Thursday 23 April 2015

தொலைந்தும் தொலையாத நினைவுகள்.

சேலத்தில் என் தந்தை செல்வச் செழிப்புடன் வாழ்ந்த காலம். எனக்கு அப்போது 8 வயது தம்பிக்கு 6 வயது.. எங்கள் வீடு இருந்தது நாராயண நகரில் அப்பாவின் ஓட்டல் கடை இருந்தது குகையில்.. (சேலத்தில் ஒரு இடத்தின் பெயர்) இது போல ஒரு கோடை விடுமுறையில் நானும் என் தம்பியும் வீட்டுக்கருகே விளையாடும் கொண்டு இருக்கையில் அந்த பிரசித்தி பெற்ற பிரயாணம் தொடங்கியது.

யார் கேட்டது எதனால் அப்படி ஒரு முடிவெடுத்தோம் என்பதெல்லாம் என் நினைவு அடுக்குகளில் இல்லை. எங்கோ இடுக்கில் மாட்டிகிச்சு போல. அப்பாவை பார்க்க கடைக்கு போலாமாடா என்று நான் கேட்டது நினைவுக்கு வந்தது. தொடங்கியது அந்த பிரசித்தி பெற்ற பயணம்..! நாராயண நகர் to குகைஎன்னோடு விளையாடிய அந்தத் தெரு நண்பர்களும் என்னைத் தொடர்ந்தனர் ( அன்னிக்கே நமக்கு நிறைய ஃபாலோயர்ஸ்)

கல்லாங்குத்து வழியாக போஸ் மைதானம் வந்து ஜெயா தியேட்டர் & நியூசினிமா கடந்து விட்டால் அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் தான் அப்பாவின் கடை என்பது கூகுள் மேப் போல என் மூளையில் பதிவாகி இருந்தது. அடிக்கடி வண்டியில் என்னை அழைத்துப் போகும் வழி என்பதால்.. ஆனால் இம்முறை நடந்து போகிறோம் ஒரு குட்டி மாநாடு போல போஸ் மைதானத்தில் பாம்பாட்டி வித்தை நடந்து கொண்டிருக்க அங்கே செட்டிலானோம்.

தமிழ் சினிமா டைரக்டர்கள் சொல்ற மாதிரி இங்க கட் பண்ணி எங்க வீட்டுகிட்ட சீன் ஓபன் பண்ணா தெருவே களேபரமா ஆகி குழந்தைகளைக் காணாத பெற்றோர்கள் அவர்களைத் தேடி கடைசியில் என்னோடு மற்ற பிள்ளைகள் இருந்தாங்கன்னு தெரிஞ்சுகிட்டு எங்க வீட்டுக்கு வந்து நிற்க.. அதே நெருப்பு எங்க வீட்டுக்கும் பத்திக்கிச்சு.. எங்களை அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன்னு அப்பவே சிலர் அந்த காலத்து வாட்ஸப் செய்திகளாக மாற.. நாங்கள் போன திசைக்கு நேர் எதிரில் எங்களைத் தேடி பல படைப்பிரிவுகள் கிளம்பின.

வீட்டில் இருந்து கடைக்கு தகவல் போக அப்பா விழுந்தடித்துக் கொண்டு வீடு திரும்பினார் எங்கள் உறவினர் அண்ணன் அசோகன் அவர்கள் அப்போ சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவரது ஆலோசனையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. கட் பண்ணா இங்க கடைசி வரை பாம்பாட்டி கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப் போவதில்லை என்பது எனக்கு தான் உறைத்தது.. சலிப்புடன் அங்கிருந்து கிளம்பினோம்.

போஸ் மைதானத்தை தாண்டி சாலையை கடந்து இடது புறம் திரும்பினால் ஜெயா தியேட்டர் ஆனால் சாலையின் மறுபுறம் உள்ள மைதானத்தில் கழைக்கூத்தாடி வித்தை நடந்து கொண்டிருக்க அடுத்த எண்டர்டெயின்மெண்டை ரசிக்க எங்கள் பயணம் அங்கு தொடர்ந்தது. கட் பண்ணா இங்கே எங்க அம்மா அழ அப்பா திட்ட ஊரே எங்களைத் திட்ட அங்கு நிலவரம் கலவரமாக இருந்தது.

இந்த வரியை டைப் செய்யும் போது நினைவு இடுக்கில் இருந்து நினைவுக்கு வந்த ஒன்று.. என் ஃபாலோயர்களில் என் தங்கை (பெரியப்பா பெண்) ந்நாகலெட்சுமியும் அவளோடு கல்பனா என்ற பெண்ணும் எங்களோடு வந்தது.. பெண் பிள்ளைகள் இருந்ததால் களேபரம் அதிகமானது.. எல்லோரது பெற்றோர்களும் எங்கள் வீட்டு வாசலில் கதறி அழுது கொண்டிருக்க புதிதாக அப்பக்கம் வந்தவர்கள் "யாருங்க இந்த வீட்டுல யாரும் இறந்துட்டாங்களா" அப்படின்னு துக்கம் விசாரித்து போனார்கள்.

அப்பாவின் உத்தரவுப்படி கடை ஊழியர்கள் தலைமையில் அடுத்த ரெஸ்க்யூ குழு கிளம்பியது.. இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களைத் தேடிய அத்தனை குழுவினரும் போஸ் மைதானத்தை கடந்து போயிருக்கிறார்கள் நாங்கள் கும்பலில் இருந்ததால் கவனிக்கவில்லை. கடைசியில் ஓடியாடி விளையாடி களைத்து நாங்களே அப்பா கடை அருகே வந்துவிட்டோம் பத்தடி தூரத்தில் கடை.. டேய் வெங்குடு.. எங்க கடை வடிவேலு மாஸ்டர்.!

கடை வரை வந்த எங்களை அப்பாவிடம் அழைத்து சென்று விநாயகர் போல பரிசைப் பெற்றுக் கொண்டார்.. எல்லா பெற்றோருக்கும் தகவல் போக அனைவரும் எங்கள் ஓட்டலுக்கு வந்து பிள்ளைகளை அழைத்து செல்ல எல்லோருக்கும் ஸ்வீட் பாக்கெட் தந்து அவர்களை வழியனுப்பிவிட்டு அப்பா திரும்பினார்.. நான் கேட்டேன் அப்பா ஏன் இவங்க எல்லாம் அழுகுறாங்க... அப்போது விட்டார் ஒரு அறை.. இப்பவும் நினைச்சாலே வலிக்குது..

(கழைக்கூத்தாடி காட்சி ஒன்றை டிவியில் பார்த்த எப்ஃக்டில் இந்த கொசுவர்த்தி சுருள் ஃப்ளாஷ் பேக்)

No comments:

Post a Comment