Wednesday 1 April 2015

காஷ்மீர் - Edited

காஷ்மீர் கலாட்டா -13 குல்மார்க் (குல்மாக்)

#இமயம்_கண்டேன்

குல்மாக் ஶ்ரீநகரில் இருந்து 52 கி.மீ தூரம்..! கிட்டத்தட்ட சென்னை-செங்கல்பட்டு தொலைவு இதில் மலைப்பயணம் 30 கிலோமீட்டர்கள்..நம் ஊட்டி போல இருக்கும். குல்மாக் வந்தவுடன் ஒரு உற்சாக விசிலடிப்பீர்கள், ஏனெனில் உங்கள் கண்முன் தோன்றும் அழகு அப்படி.! எதிரே பிரும்மாண்டமான பனிமூடிய இரு சிகரங்கள் வரவேற்கும்.! ஒன்று அபஃர்வாட் சிகரம் மற்றொன்று கோங்தாரி சிகரம்..!


அபஃர்வாட் 4200 மீட்டர் உயரமும் (13,780 அடி) கோங்தாரி 3,747 மீட்டர் உயரமும் (12,293அடி) கொண்டவை.கிட்டத்தட்ட பாதி எவரெஸ்ட் உயரம்.! அது மட்டுமின்றி இங்குள்ள மிகப் பெரிய அட் ராக்ஷன் ஆசியாவின் மிக உயர்ந்த கேபிள் கார் சுற்றுலா.! இது தான் உலகின் இரண்டாவது மிக உயரமான கேபிள் ஸ்டேஷன்.!


குல்மாக் முற்கால மன்னர்கள் யூசுப்ஷா மற்றும் ஜஹாங்கீரின் கோடை வாசஸ்தலமாக இருந்த இடம். அவர்கள் ஓய்வெடுக்க விடுமுறையை கழிக்க இங்கு அடிக்கடி வருவார்களாம்.! குல்மாக்கின் பழைய பெயர் கெளரிமாக்.! சிவ பெருமானின் மனைவி பெயர்...! இதை குல்மாக் என மாற்றியவர் யூசுப் ஷா தான்..! இதற்கு அர்த்தம் ரோஜாக்களின் பிரதேசம்..!


கெளரிமாக் குல்மாக் ஆனதை நல்லவேளை யாரும் கண் "மோடி"த்தனமாக இதுவரை எதிர்க்கவில்லை என்பது ஆறுதல்..! கோங்தாரியில் கேபிள் கார் செல்லும் இடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது..! முதல் நிறுத்தம் காண்ட்லா இது 2,600 மீட்டர் உயரம் 8,530 அடி..! இரண்டாவது நிறுத்தம் கோங்தாரி வேலி 3,747மீட்டர் உயரம் 12,293 அடி..! ஓகே இப்ப கேபிள் கார் ஏறலாமா.!


காதடைக்கப் பஞ்சும் கையுறைகள் பனிக் குல்லாய்கள் எல்லாத்தையும் எடுத்துக் கோங்க கேபிள் ஏறுவதற்கு முன் உச்சா போய்விட்டு வந்துவிடவும்.. இல்லாவிட்டால் அது தானாக வந்து உங்களை கேவலப்படுத்திவிடும்.. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தடா.. கண்ணை பயத்துல மூடிக்க மாட்டிங்க தானே அப்ப வாங்க பயணிக்கலாம்

சிலிர்ப்பூட்டும் கேபிள் கார் பயணம்.. நாளை  (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -14

ஒரு கேபிள் காரில் 6 பேர் ஏறலாம் மெதுவாக தரையோடு கிளம்பி ஜிவ்வென்று மேலே ஏறும்.. வயிற்றுக்குள் லட்சம் பிள்ளையார் எறும்புகள் ஊறும், காதை அடைக்காவிட்டால் கிர்ரென்று இருக்கும், வலிக்கும். ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் சுற்றிலும் பனிமலைக்கு நடுவே நாம் இருப்போம்.! என்ன ஒரு அற்புதம்.!


அப்போது நம்மை ஒரு பருந்து போல நினைத்துக் கொள்ளலாம். . சாகசப் பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது திகில் & சிலிர்ப்பு அனுபவம்.! கேபிள் கார் இயங்குவது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான்... இதில் மதியம் 3 மணிக்குள் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். 


12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் அனுமதி. பெரியவர்களுக்கு 500 ரூபாயும் சிறுவர்களுக்கு 250 ரூபாயும் கட்டணம் (2013ஆம் ஆண்டில்) ராணுவத்தினருக்கு சிறப்பு சலுகை உண்டு..! முதல் நிறுத்தம் 9 நிமிடப்பயணம், இரண்டாவது 12 நிமிடப்பயணம்.! இதய நோய், ஆஸ்த்துமா உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.! 


திங்கள் அன்று விடுமுறை...! வானிலை சரியில்லாத நாளில் இயங்காது.! 12000 அடியில் பெரிய பனிச்சறுக்கு மைதானத்தில் உங்களை இறக்கி விடுவார்கள்..! அங்கே விளையாட ஆரம்பிக்கும் உங்கள் பிள்ளைகள் இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொன்னால் இங்கு டிக்கெட் பணத்தை நீங்கள் யாரும் தரவேண்டாம்.


இலவசமாக நான் கூட்டிச்செல்கிறேன்.! அடுத்தபடியாக நிறுத்தம் மூன்று என ஒன்று

உள்ளது.! அங்கு செல்லக் கேபிள் கார் இல்லை.. அது சாகசமோ சாகசம் நிறைந்த பாதை. மிக மிக அபாயகரமானப் பாதை... விதி வலியது அல்லவா.! எங்கள் படபிடிப்பு அங்கு தான்.! புதிய லொகேஷன்கள் அங்கு தான் இருக்காம்..!   (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -15

நிறுத்தம் 3 அபாயகரமான பாதை..குதிரை மூலம் தான் மலை ஏற முடியும். அதுவும் கரடுமுரடான பாதை..! அந்த இடத்திலிருந்து மேலே செல்ல நூற்றுக்கணக்கான குதிரைகளும் அதற்கு கைடுகளும் இருந்தனர். ஒரு ஆள் மேலே போய் வர 2200 ரூபாய்..! (இது 2013இல்) மேலே உச்சி என்பது நான்சொன்ன 12ஆயிரம் அடி.!


அந்த பனிசறுக்கு மைதானத்தின் பக்கத்து வீடு.! அதாவது அடுத்த மலை.. அதை விட இது 1000 அடி உயரம் அதிகம்..! காட்டாறுகள், பனிச்சகதி, வழுக்கும் பனி, (இது கண்ணாடி மாதிரி இருக்கும் )கால் வச்சா அவ்ளோ தான் சர்ருன்னு இழுத்து விட்டுடும் இத்தனையும் சொல்லி விட்டு போகலாமா என்றார்கள்..! 


