Wednesday 2 March 2016

ஹலோ அமெரிக்கா - 12

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 12

அமெரிக்காவில் சொந்தங்கள் என்பது பலருக்கு அங்கு குடியேறிய பிற தமிழ் நண்பர்கள்  தான். விதிவிலக்காக அண்ணன் தம்பி சகோதரி இப்படி குடும்பத்தில் அனைவருமே அமெரிக்காவில் இருக்கும் குடும்பங்களும் உண்டு. டெக்சாசில் நண்பர் கேசவனின் குடும்பத்தார் 24 பேர் அங்கு இருக்கிறார்கள் என அறிந்தேன்.. அமெரிக்காவில் கவுன்சிலர் எலக்ஷன் நடந்தால் நிச்சயம் நண்பர் கேசவன் கவுன்சிலர் ஆகிவிடுவார். 

நிச்சயமாக அங்குள்ள தமிழ்க்குடும்பங்களுக்குள் இருக்கும் பிணைப்பு அலாதியானது.. இங்கு நட்புக்கள் தான் சொந்த பந்தங்கள். பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளில் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள்.. பண்டிகை வரை காத்திருக்காமல் மாதமொரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ யார் வீட்டிலாவது ஒன்று கூடுகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் பங்கிற்கு ஏதாவது சமைத்து எடுத்து வருவர்.

அனைவரும் ஒன்றாகக்கூடி அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட்டு பின்பு சிரித்து பேசி மகிழ்ந்து அவர்களது நினைவுகளால் தாய் நாட்டிற்கு வந்து போகிறார்கள்.. அவர்கள் உணவினை எடுத்துக் கொண்டு வந்து பங்கிட்டு சாப்பிட்டதைப் பார்த்தபோது எனக்கு கூட்டாஞ்சோறு தான் நினைவுக்கு வந்தது. தமிழ்ப் பள்ளிகள் மூலம் தமிழ் படிப்பது மட்டுமின்றி பாரம்பரிய தமிழர் கலைகளை வளர்க்கிறார்கள் இது எனக்குப் பெருமையாக இருந்தது.

ஆம்.! கரகம், சிலம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம் போன்ற நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள். மினியாபொலிஸ் தமிழ்ச் சங்கத்தில் இந்த நிகழ்வினைக் கண்டேன். ஒரு நிமிடம் தமிழகத்தில் இருப்பது போலவே உணர்ந்தேன் அப்படியே ஒரு அரசு விழா போல இருந்தது. அங்கு ஆடியவர்கள் எல்லாம் உயர்பதவியில் உள்ள தமிழர்கள்.பாராட்டுக்கள்.

தமிழ் நூல்கள் சேகரிப்பு, கணினித்தமிழ், திருக்குறள், கம்பன் விழா போன்ற பல தமிழ் வளர்க்கும் நிகழ்வுகளும் ஏராளம். இங்குள்ள வட அமெரிக்க தமிழ் அமைப்பான ஃபெட்னா தான் மிகப் பெரிய தமிழர் அமைப்பு. 50 மாநில தமிழ்ச்சங்கங்களும் ஃபெட்னாவின் ஆலோசனை பெற்று தான் செயல்படுகின்றன. இவ்வமைப்பில் உள்ள  பல புரவலர்கள் பொருள் தந்து பல வகைகளில் அமெரிக்கா முழுவதும் தமிழ் மொழியை வளர்த்துகிறார்கள். 

பிற மொழிகளை கற்றுக் கொள் தமிழ் மொழி மீது பற்றுக் கொள் என்னும் வாசகமும்.. பிறமொழிகளை நேசி தமிழ்மொழியை சுவாசி என்னும் வாசகமும் என்னை வெகுவாக கவர்ந்தன. தாய்நாட்டைப் பிரிந்து பெற்ற தாய் தந்தையரைப் பிரிந்து சொந்தங்களை துறந்து உலகின் இன்னொரு மூலையில் புதிய சூழலில் ஒவ்வாத பருவநிலையில், கடைசிவரை நிலைக்குமா நிலைக்காதா என அறுதியிட்டுக் கூற முடியாத பணியில்...

நிரந்தரமில்லா பணி இருந்தாலும் நீ வாழத் துணி என உறுதியுடன் போராடுகின்றனர் தமிழர்கள். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மட்டும் பாராமல் தமிழையும் சேதாரமின்றி காக்கிறார்கள். இது தெரியாமல் உங்களை விமர்சித்தவர்கள் கூட நிச்சயம் இனி போற்றுவார்கள்.. 

அமெரிக்க வாழ் தமிழர்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது தான் ஆனால் அதற்கு அவர்கள் இழந்தது ஆயிரம்.. நாங்கள் உங்களை முடிந்தவரை புன்னகை பூக்க வைப்போம்.. எங்கள் விரல்கள் உங்கள் கண்ணீர் துடைக்க மட்டுமல்ல உங்கள் கைபிடித்து மகிழ்ச்சியின் வாசலுக்கும் அழைத்துச் செல்லும். எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு மட்டுமில்லை கடல் எல்லை தாண்டி அமெரிக்காவிலும் தமிழ் வளர்க்கும் உங்களுக்கும் ஒரு சல்யூட்..ஜெய்ஹிந்த்..!

நிறைந்தது.

No comments:

Post a Comment