Tuesday 1 March 2016

ஹலோ அமெரிக்கா - 9

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 9 

இன்சூரன்ஸ் இல்லாத மனிதன் இயந்திர மனிதன் இந்தப் புது மொழி அமெரிக்காவுக்கு பொருந்தும். அமெரிக்காவில் இன்சூரன்ஸ் மிக முக்கியம்.. மெடிக்கல், வீடு, கார், வீட்டிலுள்ள ஃபர்னிச்சர், லேப்டாப், கணினி, வீட்டிலுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாவற்றிற்கும் இன்சூரன்ஸ் அவசியம் உண்டு. இன்சூரன்ஸ் கட்டாத வரி செலுத்தாத அமெரிக்கர்கள் எவரும் இல்லை. பலதரப்பட்ட வகைவகையான இன்சூரன்சுகள் அங்குண்டு.

பேச்சுலரா, திருமணம் ஆயிடுச்சா, ஒரு பிள்ளையா, ரெண்டு பிள்ளையா, அதுக்கு மேலேயா, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா, இல்ல வேணாமா, உங்க நகம், கை, கால், முடி, தொடை இதற்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா எல்லாம் உண்டு. இப்படி டேபிள்மேட்டை விட அதிக வகையான பயன்பாடுகளில் அங்கு இன்சூரன்ஸ் உள்ளது. கை கால் போன்ற உறுப்புகளுக்கு இன்சூரன்ஸ் செய்பவர்கள் பெரும் செலிபிரிட்டிகள் தான்..

அதற்கு பல பில்லியன் மதிப்பில் இன்சூரன்ஸ் எடுத்து சில மில்லியன் தொகையை ஆண்டுதோறும் ப்ரீமியமாக கட்டுகிறார்கள். கார்களுக்கு இன்சூரன்ஸ் ஆரம்பத்தில் அதிகம்.. 2 அல்லது3 வருடங்களுக்குப் பின் நீங்கள் ஒழுங்காக உங்கள் மீது தவறின்றி விபத்து ஏற்படுத்தாமல் போலீஸ் டிக்கெட்டுகள் வாங்காது வண்டி ஓட்டி இருந்தால் இன்சூரன்ஸ் ப்ரீமியம் குறையும்.. இல்லாவிட்டால் நீங்கள் அதிகம் செலுத்த வேண்டியது வரும்.அமெரிக்காவில் முக்கியமானது மெடிக்கல் இன்சூரன்ஸ்.!

அவ்வூர் டாக்டர்கள் 30 டாலருக்கு மருந்து எழுதிக் கொடுத்துவிட்டு 300 டாலர்கள் கன்சல்டிங் ஃபீஸ் வாங்குகிறார்கள். இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் சின்ன காய்ச்சலுக்கு நம்ம ஊர் மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இன்சூரன்ஸ் இருந்தால் மினிமம் பே 30 டாலர் செலுத்தினால் போதும் மீதி 270 டாலரை இன்சூரன்ஸ் கம்பெனி அந்த டாக்டருக்கு செலுத்திவிடும்.

குழந்தை பிறந்து பிரசவம் முடிந்து வீடு திரும்ப 50 ஆயிரம் டாலர்கள் வரையெல்லாம் பில் வருமாம்.. கிட்டத்தட்ட 35 இலட்ச ரூபாய். இதனால் வசதி வரும் போது பார்த்துகலாம் என பிள்ளை பெற்றுக் கொள்ளாத அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். உங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸை மட்டும் பணிபுரியும் கம்பெனிகள் பார்த்துக் கொள்ளும் ப்ரிமியமும் கொஞ்சம் கம்மி. சொந்த வீடு கார்களுக்கு நாம் தான் இன்சூரன்ஸ் கட்டவேண்டும்.