நானும் கைப்புள்ள கணக்கா வாண்ட்டடா வண்டி (குதிரை) ஏறிட்டேன்..! இந்த வழியில் மேலே போகாதீர்கள், இந்த பயணம் சட்டப்பூர்வமானதல்ல, உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.. போன்ற அறிவிப்பு பலகைகளை அலட்சியம் செய்துவிட்டு பலர் மலை ஏறிக் கொண்டிருந்தனர்.! 


அதில் அதிகம் பயமுறுத்தியது கைடு சொன்ன ஒரு வார்த்தை பாகிஸ்தான் இங்கு இருந்து 55கி.மீ தான் என்று.! ஏதோ உசிலம்பட்டிக்கு போற மாதிரி சொன்னார்.!ஒரு கணம் அனைவரும் தயங்க, அட அது அந்த மலைக்கு அந்த பக்கங்க என்றார்.! திரும்பி வரும் வரை நான் மலை உச்சியை பாத்துகிட்டே வந்தேன் யாராவது பாகிஸ்தான்காரங்க வர்றாங்களானு.! ஆனா கடைசி வரைக்கும் யாரும் வரலை.!


ஒரு வேளை தூரத்தில் பைனாகுலர் வழியாக என்னை அவங்க பார்திருந்தா நம்ம கேப்டன் தான் வர்றாருன்னு நினைச்சு பயந்துருப்பாங்க போல. மலை மீது குதிரைச்சவாரி..! அடடா எவ்வளவு திரில்லா இருந்தது தெரியுமா.!  இருங்க குதிரை சவாரி பற்றி நாளைக்கு சொல்றேன். (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -16

முதலில் குதிரைச் சவாரி என்பது பற்றி பார்க்கலாம்..குதிரைமீது அமர்ந்து சம தளத்தில் நிலத்தில் ஓட்டுவது வேறு, மலையேறுவது என்பது வேறு..! அதற்கு முன் குதிரை ஏறி அமர்ந்து பார்க்கவும்.பஸ்ஸின் கடைசி சீட்டில் அமர்ந்து குண்டும் குழியுமான சாலையில் பிரயாணம் செய்வது போலவே இருக்கும்..! 

இதுவரை ஓரிரு முறை கொடைக்கானலிலும், மெரினா பீச்சிலும், குதிரை ஓட்டிய அனுபவத்தை தவிர எனக்கு பெரிய அனுபவம் ஏதுமில்லை..! நான் குதிரையில் அமர்ந்திருந்ததே பைல்ஸ் வந்தவன் போல பரிதாபமாக இருந்தது..! ஒரு புறம் சாய்ந்து கொண்டே சைக்கிள் பழகுபவன் போல அமர்ந்திருந்தேன்...! 

மற்றவர்களுக்கு எல்லாம் மட்டக் குதிரை தந்து விட்டு எனக்கு மட்டும் ஜாதிக்குதிரை தந்தார்கள்.! அதுதான் என் வெயிட் தாங்குமாம், (பின்னே குதிரை மேல யானையை ஏத்துனா) அது நல்ல உயரம்...! குதிரையின் முதுகு விளிம்பே என் காதுக்கருகே இருந்தது அதன் மீது ஏறி அமர்ந்து பார்த்தேன்..! 

வீட்டு மொட்டைமாடி கைப்பிடி சுவர் மீது வெளிப்புறம் காலை தொங்கப் போட்டு அமர்ந்தது கீழே பார்த்தால் எப்படி இருக்கும்.! அது போல் இருந்தது.. இதில் அது ஆடி அசைந்து நடக்கும் போது நானும் அதற்கு எதிர்த் திசையில் அசைந்து அதன் சேணத்தை சரித்து விட்டேன்..!

அதற்கு காஷ்மீரியிலோ அல்லது உருதிலோ அந்த குதிரைக்காரன் என்னை பார்த்து சொன்னது சத்தியமாக நல்ல வார்த்தை கிடையாது என்பது அப்பட்டமாக தெரிந்தது. முதலில் சில கிலோ மீட்டர் தூரம் சம தளம் அதிலியே இந்த ஆட்டம்..! அடுத்து மலைப்பாதை ஏற ஆரம்பித்ததும் என் குலை நடுங்கலாயிற்று..!

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா 17

அப்படத்தின் நடிகர்கள் குதிரையேற்றம் பழகியவர்கள். அதனால் அவர்கள் இயல்பாக இருந்தனர் ஆனால் தரையிலிருந்து 12ஆயிரம் அடி உயரம் செல்ல ஒரு குதிரைப்பயணம் என்பது அவர்களுக்கும் புதிது தான். இருந்தாலும் என் குதிரை தான் அங்கிருப்பதிலேயே உயரமானது. அது தந்த பயம் அதனினும் உயரமானது.

நன்கு மலையேறி பழக்கப்பட்ட இக்குதிரைகளே மேடு பள்ளங்கள் பாறைகளில் தடுமாறி தான் ஏறுகின்றன, முன்பை விட குலுங்கல் அதிகம், என்னால் உட்காரவே முடியவில்லை. உடன் வந்த கைடுக்கு குதிரையை வழி நடத்தி செல்வதை விட அடிக்கடி சரிந்து கொண்டிருக்கும் என்னை தாங்கிப்பிடிப்பது தான் வெ(பொ)றுப்பு.

அவ்வப்போது குதிரையை குச்சியால் குத்துவது போல என்னையும் குத்திக் கொண்டே வந்தான்..60 அடியில் வலப்புறம் பெரிய பள்ளம் அதை ஓரக்கண்ணால் பார்த்தபடி என் வயிற்றில் ரசம் தயாராகிக் கொண்டிருந்தது.. (அதாங்க புளியைக் கரைத்தது) வந்தது பாருங்கள் ஒரு பெரிய ஏற்றம்...! 

அதில் ஏறிய குதிரை வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாக பக்கவாட்டில் ஒரு சிறு பள்ளத்தை ஜம்ப் செய்ய நான் கடிவாளத்தை விட்டு விட தூக்கி வீசப்பட்டேன்.. சினிமாவில் ஹீரோவிடம் அடிவாங்கும் ரவுடிகள் பறப்பது போல அந்தரத்தில் நான் பறக்க.. என்னுடன் வந்தவர்களின் அலறல் பின்னணி இசைக்க.. குதிரைகள் கனைக்க.. இந்த இசைகளுக்கு சற்றும் பொருந்தாத இசையுடன் விழுந்தேன்...

