Wednesday 22 April 2015

லிமெரிக் 1

புவிக்கோர் தினம் ஒன்று
புறப்பட்டார் பலர் இன்று
கவிப்பல பாடி
கூகுளில் தேடி
குவிக்கிறார் லைக் நன்று.

தோசை மெலிதாக வார்த்து
தோதாக நெய்யதை சேர்த்து
மீசை போல முறுகல்
முகத்தின் மீது முறுவல்
ஆசைதீர வெட்டு சட்னியுடன் வைத்து.

செய்கூலி சேதாரம் குறைச்சல்
செயின் ஒண்ணு வாங்கச் சொல்லி குடைச்சல்
பொய் அதுன்னு தெரியுது
பொண்டாட்டிக்கு எங்க புரியுது
நாய் போல ஆயிட்டேன் பார்க்கலாமா அலைச்சல்.

மாதச் சம்பளம் என்று தான் பேரு
மகிழ்ச்சி அதில் இருக்குமா பாரு
சாதகமா ஏதுமில்லை
சம்பாத்தியம் பத்தவில்லை
பாதத்தில் வீழ்ந்து கடன் வாங்காதோர் யாரு.

தளை தட்டுதென தலையில் தட்டுவார்
தமிழ் மரபு இதுவல்ல என்றே திட்டுவார்
வளையும் இலக்கணம்
வம்பிழுப்பார் அக்கணம்
விளையும் பயிரதைப் பிடுங்கி கட்டுவார்.

விறுவிறுன்னு எழுதினேன் குறும்-பா
வில்லங்கமதில் காண்கிறார் குறும்பா
குறுகுறுன்னு பார்த்து
குறையெல்லாம் கோர்த்து
நறுநறுன்னு பல்லைக் கடிப்பது ஏம்பா.

மெதுவடை சூடாக போட்டால்
மெலிதாக அதில் காரட் சேர்த்தால்
புதுச்சுவை ஆகும்
புத்தி மாறிப் போகும்
எது இதற்கு நிகராம் எடை போட்டு பார்த்தால்.

சொல்லில் சோகமேதும் இல்லை
சொல்லைக் கேட்டவர்களால் தொல்லை
வில்லில் அம்பாக
விறைத்த கம்பாக
கல்லால் அடிப்பார் தாண்டு நீ எல்லை.

படித்திட அழைத்தார் சமையற்கலை
பட்டம் அதற்கு வைத்தார் நல்ல விலை
பிடித்திட்டார் விளம்பரம்
பெருக்கிட்டார் வியாபாரம்
முடிவில் இது பெற்றோர்க்கு விரித்த வலை.

தங்கம் வாங்க உகந்த நாள் ஒன்றாம்
தங்கிப் பெருகிடும் இல்லத்தில் இன்றாம்
பங்கம் வராதிருக்க 
பவுன் வாங்கிச் சிறக்க
எங்கும் சல்லியடிக்கிறார் தப்பித்தல் நன்றாம்.

தமிழ் உரை கோனார் அசைவமெஸ் பேரில் ஆனார்
தட்டில் இடும் கறிதோசையால் ஃபேமஸா போனார்
சிமிழ் போலே சிக்கனும்
மணம் மிக்க மட்டனும்
உமிழ்நீர் நாவிலே இதுபோல் வேறெங்கும் காணார்.

கயல் ஓடுள்ள பயல் முகத்தால் தோண்டினான் வயல்
காலடியளந்தவன் இரண்ய கசிபுவை கிழித்த செயல்
மையல் கொண்ட ராவணனை வதைத்து
மைந்தனே தாயை சிதைத்து
ஜெயக் கலப்பையேந்திய மாய வண்ணனவன் கலியுகப் புயல்.

மச்சம் கூர்மம் வராக அவதாரம்
மாபலி வாமன சிம்மமென ஆதாரம்
மிச்சம் ராம பலராமன்
மிடுக்கான பரசுராமன்
சொச்சம் கண்ணனும் கல்கியுமே தசாவதாரம்.

திங்கள் பிறந்தால் கேட்கிறது சங்கு
திகிலில் உறைகிறார் பலரும் இங்கு
உங்கள் ஓட்டம் தொடங்கும்
ஊரே பரபரப்பாய் இயங்கும்
சங்கம் வைத்து புலம்பினால் பலர் வருவார் அங்கு.

