Thursday 23 April 2015

இளைக்க மறந்த கதை.

#வெங்கடேசும்_வெயிட் லாசும்

(3 நாள் மினி தொடர்) இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே.. இவை அனைத்தும் என்னையே குறிப்படுபவை ஆகும்..

அத்தி(அநி)யாயம் - 1

1999 வரை எனது எடை 60 கிலோவை தாண்டியது இல்லை 2000 ஆண்டு பிறந்த ராசியோ என்னவோ அதில் உள்ள சைபர்கள் போல உருண்டையாக தொடங்கினேன் 2001 ஆம் ஆண்டில் 80 கிலோ! இது சாதனையா தெரியவில்லை
முதன் முதலில் வெயிட் குறைக்க ஒரு சாதனம் வாங்கினேன்.!

நீளமான கயிற்றில் ஒருமுனையை ஒரு வளையத்தில் நுழைத்து (கிணற்று ராட்டினம் போல) அதிலிருக்கும் கைப்பிடியை பிடித்து கொள்ள வேண்டும் அந்த வளையத்தை உயரமானஜன்னலில் மாட்டி விட்டு மறு முனையில் குதிரை முதுகில் மாட்டியுள்ள சேணத்தில் இருந்து இரு பக்கமும் தொங்கும் கால்பிடிகள் போல் இருக்கும்.

அதில் இரு கால்களையும் நுழைத்து கொண்டு மல்லாக்க படுத்து கொண்டே கிணற்றில் தண்ணி சேந்துவது போல் கையால் கயிறை இழுத்தால் கால் மேலே போகும் இது போல ஐம்பது முறை பிறகு பக்கவாட்டில் ஐம்பது முறை இப்படி செய்தால் சிக்ஸ்டி பேக் சிக்ஸ் பேக் ஆகும் என்று கடைக்காரரின் பேச்சில் சில்க் ஸ்மிதா தெரிய உடனே 300 ரூபாய்க்கு அதை வாங்கினேன். (2001இல் 300 ரூபாய்)

முதல் நாள் அவர் சொன்னபடி செய்தேன் காலில் மாட்டி கயிறை இழுத்தவுடன் கால் மேலே போனது..அதே வேளையில் வலியில் உயிரும் போனது.! முடியை பிடித்துக் கொண்டு அதை பொறுத்துக் கொண்டேன்.( எத்தனை நாளைக்குதான் பல்லை கடித்துக் கொண்டுன்னு சொல்றது) ஒரு வழியாக வலி பழகியதும் ஒரு வைராக்கியம்.! 

ஏன் ஐம்பது முறை நூறு முறை செய்வோம் என அளவுக்கதிகமாய் ஆசைப்பட்டேன்... வாங்கிய 3வது நாளில் 100 முறை என்னும் மைல் கல்லை எட்டி சச்சின் போல சதமடித்து காலை உயர்த்திக் கொண்டேன் காலரையும்!4வது நாளும் ஒரு சதம்....5 வது நாள் 37, 38, 39, 4... தொம்ம்ம்.... கயிறு அறுந்து விட்டது..!

கால் தரையில் மோதி தாங்க முடியாத வலி... கைப்பிடி ஒரு பக்கமும் கால் பிடி ஒரு பக்கமும் அறுந்து இதற்காக தானே ஆசைப்பட்டாய் வெங்கடேசா என்று என்னை பார்த்து கேட்டது...வேகமாக போய் அந்த கடைக்காரரை பார்த்து நட (அறு)ந்ததை கூறினேன்... 50 முறை செய்யாது 100 முறை செய்தது தவறு என்றார்.!

இது தயாரிப்பு கோளாறில்லை உங்கள் ஆர்வக்கோளாறே என்று குறிப்பிட்டுவிட்டு அறுந்து போன கயிறை வாங்கி கொண்டு 250 ரூபாய்க்கு புதுசு தருவதாக சொன்னார்,,, மீண்டும் சிலுக்கு... மீண்டும் சிக்கினேன்..இம்முறை சரியாக 50 முறை செய்வதாக உறுதிபூண்டு, இஞ்சி ,கசகசா எல்லாம் எடுத்தேன்.

ஆனால் கால் வலியால் ஒரு 3 நாட்கள் இடை வெளி... 3 நாட்கள் கழித்து உபயோகப் படுத்த எடுத்தால் பேரதிர்ச்சி!!! துண்டு துண்டாக அறுந்து கிடந்தது புதிய கயிறு..! என் மகள் அப்போது குழந்தை.. இரவு பேரிச்சம் பழ சிரப் சாப்பிடுகையில் தவறிஒரு ஸ்பூன் கயிற்றுக்கும் ஊட்டி விட்டாள் போல கயிறு பிசுபிசுவென இருந்ததால் எலி கடித்து குதறி இருந்தது.... என் உள்ளமும் சிதறி இருந்தது.!
 
