Thursday 3 March 2016

ஹலோ அமெரிக்கா 11

#அமெரிக்கவாழ்க்கையும்_தமிழர்களும்

பார்ட் - 11

பொங்கல் தீபாவளிக்கெல்லாம் அங்கு விடுமுறை கிடையாது கொண்டாட வேண்டுமெனில் லீவு எடுத்துத்தான் கொண்டாட வேண்டும். இதில் தீபாவளி கொஞ்சம் ஓ.கே ஏனெனில் இந்தியர்கள் அனைவரும் கொண்டாடுவதால் அது கொஞ்சம் பிரபலம். தீபாவளி பலகாரம் ஓ.கே ஆனால் இந்த பட்டாசு.? நம்ம ஊருபோல தெருவில் கம்பளம் விரிப்பது போல டென் தவுசண்ட் வாலா வைத்து வெடிக்க முடியாது.வெடித்தால் நீங்கள் கம்பிமத்தாப்புக்கு பதில்..

கம்பி எண்ண வேண்டியது வரும்.அங்கு பட்டாசு வெடிக்க அனுமதி வாங்க வேண்டும். ஏதோ போனால் போகட்டும் என வாசலில் வைத்து வெடிக்க கம்பி மத்தாப்பு புஸ்வாணத்திற்கு மட்டுமே அனுமதி.. அதிலும் வெடிக்காத புஸ்வாணம் இருப்பது அவசியம். இந்திய அமைப்பினர் வேண்டிக் கேட்டுக் கொண்டால் பட்டாசு வெடிக்க ஊருக்கு நடுவே யாருக்கும் இடைஞ்சல் இல்லாத பார்க் போல ஏதாவது ஒரு பொது இடம் தரப்படும். 

அங்கே எவ்வளவு நேரம் நாம் வெடிகள் வெடிக்கப்போகிறோம் எவ்வகையான வெடி?அதன் ஒலியளவுகள் என்ன? எல்லாம் எழுதிக் கொடுத்து அனுமதி பெற வேண்டும் இங்கு ஒவ்வொரு மாநிலத்தின் விதிகளும் மாறுபடும். அதன் படி தான் வெடிக்க முடியும்.விடுப்பு கிடைக்காதவர்கள் தீபாவளியன்று வீட்டில் சமைத்து புத்தாடை அணிந்து கொண்டாடுவதை விட அதையொட்டி வரும் வார விடுமுறையில் கொண்டாடுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு வசதி.

ஆனால் இப்போது ஒபாமா ஜனாதிபதி ஆனதும் தான் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.பொங்கலும் அப்படித்தான் பொதுவாக பொங்கல் நேரம் அங்கு குளிர்காலம் என்பதால் ஜனவரி 15முதல் பிப்ரவரி 15வரை வசதிப்படும் சனி ஞாயிறுகளில் கொண்டாடுகிறார்கள். பானை வைத்து குலவையிட்டு பொங்கல் வைக்க முடியவில்லை என்றாலும் அது போல மாடல்கள் செய்து வைத்து அந்த முறையை நினைவு படுத்திக் கொண்டாடுகிறார்கள். 

அந்த சமயத்தில் தான் அங்கு பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அதில் கலந்துகொள்ளத்தான் நாங்கள் அங்கே போனோம். முக்கியமாக நவராத்திரி கொலுவும் அங்கு பிரசித்தம் கொலு வீடுகளுக்கு நம்ம ஊர் போல அழைப்பதும் போவதும் உண்டு. விளக்குபூஜை போன்ற பெண்கள் கொண்டாடும் விழாக்கள் அடிக்கடி நடக்கும் கணவன்மார்கள் மனைவியை கொண்டு போய் இறக்கி விட்டுவிட்டு பிறகு வந்து அழைத்துப் போவார்கள். 

ரங்காச்சாரிக்கு ரம்ஜான் விடுமுறை கிடைத்தது போல அவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கிடைக்கும். அந்நேரத்தில் அதை வீணாக்காது ஏதாவது ஒரு சிறிய சுற்றுலா கிளம்பிவிடுகிறார்கள். அமெரிக்காவில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது கிறிஸ்துமஸ் தான் வீட்டு விளக்கு அலங்காரங்கள் எல்லாம் ஜொலி ஜொலிக்கும்..நம்ம ஊர் பீச் மணலில் வீடு கட்டுவது போல அங்கு பனியினால் பெங்குவின் பொம்மை செய்வது வழக்கம்.

நரகாசூரனை வதம் செய்த வாசுவின் பண்டிகையோ தொழுவத்தில் பிறந்த இயேசுவின் பண்டிகையோ அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு இரண்டுமே ஒன்று தான்.. அங்குள்ள உறவுகள்,நண்பர்கள்,மொழி, கலாச்சாரம் இவைகள் பற்றி அடுத்த பதிவில்..

வரும்...

No comments:

Post a Comment