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -18

குதிரையிலிருந்து நான் தூக்கி வீசப்பட்ட இடத்தில் வலது புறம் பாறைகள் 60 அடி பள்ளம் இடது புறம் புல்வெளி.. எனக்கு கடன் தந்த நல்ல கடன்காரன் ஒருவனின் வேண்டுதல் போல.. நான் புல்வெளியில் விழுந்தேன், லேசான சிராய்ப்பு தான். எல்லோரும் ஓடி வந்து தூக்கிவிட ஒண்ணுமில்லையே என வழிந்து எழுந்தேன்.

அந்த கருப்புக் குதிரை என்னை பார்த்த பார்வையில் "ஜஸ்ட் மிஸ்சுடா" எனக் கேட்டது போல இருந்தது.. இந்த இடத்தில் என் கனத்த உருவத்தை கேலி செய்பவர்களுக்கு.. அங்கே பல சேட்ஜிக்கள் விக்ரம் பட அம்ஜத்கான் மாதிரி XXXL சைசில் சர்வ சாதாரணமாக குதிரையில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

சொல்லப்போனால் கனத்த உருவம் கொண்டவர்கள் மலையேறுவது சிரமம் என்பதற்காகவே தனிக் குதிரைகள் அங்கு இருக்கின்றன.. சிலருக்கு அது கன்னுகுட்டி அளவில் தெரிந்தது என்றால் அவர்களது அளவை கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக மேனகா காந்தி பார்த்திருந்தால் நாங்களெல்லாம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்போம்.!

ஒரு வழியாக 8000 அடி உயரத்தில் ஒரு டீக்கடையில் சாப்பிட்டு விட்டு பயணத்தை துவக்குகையில் மூச்சு திணற ஆரம்பித்தது. தூய ஆக்சிஜன்.! வாயைத்திறந்து சுவாசிக்க வேண்டியது இருந்தது. இடையில் காட்டாறு ஒன்று பெரும் வெள்ளப் பெருக்கோடு குறுக்கிட குதிரைகள் மிரண்டன. மணி மதியம் 3 ஆகிவிட இனி உச்சிக்கு போய் திரும்புவது கடினம் என்று அன்று திரும்பி விட்டோம்.

மீண்டும் மறு நாள் அதே பயணம்.! என்னை பார்த்தவுடன் நேற்றைய கைடு எனக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டும் அவன் குதிரை கனைத்து விட்டும் மறைந்தனர். எங்கிருந்தோ ஒரு தெய்வம் வந்தது, அவன் பெயர் ரஹீம் 20 வயது இளைஞன்.. குதிரை சவாரி பற்றி மிகப் பொறுமையாக எனக்கு சொல்லிக் கொடுத்தான்.

குதிரை மீது அமர்ந்து மேடு ஏறுவதை விட இறங்குவது அபாயமானது. அது உச்சியில் நிற்பவனை பின்னால் இருந்து தள்ளியது போல வேகமாக இருக்கும்.! வெறும் 15 அடிச் சரிவு என்றாலும் உயரமான குதிரை மீது அமர்ந்து அங்கிருந்து செங்குத்தாக இறங்குவது அடி வயிற்றில் கத்தி செருகியது போல இருக்கும்.

அதுவும் இரு புறமும் 200 அடி கிடு கிடு பள்ளம் எனும் போது நினைத்து பார்க்கவும். ரஹீம் தான் என் பயம் போக்கினான்.. குதிரை மீது எப்படி அமர்வது.. நம் உடலை குதிரைச் சவாரியின் போது வைத்திருக்கும் முறைகள் பற்றி அழகாகச் சொல்லி சவாரியின் சூட்சுமம் அதன் சேணத்தில் தான் இருக்கிறது என்றான். பாடம் அது.

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -19

குதிரையின் முதுகிலுள்ள சேணத்தில் நன்றாக நடுவில் அமர வேண்டும். உடம்பை ரிலாக்சாக வைத்துக் கொள்வது அவசியம். சேணத்தின் கால் நுழைக்கும் வளையத்தில் சரியான அளவில் கால்களை  நுழைக்க வேண்டும். சைக்கிள் மிதிக்கும் போது  பெடலில் உங்கள் பாதம் இருக்குமே அந்தளவு நுழைப்பது சரியானது.

இரு புறமும் கால்களை சரியாக பொருத்தி வைத்து கொள்வது முதல்படி , இது சரியா என்பதை சமதளத்தில் குதிரை நடக்கும் போது எழுந்து நின்று பார்க்கவும். கால்கள் சரியாக இருந்தால் எழுந்து நிற்க முடியும். அமரும் இடத்தில் சேணம் அசைய அசைய அதன் திசையிலேயே நமது பிருஷ்டங்களை அசைக்க வேண்டும்..!

நான் எதிர் திசையில் அசைத்து சேணம் அவிழ்ந்தது இப்போது ஞாபகம் வந்தது..! மேடு ஏறும் போது நம் உடலை முன்புறம் சாய்த்துக்கொள்ள வேண்டும் பள்ளத்தில் இறங்கும் போது உடலை பின் பக்கம் சாய்த்துக்கொள்ள வேண்டும்.! ஒரு சிறிய மைதானத்தில் பயண ஓய்வுக்கு நிறுத்தும் போது சொல்லிக்கொடுத்தான்.. 

இப்போது தொடங்கிய பயணத்தில் நான் புது மனிதனானேன்..! மீண்டும் பயணம் ஆரம்பித்த போது குதிரைச் சவாரியின் சுகம் அறிந்தேன்.!அடுத்த 6000 அடிப்பயணம் இனிதானது..! மிக எளிதாக என்னால் குதிரை ஓட்ட முடிந்தது சொல்லிக் கொடுப்பவன் கலைஞனாக இருந்தால் எல்லா கலைகளும் மிகச்சுலபமே.! 

சூட்சமம் புரிந்து விட்டால் எதுவும் இன்பமே..! எனத் தெரிந்தது. அடுத்த இரண்டு நாட்களும் 13000 அடி உயரத்திற்கு கைடு உதவி இல்லாமல் நானே குதிரையை ஓட்டிச் சென்று வந்தேன்.! மலைஉச்சியில் தான் எங்கள் படபிடிப்பு. இதற்குள் 3 முறை குதிரையில் இருந்து விழுந்து அடிபடாமல் தப்பியதும் நடந்தது.!

காட்டாற்று வெள்ளமும் பனிபடர்ந்த உச்சியும் பனிச்சகதியும் பெரிய பிரமிப்பை தரவில்லை குதிரைச் சவாரியைப்போல.! இப்போது நன்கு குதிரைச் சவாரி பரிச்சயம் ஆகி இருந்தது எனக்கு. ஆனால் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது மீண்டும் குதிரையில் இருந்து விழுந்தேன் இப்போது பலத்த அடியுடன்..! (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 20

குதிரையில் இருந்து விழுவது மிகப்பெரிய வலி.! அதை அனுபவித்தேன் ஒரு சிறு தவறினால்.! அதுவும் நன்கு பழகிய பின்பு சிறிது அஜாக்ரதையாக இருந்தாலும் ஆபத்து என்பதை..! அதை பார்க்கும் முன் என்னை சுமந்த குதிரையை பற்றியும்.. குதிரைகளை பற்றியும் பார்க்கலாம்..!