நாளை வரும்..


#வெங்கடேசும்_வெயிட் லாசும்

(3 நாள் மினித்தொடர் இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே.. இவை அனைத்தும் என்னையே குறிப்பிடுபவைஆகும்.

அத்தி (அநி)யாயம் -2

நொந்து போய் மீண்டும் கயிறு வியாபாரியை தேடிப்போனேன், அவருக்கு பதில் வேறு ஆள் இருந்தார் கேட்டதற்கு கயிறு வியாபாரி இப்போது அங்கு இல்லை அதற்கு பதிலாக கம்பெனி(?!) வேறொரு ஆளை போட்டு வியாபாரத்தை தொடங்கி இருந்தது அவரிடம் கேட்டால் பழைய ஆள் சரியில்லை ஸார்.. விக்க தெரியாம குறைச்சு வித்து இருக்கான் இந்த கயிறோட வெல 400/-ரூபாய் என்றார்.!  

குழம்பிப் போய் யோசித்து கொண்டு இருக்கும் போதே வெளியில் கூச்சல், பார்த்தால்... வாசலில் நான்கு பேர் கயிறு அறுந்து விட்டது என சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.. அவர்களிடம் புது வியாபாரி பழைய வியாபாரி என்னிடம் ஓட்டிய  ரெகார்டை ஓட்டிக் கொண்டிருந்தார்.! நான் புலம்பும் போது இதே மாதிரி எத்தனை பேர் பார்த்தார்களோ! வெறுத்து போய் திரும்பினேன்.

அடுத்த ஒரு வருடம் எந்த உடற் பயிற்சியும் செய்யவில்லை... ஆண்டு 2003! இப்போது என் எடை 90 கிலோ.! வாழ்க்கையில் வளர்வது என்பதை தவறாக புரிந்து கொண்டது போல் இருந்தது.. வாழ்க்கையின் தரமும் சற்று உயர்ந்து விட்டதால் அடுத்த வெயிட் லாஸ்முயற்சி.. வைப்ரேட்டர் பெல்லி கண்ட்ரோலர் மிஷின்!! 

இதை வயிற்றில் பெல்ட் போல கட்டிக்கொண்டு   பிளக் பாயிண்டில் கனெக்ட் செய்து ஸ்விட்ச் போட்டால் இது குலுங்கும்!!! குலுங்கும் இந்த மிஷின் வயிறை கரைக்கும் என்று உலகில் உள்ள எல்லா கடவுள்களின் மீதும் சத்யம் செய்து சொன்னார்கள், நானும் இதை (வாங்கி) கட்டிக்கொண்டேன்.!

வயிற்றில் பிள்ளையார் எறும்புகள் ஊர்வது போல கிச்சு கிச்சு காட்டியது. அது பழகியதில்லை என்பதால் கூச்சம் தாங்காமல் சிரிப்பேன். என்னை ஜன்னல் வழியாக பார்க்கும் தெருவாசிகள் கண்ணில் கவலை தெரிந்தது, பாவங்க அவரு நல்லாதான் இருந்தாரு என என் காது படவே பேசிக் கொண்டார்கள். இந்த எறும்பு ஊற கல்லும் தேயும் பழமொழி..தொப்பையை கொஞ்சம் கூட தேய்க்கவில்லை. 

ஒரு கட்டத்தில் ஷாக் அடிக்க ஆரம்பித்து "மரண பயத்தை காட்டிட்டாய்ங்க பரமா" டயலாக்கை அந்த படம் வருவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன மிஷின் அது.ஒரு நாள் அந்த மிஷின்.. உன் வயிறை குறைக்க என்னால் முடியாது என்று சொல்லி தமிழ் சினிமாவின் அம்மா கேரக்டர் போல என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டது. மிஷின் செலவு 3000 ரூபாய்... கட் ஆகாத கரண்ட் பில் 2000 ரூபாய்.... (2003ல்)

மீண்டும் ஒரு இடை வெளி இப்போது 2006 ஆம் ஆண்டு இடைவெளி கொஞ்சம் அதிகம் தான் இப்போது எனது எடை 96 கிலோ!! இப்போது டிவி நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டேன்.. நான் ஆலோசித்த டாக்டர் என் பழைய கதைகளை கேட்டு சிரித்து விட்டு ஜாகிங் போங்க அது தான் பெஸ்ட் என்றார்.