இன்சூரன்ஸ் கம்பெனியுடன் நாம் பணிபுரியும் கம்பெனி டை - அப்பில் இருந்தால் கட்டணம் கொஞ்சம் குறையும். இயற்கை சீற்றங்களான டொர்னாடோ புயல், வெள்ளம்,தீவிபத்து போன்ற இயற்கை சீற்றங்களுக்கும்
இன்சூரன்சை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். அதிலும் டுபாக்கூர் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இங்கு உண்டு. இன்சூரன்ஸ் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நம்பகமான நிறுவனமாக இருக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் கம்பெனியின் அனுபவம், அவர்களது சேவை, பிறரின் நற் சான்றிதழ் இத்தனையும் சரி பார்த்து நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். எல்லா இன்சூரன்சிலும் நாம் தேர்ந்தெடுக்கும் கேட்டகிரி, நம் நிர்ணயிக்கும் தொகை, நமக்கு சாதகமான அம்சங்கள் இதைப் பொறுத்து தான் உங்கள் ப்ரிமியம் தொகை இருக்கும். அதைகட்டாவிட்டால் அமெரிக்காவில் நீங்கள் குப்பையைக்கூட கொட்ட முடியாது. சுருக்கமாகச் சொன்னால்..

அமெரிக்காவில் நம் வாழ்க்கைக்கு கம்பெனி தரும் இல்லாள் அமைவது மட்டுமல்ல இன்சூரன்ஸ் கம்பெனி அமைவதும் இறைவன் கொடுத்த வரம். வீட்டு ஃப்ர்னிச்சர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டி அதை நன்கு பராமரித்து இன்சூரன்ஸ் க்ளைம் செய்யாது இருந்தால் 4 ஆண்டுக்குப் பிறகு நீங்கள் கட்டிய இன்சூரன்ஸ் தொகையில் பெரும் சதவீதம் உங்களுக்கு திரும்பக் கிடைக்கும்.. அங்கு சில இன்சூரன்ஸுகள் சேமிப்பாகவும் இருக்கிறது.

எல்லார் வீட்டிலும் மினி ஜிம் இருக்கிறது.. வீடுகள் இருக்கும் பகுதியில் ஓடுவதற்கு பெரிய கிரவுண்ட் கட்டாயம் அமைந்துள்ளது. தற்சமயம் உணவுப் பழக்கங்கள் கூட மாறிவிட்டது. இத்தனைக்கும் 12 வருடங்களுக்கு முன் அங்கு வெஜிடேரியனே கிடையாது என்ற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. ஜங்புட் பற்றி எல்லாம் நல்ல விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது மட்டுமின்றி அங்கு ரிட்டயர் மெண்ட் 68வயதில் தான்.

நாற்பது ஐம்பது வயதுகள் எல்லாம் பேரிளம் வயதுகள் அங்கு 70க்கு மேல் தான் ஓல்டு மேன். அவர்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் தொகை ஒரு சேமிப்பே.மேலும் அங்கு உடல்நலத்தில் அக்கறை அதிகம் அதிகாலை, மதியம், மாலை இப்படி எந்நேரமும் பலர் ஜாகிங் போவதை பனிக் காலத்திலும் பார்க்கலாம். நம் தமிழர்கள் கையில் பட்டையாக ப்ளூ நிறத்தில் கட்டியிருந்த பிளாஸ்டிக் வாட்ச்சைப்பார்த்தேன்.

அது என்ன என்ற போது தினமும் அவர் நடக்கும் அடிகளை அளந்து சொல்லும் கருவி அது அதன் ரிப்போர்ட்டை கம்ப்யூட்டரில் இணைத்து பணிபுரியும் அவர்கள் கம்பெனிக்கு அனுப்பிவிட்டால் உங்கள் நடையில் எத்தனை ஸ்டெப்புகள் இருக்கோ அதற்கேற்றபடி இன்செண்ட்டிவ் உண்டு.. இதை இன்சூரன்ஸ் கட்ட பலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் உடல் நலத்தில் அவ்வளவு அக்கறை கொள்கிறது அந்தக் கம்பெனி.

இந்தளவிற்கு நம் மீது அக்கறை கொள்ளும் கம்பெனிக்கு நாம் என்ன கைமாறு செய்ய எனக் கேட்கிறீர்களா..? ரெண்டே வருடத்தில் வேறு கம்பெனி மாறிவிடுவது தான் அந்த கைமாறு..! ஏன்.? அதுபற்றி நாளை..

வரும்...

No comments:

Post a Comment