Friday 4 March 2016

மெராமெக் அதிசயகுகை 1

#திரில்_குகைப்பயணம்

பார்ட் - 1

அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் நகரிலிருந்து ஒரு மணி நேரக் கார் பிரயாணத்தில் இருக்கிறது மெராமெக் குகைகள். இந்தியாவில் உள்ள அஜந்தா எல்லோரா போன்ற குகைகள் மனிதனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஓவிய குகைகள் ஆனால் இது இயற்கை என்னும் ஓவியன் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பாறைப் படிமங்களை உள்ளடக்கிய குகைகள்.. அத்தனையும் பல மில்லியன் ஆண்டு வயதுள்ள பொக்கிஷங்கள்.

கோடையில் சலசலத்தும் குளிரில் உறைந்தும் ஓடுகின்ற மிசெளரி ஆற்றங் கரையின் ஓரத்தில் மெளனமாக வீற்றிருக்கும் அந்த மலையை வெளியில் இருந்து பார்க்கும் போது அது உள்ளே வைத்திருக்கும் அதிசயத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. வலமிருந்து இடமாக மதுரை ஆனைமலை போல ஆனால் அந்தளவு நீளம் கூட இல்லை சற்று குறைவு தான். ஆனால் அதன் உட்புறம் வாசலில் இருந்து உள்ளே 26 மைல்கள்.!

நாங்கள் சென்ற அன்று மிசெளரி ஆற்றில் அந்தக் குளிரிலும் நீர் உறையாமல் சலசலத்துக் கொண்டிருந்தது.. ஆற்றங்கரை என்பதால் அடித்த குளிர் பற்களை Wi - Fi connection கிடைத்தவுடன் குவியும் மொபைல் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் போல கடகடக்க வைத்தது. வாசலில் 2கெளபாய் கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணப் பையுடன் நிற்கும் சிலை. ஏதோ வேடிக்கைக்கு வைத்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு அங்கே புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

உள்ளேயும் பல இடங்களில் கெளபாய் உருவங்கள்,தொப்பிகள், சிலையாக கொள்ளையர் உருவங்கள், துப்பாக்கிகள், கோடாரிகள் எல்லாம் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.. சுவர்களிலும் பலகைகளிலும் ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்ற பெயரை அடிக்கடி படிக்க நேரிட்டது. யாரோ ஒரு மிகப் பெரிய வீரன் என நாங்கள் நினைத்திருந்தோம்.. கடைசியில் குகைக்குள் நுழையுமிடத்தில் காத்திருக்கும் போது தான் தெரிந்தது அவன் ஒரு கொள்ளைக்காரனென்று. 

ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஒரு பழங்காலத்து அமெரிக்க வீரப்பன். நம்ம வீரப்பன் சந்தனமரம் வெட்டி காடுகளில் மறைந்து வாழ்ந்தது போல ஜெஸ்ஸீரப்பன் 1870 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவை கதிகலங்க அடித்த கொள்ளையன். தன் சகாக்களுடன் ரயில் மற்றும் வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு வந்து இந்த குகைகளுக்குள் மறைந்துவிடுவானாம். இந்த குகையின் அத்தனை இண்டு இடுக்குகளும் தங்கள் ஜாதகத்தை அவனிடம் தந்துவிட்டபடியால்..

எல்லாம் அவனுக்கு சாதகமாகவே இருந்தது. இந்த குகைக்குள் அவன் வைத்தது தான் சட்டம் சதுரம் வட்டம் எல்லாமே.. இந்த குகைக்குள் அவன் தண்ணீருக்குள் முதலை போல அவனை பிடிக்கவோ வெல்லவோ முடியாது. அறிவியல் வளர்ந்து விட்ட இந்த நூற்றாண்டிலும் குகைக்குள் சக்தி வாய்ந்த விளக்குகள் போட்டதும் பளிச்சிட்ட குகையானது விளக்கு அணைந்ததும் மணிரத்னம் பட எப்ஃக்டில் சட்டென இருள் சூழ்ந்தது. அப்படி என்றால் 1870களில் இந்த கும்மிருட்டில் அவனை வந்து பிடித்திருக்கவே முடியாது. 

வெளியே பாயும் மிசெளரி ஆறும் இந்த குகைக்குள் என்ன இருக்கிறது என ஆவலுடன் சைடில் பாய்ந்து எட்டிப் பார்க்க ஆற்றின் நீர் இந்த குகைக்குள் சில இடங்களில் கசிகிறது, சில இடங்களில் சலசலக்கிறது,சில இடங்களில் அருவியாக கொட்டுகிறது. இந்த வாட்டர் எபஃக்டினால் மொத்த குகையுமே ஏ.சி போட்டது போல சிலு சிலுக்கிறது. அக்காலத்தில் இந்த குகையில் மிகப் பெரிய வெடிமருந்து கிடங்கு ஒன்றும் இருந்ததாம். 

வெளியே போய் கொள்ளையடிக்க இந்த 26 மைல் அகல ஏ.சி வீட்டில் வந்து பதுங்கிட, நன்கு சமைத்துச் சாப்பிட, என ராஜ போக வாழ்க்கை வாழ்ந்த ஜெஸ்ஸீரப்பன் எப்படி இறந்தான் என்பது மறைந்த மலேசிய விமானம் போல மர்மமாகவே உள்ளது. இதையெல்லாம் மீறி ஜெஸ்ஸிக்கு தெரியாத பல மில்லியன் காலத்து அதிசயம் ஒன்று குகைக்குள் இருந்ததை அவன் பெரிதும் அறிந்திருக்க மாட்டான்.. அதுதான் தானாய் வளரும் அதிசயப் பாறைகள்..! 

அது பற்றி நாளை...வரும்

No comments:

Post a Comment