Thursday 2 April 2015

மழை..

"டாக்டரய்யா வேற வழியே இல்லிங்களா" என்றார் சாமிக்கண்ணு.

யெஸ்.. உங்க பொண்ணுக்கு இருதயத்துல ரெண்டு ஓட்டைகள் இருக்கு ஆபரேஷனுக்கு 5 லட்சம் ஆகும்... என்றார் டாக்டர் ஹரி..

அய்யா என்கிட்ட சேமிப்பு 1 இலட்சம் இருக்கு இன்சூரன்ஸ் மூலம் 2 இலட்சம் இருக்கு எப்படியாவது நீங்க பெரிய மனசு பண்ணி...

மிஸ்டர் சாமிக்கண்ணு இது சிட்டியில பெரிய ஆஸ்பிடல் இங்க கொஞ்சம் குறைஞ்சாலும் ஆபரேஷன் பண்ண முடியாது.. நீங்க அந்த 3 இலட்சத்தை கட்டுங்க நான் ஆபரேஷன் பண்றேன் ஆனா 3 நாளில் மீதியை கட்டிடுங்க..

அய்யா மீதியை  ஒரு 1 மாசத்துல தர முயற்சி பண்ணவா..

1மாசமா.! ஜோக்கடிக்கிறிங்களா நோ இம்பாசிபிள் நீங்க கிளம்புங்க எனக்கு வேலை இருக்கு..

அய்யா... அய்யா... அய்யா.. (டாக்டர் கிளம்ப சாமிக்கண்ணும் கிளம்புகிறார்)

ட்ரிங்.. ட்ரிங்.. ட்ரிங்.. அலோ நான் டாக்டர் ஹரி பேசறேன்..

சார் நான் தான் ரமணா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ஆஸ்பிடலில் இன்கம்டாக்ஸ் ரெய்டு வருது தகவல் 100%உண்மை.. டொக்

ரமணனின் தகவல் பொய்க்காது என ஹரிக்கு தெரியும்.. பரபரவென செயல்பட்டான்.. தன் மனைவியிடம் பேசி ஆடிட்டரிடம் பேசி நிமிர்ந்தான்..

எதிரில் சாமிக்கண்ணு..! "அய்யா நீங்க போகலை"

இல்லிங்கய்யா எப்படியாவது...

ப்ளீஸ் நீங்க  கிளம்புங்க கெஞ்சாதிங்க எனக்கு முக்கிய வேலை இருக்கு..

சாமிக்கண்ணு சென்ற அடுத்த 5 நிமிடத்தில் ஆஸ்பிடலில் ரெய்டு வர அடுத்த 8 மணிநேரம் ஹரி இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வசமானான்..

எல்லா டாக்குமெண்டும் பார்த்து சந்தேகத்திற்குரியதை அவர்கள் எடுத்து செல்ல இவனிடம் கையெழுத்து வாங்கி வீடு வர அதிகாலை 4 மணி..!

மனைவி கதவை திறந்தவுடன் "நல்லவேளை முன் கூட்டியே சொன்னிங்க என் தம்பி ராஜாவை வரச்சொல்லி பணத்தை அவங்கிட்ட கொடுத்துட்டேன்" என்றாள் கிசு கிசுப்பாக..

ஹரி அலட்சியமாக தலையசைத்த போது மனைவியின் போன் ஒலித்தது.. என்னங்க என் தம்பி ராஜா தான் பேசறான் என்றாள். ஓடிப்போய் பேசினான்.. சொல்லுங்க மச்சான்..

மாமா அக்கா 8 பெட்டி தந்தாங்க ஆனா இப்ப 7 தான் இருக்கு சரியான்னு கேளுங்க.. எரிச்சலுடன் ஹரி விசாரித்து காணாமல் போனது பச்சை நிறப்பெட்டி என்றதும் நொந்து போனான்..

அறிவிருக்கா உனக்கு அதுல தான் வைர நகை பூரா இருந்திச்சு மிச்ச 7 பெட்டியில இருக்குற காசும் அதுவும் கிட்டத்தட்ட ஒண்ணு.. உன் தம்பி வேஸ்ட்டு என கத்தினான்..

என்னங்க பண்றது நீங்க அவசரமா சொன்னிங்க.. அதான் வேணுமின்னா போலீசுல என்றவள்.. நாக்கை கடித்தாள்.. ஏய் பூரா பிளாக் மணி.. போலீசுக்கு சொல்ல முடியுமா..

போச்சு போச்சு எல்லாம் போச்சு கிட்ட தட்ட 1 கோடி நாசமா போச்சு.. வெளியே இடி இடித்தது.. மழை வரும் அறிகுறி.. இப்போது காலிங்பெல் ஒலித்தது.. கதவை திறந்தான்..

சாமிக்கண்ணு..! கோபத்தில் கத்திவிட்டான்.. யோவ்  அதான் முடியாதுன்னேட்டேன் இல்ல இங்க வந்து ஏன்.. தொல்........

சாமிக்கண்ணு கையில் பச்சைப்பெட்டி ஒரு நொடி யோசித்தவன் அய்யா வாங்க உள்ளே என்றான்.. டாக்டரய்யா இந்த பெட்டி ஆட்டோவுல இருந்தது பெட்டியில் உள்ள கவருல உங்க விலாசம் போட்டு இருந்திச்சு அதான் இங்க வந்தேன் என்றார் சாமிக்கண்ணு .

அந்த பெட்டியை வாங்கி மனைவியிடம் தந்து கண்ணாலேயே எல்லாம் சரியா இருக்கா பாரு என சைகை செய்தான்.. அவளும் அதை வாங்கி உள் அறைக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளிப்பட்ட அவள் முகமே எல்லாம் சரியாக இருக்கிறது எனச் சொன்னது.. மகிழ்வான ஹரி அய்யா நீங்க செஞ்ச உதவிக்கு எந்த பணமும் இல்லாம உங்க பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண முடிவெடுத்துட்டேன் சந்தோஷமா என்றவனை விரக்தியாக பார்த்தார் சாமிக்கண்ணு.. டாக்டரய்யா உங்க ஆஸ்பத்திரில இருந்து வந்த ஒரு மணி நேரத்துல என் பொண்ணு இறந்துடுச்சுங்க சுடுகாடு போயி மத்த ஏற்பாடு பண்ண ஆட்டோவில போகும் போது தான் இந்த பெட்டி கிடைச்சது..

நாளைக்கு தகனம் பண்றோம் முடிஞ்சா வாங்கய்யா தோளில் இருந்த துண்டால் வாய் பொத்தி அழுதபடி எழுந்து போனார் சாமிக்கண்ணு..

இப்போது பலத்த இடியோசையுடன் சோ வென பெரு மழை கொட்டத் துவங்கியது...!

நீதி : நல்லோர் ஒருவர் உள்ளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...

No comments:

Post a Comment