குதிரைகளை பற்றி நான் படித்தது உண்டு மனிதன் பழக்கும் மிருகங்களிலேயே அன்பை அதிகம் எதிர்பார்க்கும் மிருகம் குதிரை..! குதிரைகளோடு தினமும் பேசவேண்டும் குறைந்தது அரைமணி நேரமாவது, அப்போது தான் அது ப்ரியமாக அதன் எஜமானனிடம் பழகுமாம்...!

மூர்க்கமாகி விட்டால் தன் மேலுள்ள மனிதனை யானையைப் போல் குதிரையும் தள்ளிவிட்டு விடும்.! அம்மா அமைச்சர்களை நீக்குவது போல.! ப்ரியமாக பேசுபவர்களை அப்படித் தள்ளாதாம்.! அதுவும் அதன் முகத்தை கைகளால் வருடிக் கொடுத்து கொண்டே பேசுவது அதற்கு ரொம்பப் பிடிக்குமாம்..! 

அடுத்து அதற்கு உணவு தருவது..! பெரும்பாலும் தன் எஜமானன் கையால் சாப்பிடும் குதிரைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்குமாம்..! ரேஸ் ஜாக்கிகள் கூட குதிரை உணவு அருந்தும் நேரத்தில் அங்கு தன் கையால் தான் உணவளிப்பார்கள்..! அடுத்து தண்ணீர் காட்டுவது..! குதிரைக்கு மிகவும் பிடித்தது நீர் அருந்துவது...! 

அதிலும் நாங்கள் மலையேறிய போது காட்டாற்று வெள்ளத்திற்குள் இறங்கி எங்களை அக்கரை சேர்த்த குதிரை மிரட்சியுடன் தான் நீரை பார்த்தது..! ஆனால் அதை கடந்து ஓடை போன்ற பகுதிக்குள் நுழைந்ததும் ஆவலாகப் போய் நீர் அருந்த துவங்கியது..! 

நீர் நிலைகளை கண்டதும் கடந்து செல்லாது இரண்டு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து வாலை தூக்கி மீண்டும் முன்னால் நகர்ந்து முன்னும் பின்னும் முரண்டு பிடித்தால் அதற்கு சரக்கு(நீர்) தேவைப்படுகிறது என அர்த்தம்..! இப்போது அதனை நீர் அருந்த அனுமதித்தால் எந்த சைட்டிஷ்ஷும் இல்லாமல் ஃபுல்லாக குடித்துவிட்டு ஒரு கனைப்பு விக்கல் மாதிரி.! அதை சந்தோஷப்படுத்த வேண்டும். அது முக்கியம். 

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 21

எனக்கு முதல் நாள் வந்த குதிரையின் பெயர் கல்நாயக்.. கருப்புக் குதிரை கல்நாயக் தொடர்பு முதல் நாளே முடிந்துவிட்டது.! அடுத்த 5 நாட்களும் என் செல்லம் பாதல் பிஸ்கெட் பழுப்பில் இருக்கும் என் அழகு தேவதை! 100 கிலோ வெயிட்டில் என்னை என் தாய் கூட சுமந்திருக்க மாட்டாள்.. பாதல் சுமந்தது..! 

பொதுவாக குதிரைகளின் மொழி அதன் கனைப்புச் சத்தம், அதிலும் பெண் குதிரைகள் தான் அதில் சிறந்தவை ரஹீம் போன்ற குதிரைக்காரர்கள் அதற்கு கனைப்பிலேயே பாஸ்வேர்டு வைத்திருந்தார்கள்.! நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி போல ப்ப்ப்ப்ர்ரூரூவா, ப்ர்ர்ர்ர்ர்ர்ரூவா என்றும்... கேரள ஆட்டோ டிரைவர்கள் ஸ்டைலில் ச்ச்ச்ச்ச்ச் என்றும் ஒலி எழுப்புகிறார்கள்..!

இதில் முதல் ப்ப்ப்ப்ர்ரூரூவா வலது என்றும்.. அடுத்த ப்ர்ர்ர்ர்ர்ரூவா இடது என்றும் ச்ச்ச்ச்ச் என்பது மெதுவா போ இப்படி அர்த்தங்கள்.! எனக்கு மிமிக்ரி செய்யத் தெரியும் என்பதால் வெகு சுலபத்தில் அதை நான் கற்றுக் கொண்டேன்..! ரஹீமுக்கு தான் நான் அவர்கள் பாஸ்வேர்டு மொழியை கற்றது பெரிய ஆச்சர்யம்..! பஹூத் அச்சா பய்யா... என்று சொல்லிக்கொண்டே இருப்பான்..!

பாதலுக்கு காரட் மிகவும் பிடிக்கும் என்றான் ரஹீம்..! 2வது நாள் ஶ்ரீநகரில் இருந்து செல்லும் போதே ஒரு மூட்டை காரட் வாங்கிச் சென்றோம்..! பாதலுக்கு ஏகக் குஷி, உற்சாகமாக கனைத்தாள் எனக்கும் பாஷை இப்போது தெரியுமாதலால் பாதலுடன் காதல் மொழியில் கனைத்தேன்.! அண்ணனும் கனைத்தேன் அவளும் கனைத்தாள் 

கனைப்பில் கனெக்டானோம். அவள் உருது காஷ்மீரிக் குதிரை நான் தமிழன்.! அவளுக்கு மொழி புரிகிறதோ இல்லையோ.. தினமும் அவளோடு ஏதாவது பேசுவேன் "ஏன் அந்த ஓடையிடம் வந்த போது தடுமாறுன, காரட் நல்லா இருந்துச்சா, தண்ணி குடிக்கிறியா இப்படி என் சம்பாஷணைகள் இருக்கும்..! சில நேரம் தலையாட்டுவாள் சில நேரம் கனைப்பாள்... அன்று திமிறினாள்..! ஏன்..? (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 22

கடைசி நாள் மாலை குதிரையை நிறுத்திவிட்டு திரும்பும் போது முன்னங்கால்களை தூக்கி, தலையை சிலுப்பி அடம் பிடிக்கும் குழந்தையை போல உடலை உதறிக் கொண்டாள் பாதல்.! நாங்கள் ஊருக்கு போகிறோம், நாளை வர மாட்டோம் என்பதை எங்கள் பேச்சுக்களில் இருந்து தெரிந்து கொண்டு விட்டாள்..! 