இரு வார்த்தை லிமெரிக்...

சிவன் பாதி
சக்தி மீதி
அவன் ஆசி
அதற்கு பூசி
இவனே ஜோதி.

லேட் நைட்டுல வீடு வந்தான் கோபி
லெப்ட் ரைட் வாங்குனா அவன் மனைவி ஷோபி
லைட்டா ஒரு கட்டிங்கு
லிக்கரால ஸ்வெட்டிங்கு
பைட்டு சகஜம் தானே பண்ண வேணாம் லாபி.

முருகன் தமிழரின் முப்பாட்டன் ஆனான்
முந்திப் பிறந்தவன் வடநாட்டுக்கு போனான்
உருகிக் கிளம்பினான் உலகைச் சுற்ற
உடனே கணபதி கனியை கைப்பற்ற
அருமை!தமிழ்ப் பாட்டனல்லவா அதனால் தான் ஏமாறினான்.

கத்திரிக்காய் வதக்கிப் போட்ட காரக்குழம்பு
கெட்டித் தயிர் கூட இருந்தா இல்ல அழும்பு
சத்தியமா இது சைவம்
சரிநிகராகது அசைவம்
வெத்திலையும் உடனிருந்தா இதெல்லாம் கரும்பு.


#லிமெரிக்_கதைகள்

காக்கா ஒன்று பாட்டிக் கடையில் வடையைத் திருடியதாம்
காட்டு மரத்திலமர்ந்து மூக்காலந்த வடையை வருடியதாம்
நேக்கா வந்து பாடக் கேட்டது  நரி
நேயர் விருப்பமதற்கு காக்கா சொன்னது சரி
ஷாக்கா ஆச்சு விழுந்த வடையை தூக்கி நரியும் ஓடியதாம்.

தங்கராசு என்ற தயாரிப்பாளர் புதுப்பட பூஜை போட்டார்
தமிழகம் முழுவதும் ரிலீசுக்கு தியேட்டர்களைக் கேட்டார்
எங்க கேட்டாலும் கிடைக்கல
ஏரியா எதுவுமே விக்கலை
திங்குதே வட்டிப்பணம் இனி அடுத்தப்படம் எடுக்க மாட்டார்.

வாணி தன் சிநேகிதியைக் காண பீச்சுக்கு சென்றாள்
வாலிபன் ஒருவன் பின் தொடர சட்டென நின்றாள்
ராணி அவளது தோழி
ராட்சசியவள் வர ஆனது வெகுநாழி
நாணி அவள் அவனைக்காட்டி என் காதலனே என்றாள்.

வானம் பொய்த்ததால் விவசாயி மாடசாமி
வாழ வழியின்றி வேண்டினான் பல சாமி
மானம் அது காக்க
மக்கள் பசி தீர்க்க
ஞானம் நகரென ப்ளாட் போட்டான் அதுவே அவன் குலசாமி.

தாழ்ந்த ஜாதியில சேர்க்க சொல்லி போராட்டம்
தலைவர் அழைச்சதாலே கூடியது ஒரு கூட்டம்
வீழ்ந்தது அவர் காலில்
வீரன் ஒருவன் காதில்
ஆழ்க் குரலில் சொன்னார் உயர்ஜாதி நாய் வாங்கும் திட்டம்.

படத்துக்கு வச்சாங்க ஓ.கே. கண்மணின்னு பேரு
பட்டுன்னு ஓ காதல் கண்மணின்னு மாத்தினது யாரு
தடத்தை மாத்துறாங்க
தமிழுன்னு ஏமாத்துறாங்க
அடத்தோட நின்னா வரிவிலக்கு கிடைக்காது பாரு.

சின்ன மழை பெய்தாலே தெருவெல்லாம் தண்ணி
சிங்காரச் சென்னைனா சிரிக்கிறாங்க எண்ணி
என்னய்யா ரோடு இது
எலும்புக்கூடா போனதது
தின்னுட்டான் எம் எல் ஏ காசை கணக்குப் பண்ணி.

வெள்ளி என்பது மங்கள நாள்
வேண்டிப் பணிவார் இறைவனின் தாள்
தள்ளினார் அதை
தடம் மாறிய கதை
உள்ளத்து மகிழ்ச்சிக்கு குடிக்கிறார் சார்வாள்.


No comments:

Post a Comment