பட்டா வாங்கிக்கிறேன் என்பார்.. மிகச்சரியாக 15 ரூபாய் அதற்கு மேல் நயா பைசா கேட்கமாட்டார் இது என் 5 வயது முதல் 13 வயது வரை 8 ஆம் வகுப்பு படிக்கும் போது சொக்கன் மாமா இறந்துவிட்டார் அதன் பிறகு தான் சலூன் கடை எனக்கு பரிச்சயம்.

இப்போ ஃபார்வர்டு பேக்..இந்த காலத்துக்கு வருவோம்... 2015 சென்னையில் புகழ் பெற்ற சலூன் அது முடி வெட்ட 150 ரூபாய் ஷேவிங் 75 ரூபாய் என நியாயமாய்(!?) கட்டணம் வாங்கும் கடை.. சார் புது ஹேர் ஸ்டைல் டோனி ஸ்டைல் கட் பண்ணவா... அது என்ன ஸ்டைலுப்பா என்றேன்.. சார் அது பேரு ஜார்ஹெட் 500 ரூபா ஆகும் இது தான் இப்ப சிட்டியில ஹாட் இந்த போட்டோ பாருங்க என டோனியின் போட்டோ ஒன்றைக் காட்டினார்.!

அதைப்பார்த்ததும் நினைவுகளில் சொக்கன் மாமா வந்தார்.. அப்படியே முப்பது வருடங்களுக்கு முன் வீட்டிற்குள் எங்களுக்கு வெட்டிய அதே ஸ்டைலில் டோனிக்கு முடி வெட்டப்பட்டிருந்தது.. இந்த போட்டோவை சிறு வயதில் பார்த்திருந்தால் நாங்கள் டோனிக்கு வெட்டியது சொக்கன் மாமா தான் என சத்தியமே செய்திருப்போம்.. இதுக்கு 500 ரூபாயா.?15 ரூபாய் வாங்கிய அவர் முகம் நினைவில் வந்தது. 

வேண்டாம்பா ரெகுலர் கட்டிங் வெட்டு என்ற போது கண்ணில் நீர் வர கண்ணை மூடினேன்.... மீண்டும் ப்ளாஷ் பேக்.... அன்று சலூனில் இருந்து திரும்பும் போது வீட்டில் அப்பா கண்ணாடி முன் நின்று செல்ஃப் ஷேவ் செய்துக் கொண்டிருந்தார்.. ஏம்பா நீங்களே பண்ணிக்கிறிங்க சலூனுக்கு போகலியா.? என்று கேட்டேன்.. அப்பா மெல்ல சொன்னார்.. போகலாம்பா... ஆனா அங்க உன் சொக்கன் மாமா இருக்க மாட்டானே என்றார்.. அவர் கண் கலங்கியதற்கு அர்த்தம் இன்று புரிகிறது..

#சொக்கன்_மாமா_நினைவுநாள்_இன்று

6 comments:

  1. ஒரு நல்ல எழுத்தாருக்கு இத போதும் வெங்கடேஷ் சார்! Keep it up & carry on.

    ReplyDelete
  2. நன்றக இருக்கிறது

    ReplyDelete
  3. லைக் போடற பட்டன் இல்லியே...எப்படி லைக் போடுவதாம்..? டபுள் லைக்...

    ReplyDelete
  4. NEGIZHA VEITHU VITTEER KAL ANNA

    ReplyDelete