எங்களுடன் ஒரு வாரப் பழக்கம் கூட இல்லை ஆனால் எப்படிப்பட்ட உள்ளுணர்வு.! மிருகங்களுக்கு 5 அறிவு என்று தவறாக யாரும் இனிச் சொல்லாதிர்கள். அவை நாம் காட்டும் அன்பை பிரதிபலிப்பவை. சட்டென எனக்கு சேகுவாராவின் சாண்ட்டா குதிரையும், பிருதிவி ராஜனின் சேதக் குதிரையும் நினைவுக்கு வந்து போனது..! 

ரஹீமிடமும் பாதலிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு திரும்பிய போது யாரும் அறியா வண்ணம் நான் லேசாக அழுதேன்.. இங்கு தான் நான் விழுந்த கதை..! 
குதிரையை விட்டு விட்டு திரும்பிய நான் எப்படி குதிரையில் இருந்து விழுந்தேன்? நியாயமான கேள்வி. அங்கிருந்து நாங்கள் வேன் நிறுத்திய இடம் 3 கி.மீ தூரம்..! 

வேனுக்கு நடந்து தான் செல்லவேண்டும்.. நாங்கள் ஏறிய குதிரைக்காரர்களின் ஸ்டாண்டு கிழக்கில்.. வேன் நிற்பது மேற்கில் அங்கு வேறு ஸ்டாண்டு.! கிழக்கு ஸ்டாண்ட் மேற்கு பக்கம் வராது மேற்கு ஸ்டாண்ட் கிழக்கு பக்கம் வராது யாரோ ஒரு காஷ்மீர் கைப்புள்ள கோடுபோட்டு வச்சுருக்கான் போல..! 

நடக்க ஆரம்பித்த போது எங்கள் வேன் அருகே செல்ல.. கொடுக்கிறதை கொடுங்க என்று சில குதிரைக்காரர்கள் வந்தார்கள்..! நாங்களும் களைப்பினால் குதிரையில் போக முடிவெடுத்தோம்.! அனைவரும் ஆளுக்கொரு குதிரை ஏற, நானும் குதிரை சேணத்தில் கால் வைத்து ஏறி அப்படியே தலைக்குப்புற மறுபக்கம் விழுந்தேன்..! அதாவது குதிரையின் இந்தபக்கம் ஏறி அந்தப்பக்கம் தடாலென விழுந்தேன்.! அது...

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -23

கடந்த 5 நாட்களாக தினமும் ஒரு 12 முறை என்ற கணக்குப்படி கிட்டத்தட்ட 60 முறை குதிரை ஏறி இருக்கிறேன்..! ஒரு தடவை கூட விழலை. இப்ப மட்டும் என்னாச்சு..! செய்த சிறு தவறு இது தான், குதிரையில் இந்த 5 நாட்களாக அதன் இடப்பக்கம் நின்று என் இடது காலை கால் பிடியில் வைத்து வலது காலை தூக்கி ஏறியே பழகி விட்டேன்.. இப்போது உல்டா...!

வலப்பக்கம் கால் வைத்து இடது காலை தூக்கி ஏறினேன்.. இதுவரை இடப் பக்கமே
ஏறி பழகி விட்டேன்.. அதே பாணியில் வலப்பக்கம் ஏறும் போது என் உடல் எடையை பேலன்ஸ் பண்ண முடியவில்லை.! விழுந்தேன்.. விழுந்த வேகத்தில் நல்ல அடி..! என் இடப் பக்க தலை தரையில்  நச்சென்று மோதியது.. இங்கும் புல் தரை தான் காப்பாற்றியது அந்த அடிதான் வேன் ஏறும் வரை வேதனையாக இருந்தது.

பிறகு காஷ்மீர் திரும்புவதற்குள் வலி குறைந்து விட்டது.. படகு வீடு திரும்பினோம்.. இரவுக் குளியல் முடிந்து உடல் துவட்டும் போது இடது இடுப்பில் சுளீர் என வலித்தது உட்கார்ந்தால் வலி இல்லை.! நின்றால் வலித்தது, சரி காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சாப்பிட்டு படுத்தேன்.

மறு நாள் காலை எழுந்த போது என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை..! எவ்வளவு முயற்சித்தும் வலது கால் மட்டுமே அசைந்தது..! எனக்கு இடது கால் என்பது உடலிலேயே இல்லை என்பது போல மரத்துப் போய்கிடந்தது.! அசைவற்று கிடந்த என் கால் என்னை பயமுறுத்தியது..! முதுகு தண்டில் சுளீர் வலி! 

என் உயிர்த் தோழன் படத்தில் பாபு என்று ஒரு நடிகர் கதாநாயகனாக அறிமுகமானார் அவரது 4 வது படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் ரிஸ்க் எடுத்து முதுகு தண்டில் அடிபட்டு கடைசி வரை போராடி இறந்து போனது என் ஞாபகத்தில் வந்ததும் எனக்குள் பீதி பெருக்கெடுத்தது.! ஏனென்றால் எனக்கும் இது 4 வது படம்

(வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 24

என்னால் காலை அசைக்க முடியவில்லை காலை 7 மணி தான் ஆகிறது டாக்டர்கள் வர வேண்டும் என்றால் படகில் கரைக்கு போய் அழைத்து வரவேண்டும் அன்று பஸ் ஸ்டாண்டில் கதாநாயகனை விரட்டி செல்லும் காட்சி வேறு 8 மணிக்கு கிளம்பினால் தான் படபிடிப்புக்கு சரியாக இருக்கும்..

அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க நான் மட்டும் படுக்கையில்..! இன்று வேறு காட்சி எடுக்கலாம் என்றால் மறு நாள் அங்கு பந்த் அதற்கு அடுத்த ஒரு நாள் திரும்பி செல்லும் வழியில் சில காட்சிகள் எடுப்பதாக ஷெட்யூல். நாளை மறுநாள் நாங்கள் ஜம்முவில் இருந்து டெல்லி கிளம்பவேண்டும்.!

என்ன செய்வது என அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது எங்கள் பணியாள் விக்ரம் சிங் வந்தார்.. என்ன பிரச்சினை எனக் கேட்டார்.. முகத்தின் முன் கொசுவர்த்தி சுருள்... இது தாங்க நடந்தது...! எல்லாவற்றையும் கேட்டவர்  என்னை கைத்தாங்கலாக படுக்கையில் இருந்து எழுப்பி உட்கார வைத்தார்.

என் இரு கால்களையும் தரையில் படுமாறு வைத்தார்..! வலது கால் தரையில் பட்ட உணர்வு தெரிந்தது இடது காலில் ஒன்றுமே தெரியவே இல்லை, விக்ரம் சிங் தன் வெறும் காலால் அவரது பின் பாதத்தை என் இடது கால் பெரு விரலில் மிதித்து ஓங்கி அழுத்தினார்.!! ஒரு தரம்.. இரு தரம்... 

