Saturday 9 July 2016

1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈1️⃣

1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈1️⃣

கலிபோர்னியாவில் இருந்து ஃப்ளோரிடா செல்ல கடைசி 5 நிமிடத்தில் விமானத்தை பிடித்த பரபர கதையை ஏற்கனவே சொல்லியிருப்பேன்.. அங்கிருந்து ஐந்தரை மணிநேரம் பிரயாணித்து பிரியாணியாகி மியாமி நகரில் விமானத்திலிருந்து துப்பப்பட்டோம்.. உடலெங்கும் அடித்து போட்டது போல வலி கடந்த இரண்டு நாட்களாக கலிபோர்னியாவில் சுற்றியது கடைசி தினத்தின் அதிகாலை விழிப்பு , அதிகாலை டிராஃபிக். 

விமானத்தை பிடிக்க நடந்த அலைக்கழிப்பு பிறகு பறக்கும் போது காற்றின் வேகத்தால் ஒட்டக சவாரி போல தூக்கியடித்து குலுக்கிய விமானப்பயணம் எல்லாம் சேர்த்து காலி கோக் டின்னை நசுக்கியது போல எங்களை ஆக்கி இருந்தது.. இப்போது ஆர்லாண்டோ போக வேண்டும் எங்களை அங்கு காரில் அழைத்து செல்ல வந்திருந்த வெங்கியிடம் எவ்வளவு நேரம் பயணம் என்றோம் நாலே மணிநேரம் தான் என காதில் ஆஸிட் வார்த்தார்.!

மதுரை சென்னை தொலைவை அமெரிக்க சாலைகளில் 4 மணிநேரத்தில் எளிதில் கடக்கலாம் கிட்டத்தட்ட 300 மைல்கள்.! நாங்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்தது முதல் இப்போது மாலை 5 மணிவரை ஒரே ஒரு பர்கரும் ஒரு கிளாஸ் கோக்கும் 5 டம்ளர் தண்ணியும் மட்டும் தான் உணவு. பசி எங்களை ரொனால்டோ போல பந்தாடியது.. ஒருமணிநேர பயணத்தில் ஒரு அற்புதமான இந்திய ரெஸ்ட்டாரெண்ட் இருக்கு கொஞ்சம்...

பசி பொறுக்கமுடியுமா என்றார் வெங்கி காந்திய வழியில் எங்கள் உண்ணா நோன்பை அடுத்த ஒரு மணிநேரத்திற்கு போஸ்ட்போன் செய்தோம்.. காரில் இருந்த 2 பிஸ்கெட் பாக்கெட்டுகள் கண்ணிமைக்கும் நேரத்தின் கால் பங்கு நேரத்தில் காலியானது இல்லாவிட்டால் நாங்கள் கபாலி ஆகியிருப்போம்.! ஏன்னா வயிற்றில் பசி என்னும் நெருப்புடா.. பிஸ்கெட்டும் குடிநீரும் வயிற்று நெருப்பை கொஞ்சம் அணைக்க கொஞ்சம் தெம்பு வந்தது.

அடுத்த ஒருமணிநேரம் ஃப்ளோரிடா மாநிலத்தின் முதலைகள் மலைப் பாம்புகள் பற்றி திகில் கதைகளை கேட்டுக் கொண்டே ரெஸ்ட்டாரெண்ட் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து பார்த்தால் அங்க கிணத்தைக் காணோம் அடச்சே ரெஸ்ட்டாரெண்ட காணோம்.. மெட்ராஸ் தர்பார்ன்னு அந்த ஓட்டல் பேரு இங்கதான் இருந்துச்சு என புலம்பினார் வெங்கி.. இருங்க கேட்போமுன்னு உள்ளே போனோம் ஒரு பார் தான் இருந்தது..!

அங்கிருந்த ஒருவர் வாங்க வாங்க வணக்கம் என்றார் தமிழில்.. நம்ம திருச்சியை சேர்ந்தவராம் பெயர் சாகுல் அங்கு மேனேஜராக இருக்கிறார் மெட்ராஸ் தர்பார் இப்போது இந்தியன் கஸினாக பேர் மாறி இருந்தது மற்றபடி எல்லா உணவும் கிடைக்கும் என எங்கள் வயிற்றில் பால் தேன் நெய் தயிர் எல்லாம் வார்த்தார்.. சமோசா முதல் ஊத்தப்பம் வரை எல்லாம் சுடச்சுட அருமையாக பரிமாறினார்கள். திருப்தியாக சாப்பிட்டோம்.

கிளம்பும் போது 8 மணியாகிவிட்டது.. இனி ஆர்லாண்டோ போக இன்னும் 3 மணிநேரம் ஆகுமுன்னார் வெங்கி.. சரி போய் நல்லா ரெஸ்ட் எடுக்கறோம் நாளைக்கு எங்களை சீக்கிரம் எழுப்பிடாதிங்க என்றோம்.. அய்ய நீங்க நாளைக்கு காலையில் 6 மணிக்கே ரெடியாகி கிளம்பணும் தெரியுமா என்றார். அதெல்லாம் முடியாதுங்க நாங்க ரெஸ்ட் எடுக்கணும் என்றோம் அப்போ நீங்க டிஸ்னிலாண்ட் போகலையா என்றார் குறும்பாக சிரித்தபடி...

என்ன டிஸ்னி லாண்டா!!!! அப்போதே எங்கள் தூக்கம் பறந்தது.. உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் டிஸ்னி லாண்ட் போயிருக்காவிட்டாலும் சொன்னாலே தெரியும் பெயர் டிஸ்னி.. ஒரு முறை அங்கு போகும் வாய்ப்பு என்பதே ஒருவருக்கு கிடைத்த பெரும் யோகம்..அதிலும் உலகில் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும் பல டிஸ்னி லாண்ட்டுகளில் மிகப் பெரியதான ஆர்லாண்டோ நகரில் உள்ள மேஜிக் வேர்ல்டுக்கு போகக் கிடைத்த வாய்ப்பு என்றால் நிச்சயம் நாங்கள் யோகக்காரர்கள் தானே.! கண்களைத் திறந்து கொண்டே கனவு காண ஆரம்பித்தோம்.. விடிந்தது.. (வரும்...)

No comments:

Post a Comment