Friday 4 March 2016

மெராமெக் அதிசயகுகை 2

#திரில்_குகைப்பயணம்

பார்ட் - 2 

தானாக வளரும் பாறைகளா.! அது என்ன பாறைகள்.? மழை நின்றதும் சன்ஷேடுகளின் விளிம்பில் முத்து போல சொட்டும் அல்லது வீட்டுக் குழாயில் அரும்பி சொட்டக் காத்திருக்குமே குமிழ் போல நீர்த்துளி அதைப் பார்த்து இருப்பீர்கள் அல்லவா அதைப் போலவே குகையின் மேற் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக அரும்பி வளரத் துவங்குகிறது இப்பாறைகள். பலகாரக் கடையில் காராபூந்தி போடுவதை பார்த்து இருக்கிறீர்களா.? 

நிறைய துளைகள் உள்ள பெரிய கரண்டியில் மாவு கரைசலை ஊற்றுவார்கள் அவையும் கடலைமாவு மழையாய் சரசரவென கீழே விழும் அதே போல அந்த  குமிழ் நீளத்துவங்குகிறது. சுண்ணாம்பு மற்றும் மக்னீசியம் கலந்த இக் கலவை மெல்ல பளிங்கு போலாகி கிறிஸ்டல் போல பளபளப்பான பாறை ஆக வளர்கிறது. சிறியதாக ஒரு கம்பி மத்தாப்பு தடிமனில் உருவாகும் ஒரு துளி நாளடைவில் அக்கம் பக்கத்து கம்பிகளோடு கூட்டணி வைத்து..

அந்த மெகா கூட்டணி பெரும் பளிங்கு பாறையாக மாறுகிறது. மெராமெக் குகைகள் ஏழு நிலைகள் கொண்டவை ஐந்து நிலைகள் பூமிக்கு அடியில் இருக்க இரண்டு நிலைகள் தான் வெளியே தெரிகின்றன. இந்தப் பாறை படிமங்களுக்கு ஓன்க்ஸ் (ONYX) எனப்பெயர்.. ஆண்டுகள் ஆக ஆக அதன் வடிவமும் பரிணாமமும் பிரமிக்க வைக்கின்றன. நம் ஊரில் அமர்நாத் பனிக் குகையில் ஒரே ஒரு லிங்கம் வளர்வதை பிரமிப்பாக பார்க்கிறோம்.

ஆனால் இங்கு ஆயிரம் ஆயிரம் லிங்கங்கள் அதிலும் விஸ்வரூப லிங்கங்கள் எல்லாம் உள்ளன.. இந்த குகை நம் ஊரில் இருந்து இருந்தால் இன்னொரு திருவண்ணாமலை ஆகி சிவஸ்தலமாகி இருக்கும். நீருக்கு அடியிலும் உருவாகும் வைன் டேபிள் என்னும் பாறைப் படிமம் உலகில் மூன்று இடங்களில் உள்ளது.. ஆனால் இங்கு மட்டும் தான் அது தண்ணீருக்கு மேல் உள்ளது.. திராட்சைக் கொத்து போல இப்பாறைகள் இருப்பதால் இதை..

வைன் டேபிள் என்கிறார்கள்.. Botryoids என்பது இந்த படிமத்தின் அறிவியல் பெயர்..சிறு துளியாகி அப்படியே கூரையில் தொங்கவிட்ட கத்தியாகவோ அல்லது கல்லால் ஆன புடலங்காய் தோட்டம் போலவோ சரேல் சரேலென பாறைகள் தொங்குகின்றன.. இவற்றைத் தொடக்கூடாது தொட்டால் வளர்ச்சி நின்றுவிடுமாம். குகைக்குள் டூர் என்பது 1மணிநேரம் 15 முதல் 20 பேர் சேர்ந்தால் ஒரு கைடு நம்மை அழைத்து போவார்.

பாறை இடுக்கில் விரல் நுழைத்து அவர் ஸ்விட்ச் போட பளீரென குகை வெளிச்சம் பெறுகிறது.ஒவ்வொரு இடத்தை கடக்கும் போதும் அதை அணைத்துவிட்டு மறுபடி அடுத்த இடத்தில் போய் ஸ்விட்ச் போடுவார்.. நீளமான உயரமான குகை சுற்றிலும் நீர் சலசலக்கும் சத்தம் பளீர் வெளிச்சம் கும்மிருட்டு என அந்தப்பயணம் முழுவதும் மெல்லிய திகில் கலந்தே இருந்தது. பாறை படிமங்களின் ஆரம்ப நிலையை பார்த்துவிட்டு திரும்பி..

குகைக்குள் நுழைந்த இடத்திற்கு அருகில் விருட்டென குகை மேலே ஏறுகிறது.. அங்கு மின்னும் மஞ்சள் நிறத்தில் டைனாசார் சைசில் ஒரு பாறைப் படிமம் மெகா பந்து போல 35 மில்லியன் ஆண்டுப்பழமையானது என்றார்கள்.. மெய் சிலிர்த்தது.. மிசெளரி ஆற்றின் தண்ணீர் அதில் அபிஷேகம் போல வழிந்து கொண்டு இருந்தது.. அங்குள்ள சிறிய பாறைகளுக்கு பின்னால் வண்ண விளக்குகள் கொடுத்து இருந்தார்கள்.

ஆஹா..என்ன ஒரு அற்புதமான காட்சி.. வைன் டேபிள் படிமங்களில் தானாகவே உருவாகியிருந்த குதிரை வடிவ பாறை இன்னுமொரு அற்புதம். பல படிகள் ஏறி அவற்றை தரிசித்தோம் இங்கு நீர்க்கசிவு அதிகம் வழுக்காமல் பார்த்து நடந்தோம்.. அடுத்து நாங்கள் நுழைந்தது அந்த குகைக்குள்ளேயே ஒரு தியேட்டர் போல ஒரு அமைப்பு அதன் பெயர் THE GREAT CURTAIN அங்கு ஒரு திரைப்படக் காட்சி நடக்கும் என்றார்கள்.

எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.. சினிமா எதில் திரையிடுவார்கள்? வெண் திரை எங்கே.? எதிரில் தேடினோம் அது கடவுள் போல எங்களுக்கு அகப் படவில்லை. பளீரென விளக்கு எரிந்தது ஒரு அரை விநாடி எங்கள் இதயம் நின்று துடித்தது.. கடவுளின் விஸ்வரூபம் போல் வானுக்கும் பூமிக்கும் வியாபித்து இருப்பது போல் 70அடி உயரம் 60அடி அகலம் 35 அடி கனத்தில் ஒரு பெரும் வைரப் பாறை தக தகவென ஜொலித்தது.. 

அதன் வயது 70 மில்லியன் வருடங்கள்..! அது பற்றி நாளை... வரும்..

No comments:

Post a Comment