மூன்றாவது அழுத்தத்தில் நீர் நிரம்பி இருக்கும் தண்ணீர் தொட்டியின் கீழ்ப்புறம் துணி வைத்து அடைத்து இருப்பார்களே, அதை பிடுங்கி விட்டால் பாய்ந்து வரும் நீர் போல விர்ரென ரத்த ஓட்டம் என் காலில் பாய்வதை உணர்ந்தேன்..இப்போது காலில் உணர்வு தெரிந்தது 40 வினாடிக்களில் விக்ரம் என்னை குணப்படுத்தினர்...!

எப்படி இந்த முறை பற்றி உங்களுக்கு தெரியும் என்ற போது, தால் ஏரியில்  நன்கு நீந்த தெரிந்தவர்கள் குளிக்கும் போது ஸ்விம் ஸ்ட்ரோக் ஏற்படுமாம் அல்லது நீண்ட நேரம் குளிர் நீரில் நீந்தும் போது இப்படி ரத்த ஓட்டம் தடைபடுமாம் அவர்களுக்கு செய்யும் வைத்தியம் தான் இது என்றார் விக்ரம் சிங்..! ஆனால் முதுகில் வலி இன்னும் இருந்தது.. (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 25

என் முதுகு வலியை யூகலிப்டஸ்  எண்ணை கலந்த சுடு நீரில் டவல் நனைத்து ஒரு 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்த பின்பு அந்த வலியும் பறந்தோடச் செய்தார்.! விக்ரம் சிங்கை எங்கள் படக்குழுவினர் பாராட்ட நான் அன்பளிப்பு தந்த போது அன்போடு அதை மறுத்து என்னை அவருக்கு ஆயுள் கடன்காரன் ஆக்கி விட்டார் விக்ரம் சிங்...!

பிறகு படகில் கரைக்கு சென்று முன்னெச்சரிக்கையாக ஆஸ்பிடல் சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது முதுகு தண்டிற்கு சற்று அருகில் எலந்தைப் பழம் அளவு ரத்தக்கட்டு இருந்தது. அதற்கும் மருந்துகள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.! 
ஶ்ரீநகர் பேருந்து நிலையத்தில் தான் படபிடிப்பு. அந்த பஸ்ஸ்டாண்டில் நுழைந்ததும் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது போலிருந்தது.! 

மக்களின் நடை உடை உருவம் எல்லாம் அப்படி..! தொள தொள பைஜாமா, அதன் மீது ஓவர் கோட்டு, பெண்கள் தவிர்த்து எல்லார் முகத்திலும் நீண்ட தாடி, கருப்பு பர்தாக்கள், சிவப்பு ஜர்தாக்கள், உருது இரைச்சல்கள், கண்ட இடமெல்லாம் ஈரானிய முகங்கள்.அது காஷ்மீருக்கு வடக்கே உள்ள ஊர்களுக்கு போக இயங்கும் பேருந்து நிலையம்..கிட்டத்தட்ட பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஊர்கள்..! 

அந்த கிராமத்து மக்கள் தொழில் நிமித்தமாக காஷ்மீர் வந்து போவதால் தான் இங்கு நான் பார்த்த மக்களின் உடையில் நடையில் ஆப்கன் & பாக் கலாச்சாரம் என்பது தெரிந்தது..! நாளிதழ்களில் நாம் அடிக்கடி படிக்கும் காஷ்மீரில் துப்பாக்கி சூடு...  
எல்லையில் பதட்டம், தீவிரவாத தாக்குதல், ராணுவத்தினர் மீது குண்டு வீச்சு,

என்றெல்லாம் நாளிதழ்களில் நாம் படிக்கும் கார்கில்,பாரமுல்லா ஆகிய ஊர்களின் பெயர்களை தாங்கிய பேருந்துகளை பார்த்தேன்.. அவற்றை பார்க்கையிலேயே எனக்கு அஸ்தியில் புளிய மரமே கரைந்தது..!  (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 26

காஷ்மீர் பாகிஸ்தான் எல்லைப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் டிரைவர் கண்டக்டர் இல்லாவிட்டாலும் கட்டாயம் துப்பாக்கி ஏந்திய இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள்.! முன்னால் ஒருவர் பின்னால் ஒருவர் என ஒரு பஸ்சிற்கு இருவர்! அவர்களுக்கு ஆயுள் பஸ் பாஸ் எடுத்து தந்து உள்ளார்கள் போல..! அவர்களுக்கும் பஸ் ஓட்டத் தெரியுமாம்..!

அவர்களும் சர்வ சாதாரணமாக தாடை அரித்தால் கைத்துப்பாக்கியாலும்.. முதுகு அரித்தால் AK47 துப்பாக்கியாலும் சொறிந்து கொண்டு, பான் மென்று கொண்டும் பால்வாடிக்கு போகும் கைக்குழந்தைகள் போல் தினமும் பஸ்ஸில் போய் வருகிறார்கள்.! பேருந்துகளில் ஏற்றும் மூட்டைகளை சோதித்து தான் ஏற்றுகின்றனர் பஸ் கிளம்பும் முன் கார்கில்.. கார்கில்.. கார்கிலோய்ய்ய்ய்ய் என கத்துவதை தவிர எல்லாம் செய்கிறார்கள்..!

அடுத்து அந்த பேருந்து நிலையத்தின் சுகாதாரம்.! ஒருமுறை அங்கு சென்றால் நீங்கள் நம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கோவில் கட்டுவீர்கள்.!  சர்ஃப் எக்ஸல் நிறுவனம் கறை நல்லது என்ற வார்த்தையை இங்கு இருந்து தான் எடுத்திருப்பார்கள் போல.. 6அந்தளவிற்கு சுத்தத்திலும் சுகாதாரத்திலும் படு படு படு மோசமாக இருந்தது...!

மொத்த பேருந்து நிலையமே திறந்த வெளி கழிப்பிடம்...! ஒரு பஸ்ஸிற்கும் இன்னொரு பஸ்ஸிற்கும் போதிய இடை வெளி விடுவதே சிறுநீர் கழிக்கத் தான்...! என்று எழுதித்தான் போடவில்லை..! எங்கும் பார்த்தாலும் வெட்டி துண்டாக்கப்பட்ட கோழிக்கால்கள் லட்சக் கணக்கில் சிதறிக்கிடந்தன, பான் எச்சில்கள், பஸ்சிலிருந்து வடிந்த ஆயில், குப்பைகள்..!