ஷார்ட்ஸ் ஷூ எல்லாம் வாங்கி அணிந்து கொண்டு ஓட ஆரம்பித்தேன் தெரு முனை தாண்டி சில வினாடிகளில் அலோ ஸார் நீங்க தானே டிவியில என்று கை குலுக்கி போட்டோ எடுத்து கொள்ள ஆரம்பித்தார்கள் நாலு அடி எடுத்து வைப்பதுற்குள் நாப்பது போட்டோ இது தான் என் வாகிங்..ஒரு வழியாக அதை நிறுத்திவிட்டு யோசித்தேன்... அட மதுரையில் இதை எப்படி மறந்தோம்.. அது...

நாளை வரும்..


#வெங்கடேசும்_வெயிட் லாசும்

( 3 நாள் மினித்தொடர்) இதில் வரும் சம்பவங்கள் யாவும் உண்மையே... இவை அனைத்தும் என்னையே குறிப்பிடுபவைஆகும்...
அத்தி (அநி)யாயம் - 3

மதுரையின் புகழ்பெற்ற ரேஸ்கோர்ஸ் மைதானம் அட இது இருக்க கவலை ஏன்..! அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு ஸ்கூட்டரில் சென்று அங்கு அதை நிறுத்தி விட்டுஅந்த மைதானத்தை 5 முறை வலம் வந்தேன்.. அதிகாலை இருளில் என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை, அருமையான உடற்பயிற்சி 5 நாட்கள் கடந்துவிட்டது.6:30 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன்.

6 வது நாள்!பேய் மழை!!! 3 தினங்கள் மதுரையே வெள்ளக்காடானது... மழை நின்ற அடுத்த நாள் மைதானம் முழுதும் தண்ணீர் வடியவே 7 நாட்கள் ஆகும் என்றார்கள்... மைதானத்து தண்ணீருடன் என் கண்ணீரும் கலந்து வெள்ளத்தை அதிகப்படுத்தியது, அந்த மழை முடிந்து.வெளியூர் வேலை ஒரு வாரம்.அது முடிந்து ஒரே நாளில் அப்படியே ஒரு வெளிநாடு பயணம் 20 நாட்கள்முடிந்தது. வந்தேன்.. 

உள்ளே விட வில்லை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் டிராக் அமைக்கிறார்கள் அடுத்த 8 மாதம் உள்ளே அனுமதி இல்லை என்றார்கள்.ஒரு நல்ல உடற் பயிற்சி அத்துடன் நிறைவடைந்தது.. அடுத்து வந்தது தான் புது யுகம். "டயட் கண்ட் ரோல் "பக்கம் போய் வந்தேன். ஜெனரல் மோட்டார் டயட், ஃபோர்டு டயட், பென்ஸ் டயட் என எல்லா கார் கம்பெனி டயட்டுகளும் எனக்கு அத்துப்படி.!

வெகு வேகமாக புகுந்து கியர் போட்டு ஆக்ஸிலேட்டரை மிதித்து புகுந்ததை விட வெகு வேகமாக அதிலிருந்து வெளியேறினேன். முதல் நாள் முழுவதும் பழம், பிறகு காய்கறி, அப்புறம் ஒரு நாளைக்கு ஒரே உருளைகிழங்கு என திகிலூட்டியது அந்த டயட் ஒவ்வொரு காய்கறிக்கும் ப்ரோட்டின்,கார்போ,மினரல் ஆகியவற்றின் அளவுகள் மனதுக்குள் போய் அதுவே என் எடையை இன்னும் அதிகமாக்கியது!

இதற்கு இடையில் ப்ரோட்டின் பவுடர்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்தேன்...
இந்த புரோட்டின் பவுடர்கள் வயிற்றுக்குள் மேக்கப் போட்டு, என்னை படையப்பா ஆக்கின, என் வழி தனி வழி என அதையும் தொடர்ந்து 6 மாதங்கள் உபயோகித்து 9 கிலோ குறைந்தேன். பிறகு ஒரு நாள் அந்த பவுடர்கள் கடையில் கிடைக்கவில்லை!

ஒரு வேளை மொத்த தயாரிப்பும் எனக்கு தயாரித்து கொடுத்து விட்டு அந்த கம்பெனி நொடித்து விட்டது போல! என் தொந்தரவு பொறுக்க முடியாமல் எனக்காகவே மெடிக்கல் கடையில் நோ ஸ்டாக் போர்டு மாட்டினார்கள்.ஒரு வழியாக அந்த டயட்டும் கைவிடப்பட்டது. அப்போது ஆம் வே கம்பெனி காரர்கள் ஆம் ஆத்மி போல நம்பிக்கை தந்தார்கள்.அவர்களை நம்பி அதை உபயோகிக்க முடிவெடுத்தேன். 

