Wednesday 2 March 2016

ஹலோ அமெரிக்கா - 10

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 10

அமெரிக்காவில் பெரும்பாலும் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம் என்றாலும் ஆட்டோமொபைல், வங்கித்துறை, தணிக்கைத்துறை, போன்ற துறைகளிலும் தமிழர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிபவர்கள் என்பது மிகக் குறைவு. அப்படி வேலை பார்த்தால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமானது என்றும் பணிபுரிபவர் மிகுந்த திறமைசாலி எனவும் அறியலாம். உதாரணம் கூகுள்.

ஒருவர் 10 வருடங்கள் அங்கு வேலை பார்த்து இருந்தால் நிச்சயம் 4 கம்பெனிகளாவது மாறி இருப்பார்.. ஏனெனில் அவன் உன்னை தாக்குவதற்குள் நீ அவனை தாக்கிடு.. இல்ல அங்கிருந்து விலகிவிடு பாலிசி தான். அமெரிக்க நிறுவனங்கள் அலுவலகத்தில் ஒரு குழுவின் பர்பாமென்ஸ் சரியில்லை என்றால்.. இதற்கு முன் அவர்கள் அச்சீவ் செய்த ஹிஸ்டரி எல்லாம் நன்றாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி தூக்கிவிடுவார்கள்.

ஆகவே தான் சம்பள உயர்வு வேறு பணி என அனைவரும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.. ஒரே நிறுவனத்தில் வேலை நிரந்தரம் இல்லை என்பதும் அமெரிக்கத் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை. சொந்தத் தொழில் செய்பவர்களும் உண்டு. ரியல் எஸ்டேட், டிரேடிங், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ரெஸ்ட்டாரெண்டுகள் இப்படி.. டாக்டர்களும் இருக்கிறார்கள். அங்கு பல்டாக்டர் படித்து க்ளினிக் வைத்தால் நிச்சயம் மில்லியனர் ஆகலாம்.

பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க அமெரிக்கர்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். வருடத்திற்கு குறைந்தது 2 முறையாவது டெண்டிஸ்ட்டுகளை பார்த்து விடுகிறார்கள். அது சம்பந்தமான மவுத் வாஷ், ஃபோம், பல்லிடுக்கை க்ளீன் செய்யும் திரெட், ஈறுகளுக்கு தடவும் க்ரீம், பிரஷ், பற்பசை, என வித விதமாக கடைகளில் விற்கிறார்கள். அடுத்து நம்ம ஊரு நகைக்கடை மீது பெண்களுக்கு எவ்வளவு மோகமோ அதே மோகம் அங்கு நகக்கடையில்.!

ஆம் பெடிக்யூர் எனப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கடை 50 டாலர்கள் முதல் 500 டாலர் வரை விதவிதமாக நகங்களை சுத்தப்படுத்தி அழகுப் படுத்திக் கொள்கிறார்கள். அடுத்து சலூன் அமெரிக்காவில் சலூன் கடை போட்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது. தற்போது முடி வெட்ட மினிமம் 40 டாலர்கள் செலவாகிறது. அதுமட்டுமின்றி நமக்கு வெட்டிவிடுபவர்களிடம் நமக்கு எப்படி வெட்டிவிடுவது என சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

மறந்து தூங்கிவிட்டால் விழித்துப் பார்க்கும் போது எதிரிலிருக்கும் கண்ணாடியில் பரதேசி அதர்வா தெரியலாம். அங்கிருப்பவர்களுக்கு இது ஒன்று தான் குறை. அரபு நாடுகள் போல கட்டுமானம் துப்புரவு போன்ற பணிகளில் நம்மவர்கள் குறைவு. வட இந்தியர்கள் அதிகம் பெரும்பாலும் மெகா சைஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் வைத்திருப்பது எல்லாம் அவர்கள் தான். இந்தியாவில் கிடைக்கும் எல்லா பொருளும் கிடைக்கும்.

அமெரிக்காவில் சீக்கியர்கள் குஜராத்திகள் அதிகம் அடுத்து ஜெயின் சமூகத்தினர் சுந்தரத் தெலுங்கர்களும் கணிசமாக இருக்கின்றனர். இந்திய ரெஸ்ட்டாரண்டுகளில் நம் இந்திய ஒருமைப்பாட்டை பார்க்கலாம். நிறைய குருத்துவாராக்களும் ஜெயின் கோயில்களும் நம் தமிழர்களின் கோவில்களும் இங்குண்டு. இங்கு வரும் போது தான் அவர்களுக்கு நம் தாய்நாட்டில் இருப்பது போல உணர்வு. பக்தியும் நம் கலாச்சாரம் அல்லவா.

இந்தக் கோவில்களில் குரு நானக்கும், மகாவீரரும், வெங்கடாஜலபதியும்,  விநாயகரும், முருகரும், பெண் தெய்வங்களும் அமெரிக்க தூதகரத்தின் இண்டர்வியூ அவஸ்தைகள் பாஸ்போர்ட்,விசா, இன்விடேஷன் லட்டர் இந்த பிரச்சனைகள் ஏதுமின்றி அமெரிக்காவில் எழுந்தருளி தம் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள். கோவில்களில் நம் கலாச்சாரம் சரி.. சொந்த பந்தங்கள் பண்டிகைகள் விழாக்கள்.. ?? அது அடுத்த பதிவில்...

வரும்..

No comments:

Post a Comment