கீழே கால் வைக்க ஷுவே கூசியது..!அங்குள்ள பஸ் டயர்கள் கங்கையில் இறங்கினால் சொச்ச கங்கையும் அழுக்காகிவிடும்..!இங்கு தான் எங்கள் படபிடிப்பு..! அதிலும் ஒடி விரட்டி பிடிக்க வேண்டிய காட்சி அவ்வளவு அழுக்குக்குள் எப்படி ஓடுவது என்பதை யோசிப்பதற்கு முன்.. அந்த பேருந்துகளைப்பற்றி... (வரும்...)

#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 27

வட இந்தியா லாரிகளை பார்த்து இருப்பீர்கள்..! அதைப்போலவே பஸ்சும் இருக்கும்..! நம்ம ஊரு பஸ்சுக்கு ராஜஸ்தான் ஸ்டைலில் முண்டாசு கட்டிவிட்டது போல ஒரு தோற்றம்..! அந்த முண்டாசு பஞ்சவர்ண கலரில் இருக்கும்..! அய்யனார் சிலை போல 90 டிகிரியில் அமர்ந்து தான் பயணிக்க வேண்டும்.. பேருந்தின் பராமரிப்பு பரிதாபமரிப்பாக இருக்கிறது..! 

வெள்ளை சட்டையுடன் ஏறி அமர்ந்தால் செலவில்லாமல் அது பழுப்பாக மாறும் வசதியுள்ள பேருந்து..! ஒவ்வொரு அங்குலமும் அழுக்கு அழுக்கு ஆஆஆழுக்கு..! பொது மக்களை அந்த பஸ்ஸில் பயணம் செய்ய வைப்பதே ஒரு தீவிரவாதச் செயல் என்றால் ஒப்புக் கொள்வீர்கள்..! இங்கு சற்று சுத்தமான இடம் இருக்கிறதா?என்று பலரிடம் கேட்டோம்..!

அதற்கு அவர்கள் எங்கள் படக் குழுவினரை பார்த்த பார்வையில் பரிதாபமே தெரிந்தது..! ஒரு வழியாக பேருந்து நிலையத்தின் கடைசி பிளாட்பாரத்திற்கு அருகில் ஒரு மெக்கானிக் ஷெட் இருந்தது பேருந்து நிலையமே இவ்வளவு அசுத்தமென்றால் அந்த மெக்கானிக் ஷெட்..!

ஆனால் ஆச்சரியப்படும் அளவிற்கு அது சுத்தமாக இருந்தது..! அல்லது பஸ் ஸ்டாண்டை விட சற்று குப்பை குறைவாக இருந்தது..! அந்த இடத்தில் அடுத்த 4 மணி நேரம் படபிடிப்பு முடிந்து படகு வீடு திரும்பினோம்..! காஷ்மீரில் வந்த இந்த 8 நாட்களும் மறக்க முடியாதவை.!அடுத்த நாள் காலை மீண்டும் டெல்லி பயணம்..! 

வழக்கம் போல பண்டிட் குளித்து குங்குமம் பூசி பான் மணக்க சிரித்தார்..! குங்குமப்பூ காஷ்மீர் மரப்பெட்டி கிரிக்கெட் பேட்டுகள் போன்ற ஷாப்பிங்குகள் முடிந்து ஜம்முவுக்கு புறப்பட்டோம்..! இரவு ஜம்முவிலிருந்து டெல்லிக்கு பேருந்துப் பயணம் அது பற்றி தனியே எழுதும் அளவுக்கு கதை இருக்கிறது..!

அதை தனியாக டெல்லி அனுபவங்களோடு எழுத உத்தேசம்..! மீண்டும் இமயமலை சாலை, மலைக்குகைகள், ஆடுகள் என டிட்டோ பயணம்..! காஷ்மீரிலிருந்து வேன் கிளம்பியது வேனின் பின் புறம் பனி மூடிய இமயம்..! ஒரு வினாடி அதை திரும்பிப் பார்த்தேன் அது கை அசைத்தது போல ஒரு தோற்றம்..! என் கண்களில் சட்டென்று நீர் கோர்த்து கொண்டது..! பை..பை.. காஷ்மீர்...!

#நிறைந்தது


Edited...

காஷ்மீர் கலாட்டா - 6

எங்கள் அலறலை நிறுத்தியது அண்ணன் பண்டிட்டின் குரல் நீங்க சாப்பிடுற இடம் வந்தாச்சு என்றார்.! ஆம்..! அந்த அபாயகரமான இடத்தை கடந்து நாங்கள் சாப்பிடும் இடத்தை அடைந்திருந்தோம்.. எங்கள் இயக்குனர் ஓடிப்போய் பண்டிட்டை கட்டிக் கொண்டார்..! நீ பெரிய ஓட்டுனண்டா என்ற போது சிரித்துக் கொண்டே பண்டிட் சொன்னது.. 

ஸார் நான் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டேன் இப்ப நீங்க பாத்ததால இது பெருசாயிடுச்சு என்றார்! குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது எவ்வளவு தவறு என்றாலும் இது போல பயணங்களில் அவர்களது நம்பிக்கை கிறுக்குத்தனமானது என்று தான் தோன்றியது.! ஆனால் இது தான் அங்கு பல ஓட்டுனர்களின் நிலை.

அதுவும் சில வடஇந்திய டிரைவர்கள் யோக நிலையில் தான் வண்டி ஓட்டுகிறார்கள் இது சரியா என ஓட்டுனர்கள் தான் சொல்ல வேண்டும். பிறகு ஒரு மணிநேரம் நாங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்ப எங்கள் கைடே வண்டி ஓட்ட ஆரம்பித்தார். பின் சீட்டில் காஷ்மீரி உளறல்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார் பண்டிட்..! 

அவர் வண்டி ஓட்டுவேன் என்றுதான் சொன்னார் ஆனால் இனி ரிஸ்க் எனும் ரஸ்க் சாப்பிட விரும்பததால் நம்ம கைடே வண்டி ஓட்டினார்..!150 கி.மீ தாண்டியதும் காஷ்மீரிகளின் கிராம வாழ்க்கை தெரிய ஆரம்பித்தது..! ஆடு வளர்ப்பது மிக முக்கியம்..! நம்ம ஊர் ஆடுகள் போல அல்ல அங்கு.

அத்தனையும் கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகள்.! குறிப்பிட்ட காலத்தில் அவற்றை கீழிருந்து மேலே குளிர் சீதோஷ்ண சூழலுக்கு அழைத்து செல்ல வேண்டும்..! அப்போது தான் அவற்றிற்கு உரோமம் வளருமாம்..! மலையின் நடுவே இருப்பவர்கள் மலை உச்சிக்கு ஆடுகளை மந்தையாக ஓட்டிச்செல்கின்றனர்.