வாங்கி உபயோகப்படுத்திய ஒரு வாரத்திற்குள் ஆம் வே பயன் படுத்தினால் புற்று நோய், கிட்னி பெய்லியர், இதய நோய், என ஆளாளுக்கு கலர் கலராக வதந்தி பரப்பினார்கள்.ஆம் வே பேரை கேட்டாலே நோ வே என்று பயந்து ஓடினேன்...
அப்ப்போது ஆறுதலாக வந்தது திரெட்மில் மழையோ வெயிலோ கவலை இல்லை, யாரும் கூட நின்று போட்டோ எடுக்க மாட்டார்கள்..!

வீட்டுக்குள்ளேயே ஓடலாம் கிச்சு கிச்சு தொந்தரவு இல்லை, பவுடர்கள் தொல்லை இல்லை, மைதானம் தேவையில்லை அந்த சில காரணங்களுக்காகவே அதை பிடித்து போனது.. விலை அதிகம் தான் என்ற போதும் வாங்கினேன். முதலில் அதில் ஓடும் போது வேகம் எடுக்க 4 வைக்க சொன்னார்கள்..முதலில் 4 இல் ஓடிய நான் வழக்கம் போல் ஆர்வ கோளாறில் 3 வது நாளில் 6 வரை வேகம் வைத்து ஓடினேன்..

கால் வலிக்க ஆரம்பித்து கடையில் போய் கேட்ட போது இது போன்ற ஆர்வக் கோளாறு ஆரோக்கியத்திற்கே கோளாறு ரூல்ஸ் என்றால் ரூல்ஸ் என்றார்கள் ஏற்கனவே அறுந்த கயிறு கண்முன் வந்து போனது.. சரிதானே.. அவர்கள் சொன்னபடியே தவறாது ஓடினேன்.. எனக்கு ஏற்கனவே சூடான உடம்பு, குளித்து விட்டு தலை துவட்டினாலே அதற்கே வேர்க்கும் இப்போது ஓடுகிறேனல்லவா!

ஓடி முடித்த பின்பு அந்த மிஷின் அருகே வீட்டில் பம்பு குழாய் வைத்து தண்ணி அடித்தால் அங்கு தேங்கி இருக்கும் நீரைப் போல சிறு குளம் போல என் வியர்வை மிஷினை சுற்றி தேங்கி இருக்கும்.! எடை எல்லாம் நீராக வெளியேறுகிறது என்ற ஆனந்தம் பிறந்தது.ஒரு நாள் மிஷினில் நடந்து கொண்டிருக்கும் போது கரண்ட் கட்!

திரெட் மில்லில் திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டால் எப்படி சமாளிப்பது என்று தெரியாத நான் தடுமாறி விழுந்து விட்டேன்.விழும் போது சரியாக கால் முட்டிகளை கீழே ஊன்றி விழுந்துவிட்டேன்... தாங்க முடியாத வலி உடனடியாக மருத்துவமனை சென்றேன்..கால் ஜவ்வில் அடி பட்டு விட்டது என்றார்கள்... திரட்மில்லில் நடப்பதை நிறுத்திக் கொள்ள சொன்னார்கள்.. எவ்வளவு நாள் என்றேன்? 

குறைந்தது 3 மாதங்கள் என்றார்கள்... இந்த நேரத்தில் நான் ஒரு செஞ்சுரி அடித்தேன்! ஆம் என் எடை 100 கிலோ என்ற மைல் கல்லை எட்டியது. இப்போது...! நிறைய நிகழ்ச்சிகள் பல வெளியூர் வெளிநாடு பயணங்கள் என என்னால் அதை தொடர முடியாமல் போனது..! பிறகு திரெட் மில் என்பது ஒரு நஷ்டத்தில் மூடப்பட்ட மில் போல ஆனது! தினசரி அலுவலகம் செல்லும் போது திரெட் மில்லை பார்ப்பேன்.
வீட்டில் துவைத்த துணிகள் அதன் மீது காயப் போட்டு இருக்கும்.!

இன்று வரை துணி காயப்போட திரெட்மில் வாங்கிய ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்... இன்றும் அது ஒரு அடையாளச் சின்னமாக உள்ளது. கால மாற்றத்தில் இன்று என் எடை 105.4 .எஃப்.எம். ஸ்டேஷன் ஃபிரிகவுன்ஸியை நினைவு படுத்துவது போல் இருக்கிறதா.! இப்போது எடை குறைக்க போகிறேன் என்று சொன்னால் அதற்கே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆகவே யார் என்ன சொன்னாலும் தீவிரமாக இந்த வருடம் குறைக்கலாம் என்றுஇருக்கிறேன்!

ஆமா நீங்க ஏன் இப்போ சிரிக்கிறிங்க....!!!!!!!!!. 

  (நிறைந்தது...)



No comments:

Post a Comment