Friday 29 July 2016

9️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰9️⃣

நாங்கள் கோஸ்ட் பேலஸ் போக ஷோ துவங்க சரியாக இருந்தது இங்கு நான்கு நான்கு பேராக செல்லும் வண்டியில் ஏற்றிவிட்டார்கள் அது ஒரு தண்டவாளத்தில் பயணிக்கும் வண்டி சுரங்கத்தில் செல்லும் டிரெயிலர் போல.. வண்டி கிளம்பியது. தமிழகத்து சாலையில் பயணித்த அனுபவம் அப்படி குலுங்கியது.. ஆனால் மிரட்டி விட்ட பயணம் அது. எங்கும் கும்மிருட்டு மெல்லிய நீல நிற ஒளி எங்கும் தூசு படிந்தார் போல புகை.

அதன் நடுவே கண்ட காட்சிகள்.. மிரட்டி விட்டார்கள் சவப்பெட்டிக்கு உள்ளேயிருந்து மேல்புற மூடியை தபதப வென தட்டி அதன் மேலிருந்த ஆணியை தள்ளுவது, கையில் தன் தலையை வைத்துக் கொண்டு முண்டம் அதன் தலையை சீவுவது, தன் விரலை வெட்டிக் கொள்ளும் கிழவி, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் குட்டிச்சாத்தான்கள்.. முகத்தை கிழித்து எலும்பை துடைக்கும் இளம்பெண்.. அலறல், சிரிப்பு, அழுகை என திகிலூட்டினார்கள்.

அவ்வப்போது நாம் போகும் பாதையின் வல இட பக்கத்தில் படாரென்று கதவை திறந்து கொண்டு சிரிக்கும் உருவங்களும் ரத்தம் வழிய சிரிக்கும் டிராகுலாக்களும் உண்டு விர்ச்சுவல் எஃபெக்டில் தலை கீழாக நடக்கும் பேய்கள் தொங்கும் பேய், ஆடும் பேய், பாடும் பேய், சிரிக்கும் பேய் என பல வெரைட்டிகளில் பேய்கள் தென்பட்டன நம்ம தமிழ் சினிமாகாரங்க இங்கே போனால் 2050 வரை பேய்ப் படங்களுக்கு அதிக கான்செப்ட் கிடைக்கும். 

வெள்ளை நிற முகத்தோடு வெளியேறி உணவு உண்ணும் பகுதிக்கு வந்தோம் எங்கள் பிக்னிக் பேக்கை பிரித்து அமர்ந்தோம்.. ரம்யாவிற்கு நல்ல கை மணம் லெமன் சாதத்தின் வாசனை அந்த ஏரியாவை நிறைத்தது எல்லாரும் எச்சிலூற எங்களையே பார்த்தார்கள்.. அழகர் கோயிலுக்கு போவது போல கிழங்கு காரக்கறி,லெமன், தயிர்சாதம் ஊறுகாய் என கட்டுச்சோறு கட்டிட்டு அமெரிக்கா டிஸ்னி போனது முதன் முதலில் நாங்களா தான் இருக்கும்.

சாப்பிட்டு முடித்த போது எல்லா வாட்டர் கேனையும் உபயோகித்து இருந்தோம் நிறைய சுமை குறைந்து இருந்தது மணி 1:45 காலையில் இருந்து நடந்து களைத்த அலுப்பு, கால்வலி, விளையாட்டுகளால் ஏற்பட்ட உடல் வலி இப்போது திருப்தியான நம்ம ஊரு கட்டுச்சோறு அங்கு வீசிய மென்காற்று இவை எல்லாம் உள்ளே இருந்த தூக்கப் பெருச்சாளியை உசுப்பி விட அங்கு இருந்த பார்க் பெஞ்சில் அப்படியே கண்ணயர்ந்தோம். 

பார்க் பெஞ்ச் என்றாலே அதில் தூங்கிவிடுவது என்ற தலையாய தமிழனின் குணம் டிஸ்னி பார்க்கிலும் வெளிப்பட்டது.. ஆனால் எதிரில் ஒரு ஸ்பானிஷ் குடும்பமும் தூங்கியதைப் பார்த்தோம் ஏதோ ஒரு ஜீன் தொடர்பு நமக்கும் அவர்களுக்கும் இருந்திருக்கும் போல.! கனவில் அமெரிக்க டோனெட் உடன் அலாவுதீன் பாயில் ஏறி பறந்து அப்படியே கரீபியன் கப்பலில் குதித்து அங்கிருந்து மலை ரயிலில் ஏறி டிகி பேர்ட் காட்டுக்குள் வந்தேன்..

காட்டில் ஹாய் ஹனி இதோ உங்கள் விளக்கு என்றாள் விற்பனைப் பெண் அதை வாங்கிக் கொண்டு திரும்பினால் டோனெட் தன் தலையை கழட்டி கையில் வைத்துக் கொண்டு தலை சீவிக்கொண்டிருக்க.... பப்ர பப்ர பப்ர பப்ர பப்பரபாம் என டிரம்பட் ஒலி கேட்டு எழுந்தேன்.. அடச்சே பூரா கனவு ஒலி வந்த திசை நோக்கினால் புகழ் பெற்ற டிஸ்னியின் ரோட் ஷோ துவங்க இருந்தது மணி 2:30 கிட்டத்தட்ட 40 நிமிடம் உறங்கியிருக்கிறோம்.

கொஞ்சம் ப்ரெஷ்ஷாக உணர்ந்தோம் அருகில் இருக்கும் ரெஸ்ட் ரூமிற்கு சென்று வொடிகலோன் மணக்கும் சோப்பால் முகம் கழுவி மேலும் ப்ரெஷ்ஷாகி வெளியே வந்தோம்.. சாலையின் இரு பக்கமு மக்கள் கூட்டம் அலைமோதியது இடம் கிடைக்க நிறையவே சிரமப்பட்டோம் ஷோ துவங்கி இருந்தது.. ஒருவழியாக இடம் கிடைத்து அங்கே நாங்கள் கண்டகாட்சி...

(வரும்...)

No comments:

Post a Comment