குறைந்தது 5 மாதங்கள் வீட்டை விட்டுப் போய் நாடோடிகள் போல கூடாரம் அமைத்து குளிரில் தங்க வேண்டும்.. வசதியானவர்கள் குளிர் பிரதேசத்திலும் மர வீடுகள் கட்டி வைத்திருப்பார்களாம்.. 5 மாத உணவுப் பொருட்கள் கம்பளி ஆடைகள் இவற்றோடு தற்காலிகமாக தங்கள் கிராமத்தை பிரிகிறார்கள் காஷ்மீரி மலை கிராம மக்கள்.!

நீங்கள் கூட்டமாக எவ்வளவு ஆடுகள் பார்த்து இருப்பீர்கள்? 100, 200,500, 1000,2000? நான் பார்த்தது எவ்வளவு தெரியுமா?! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா - 7

கிட்டத்தட்ட அந்த பயணத்தில் 2 இலட்சம் ஆடுகள் நான் பார்த்து இருப்பேன்..! ஒவ்வொரு ஆட்டுமந்தையிலும் குறைந்தது 5000 ஆடுகள் இருக்கும்..! அதற்கு நம்ம ஊரு கீதாரி போல ஒருவர், அவரது உதவியாளர் இருவர் இவர்களுக்கு சமைக்க 3 பேர் மொத்தம் 6 பேர் குழு! கட்சி மாறக்கூடிய எம் எல் ஏக்களை அழைத்து செல்வது போல் அதை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்..! அப்படியும் சில ஆடுகள் பள்ளத்தில் தாவி ஓடிவிடுமாம்..! (கேப்டன் கவனமாக இல்லா விட்டால்)

வெறும் விசில் சப்தத்திலேயே அத்தனை ஆடுகளையும் வழி நடத்தி செல்கிறார்கள்..! 2000 ஆடுகள் சாலை நடுவே சென்று கொண்டு இருக்க எங்கள் வண்டி வழி கேட்டு ஹாரன் அடிக்க அந்த கீதாரி ஒரு வித்யாசமான தொனியில் விசில் கிக்கிக்கிக்கிக்கி என்று அடித்தவுடன் 5 வினாடிகளில் அத்தனை ஆடுகளும் வண்டிக்கு வழி விட்டு ஒதுங்கியது ஆச்சர்யம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லக லக லக லக்க... சத்தம் கூட இமாலயத்தில் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனின் குரல் தான் என்று அவரே சொன்னதை இங்கு நினைவு படுத்துகிறேன். ஆடுகள் அந்த இடையர்களுக்கு அவ்வளவு மரியாதை தருகின்றன. அம்மாவைக் கண்ட அதிமுகவினரைப் போல் அவ்வளவு பணிவு, பயபக்தி..!

அடுத்து இந்த பயணத்தில் பிடித்தது மலைக்குகை பயணங்கள்..! நீளமான இருள் குகைக்குள் சிலிர்ப்பூட்டும் பயணங்கள்.. இந்த குகை வாசலில் ராணுவத்தினரின் செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் அந்த ஆட்டு மந்தைகள் காத்திருப்பில் வைக்கப்படுகிறது... அரசியல் கூட்டணிக்கு காத்திருப்பது போல ரொம்ப நேரம் காக்க வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்த மந்தைகளை அந்தக் கணவாய்க்குள் செல்ல அனுமதிக்கிறார்கள்.. திடீரென்று சூழும் இருள் சில நிமிடங்கள் பிறகு சில நிமிடங்கள் வெளிச்சம் என மாறி மாறி ரசித்த அற்புதமான பயணம் அது..! (வரும்...)


#இமயம்_கண்டேன்

காஷ்மீர் கலாட்டா -12

இவ்வளவு சிறப்புள்ள தால் ஏரியின் பழைய முகம் இதைவிடப் பேரழகு என்றார்கள்.. ஆம் இப்போது அதன் பரப்பில் பாதிக்கும் மேல் பாசி பிடித்து பாழ்பட்டு கிடக்கிறது.! 

அதன் பழைய அழகு போய் மார்கெட் இழந்த கதாநாயகி போல பொலிவின்றி கிடக்கிறது... திரும்பிய பக்கமெல்லாம் பாசி ஒரு பக்கம் அழித்துக் கொண்டு வருவதற்குள் மறு பக்கம் வளர்ந்து விடுகிறது.!

காஷ்மீர் அரசின் பெருங்கவலையே இதை தூய்மை படுத்துவது தான்.! இப்போது ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் திட்டம் போட்டுள்ளார்கள்... அதாவது ஒரு கிலோ பாசிகுப்பையை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால் 1 ரூபாய் கிடைக்கும்..! 

சராசரியாக 1 மணி நேரத்தில் 100 கிலோ வரை அள்ளமுடியுமாம் 10 மணி நேரம் 10 டிரிப் அடித்தால் 1000 கிலோ குப்பை வரை அள்ளி சம்பாதிக்கின்றனர்.இந்த திட்டம் நன்கு பயனளிப்பதாக சொன்னார்கள்.!

தால்ஏரிக்குள் இருக்கும் மார்க்கெட்டுக்குள் ஒரு விசிட் அடித்து பார்க்காமல் திரும்பாதீர்கள்.! விலை அதிகம் தான் இருப்பினும் இங்கும் சில தரமான பொருட்கள் கிடைக்கும். விலை விசாரித்து வாங்கவும்.

தாராளமாக பேரம் பேசலாம்.. என்ன ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க படகில் ஏறி இறங்கணும்..ஒவ்வொரு கடை வாசலிலும் படகை பார்க்கிங் செய்து விட்டு ஷாப்பிங் செல்வது புது விதமான அனுபவம்.. 

ஷிகாரா படகுகள் நன்கு மெத்தை விரிக்கப்பட்டு சொகுசாக சாய்ந்து கொள்ளும் படி அமைக்கப்பட்டவை.. சுற்றுப்புறத்தை ரசித்துக்கொண்டே மெல்ல ஒரு சுற்று ஏரியை வலம் வருவது இன்னும் அழகு.. 

ஓடும் படகில் எழுந்து நிற்கக் கூடாது அது மொத்த படகையும் கவிழ்த்து விடும் நிறுத்தங்களில் மட்டுமே எழுந்து இறங்க வேண்டும். அதுவும் படகில் ஏறும் போதும் இறங்கும் போதும் ஜாக்கிரதை ஏனெனில் நாங்கள் போன 2வது நாளில்..

படகில் இருந்து இறங்கிய ஒரு பெரியவர் கால் தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார் உடனடியாக காப்பாற்றினர்..! பிறகு தான் தெரிந்தது தினசரி இது போல 100 பேர் விழுகிறார்களாம் ஜாக்கிரதை.! நானும் விழுந்தேன் ஏரியில் அல்ல குதிரை மீது இருந்து...! அது... (வரும்...)

No comments:

Post a Comment