Friday 29 July 2016

ஜன(ரஞ்ச)கராஜ்

#ஜனகராஜ்

நடுநடுங்கும்குரல் அப்படியே உச்சஸ்தாதியில் ஏறி அப்படியே அமுங்கும் மாடுலேஷன்.. என் போன்ற மிமிக்ரி கலைஞர்களுக்கு இந்த வாய்ஸ் ஒரு வெல்லம்.. அந்த காலத்தில் இந்தக் குரலுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ஒவ்வொரு மிமிக்ரி கலைஞனுக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். ஜனகராஜ் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த நடிகன்.. ஆரம்பத்தில்..

இவரை அரவணைத்தது இயக்குனர் பாரதிராஜா அவர்கள்.. அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தது பாரதிராஜாவே.. ஆரம்ப காலங்களில் மிகப் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்காலங்களில் முக்கிய காரக்டர் தந்திருப்பார் பாரதிராஜா.. காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவராக நடித்திருப்பார்.. ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர்

முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" என கதறி அழும் ஜனகராஜை மறக்க முடியுமா.? 80 களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த 7 பேரையும் 80 களில் 7 ஸ்டார்ஸ் என்பார்கள்.. இவர்களின் எல்லா...

படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார்.. பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே ஒரு பாத்திரம் அவர்கள் கதையில் இருக்கும்.. ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது.. தங்காச்சிய நாய் கட்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்ஷாகாரனாக இருந்து பணக்காரனாக நடிக்க வந்து சைனா டீயும்..

மசால்வடையும் வோணும்பா என ராஜாதிராஜாவிலும், நக்மா ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் பை சொல்வது என பாட்ஷாவிலும்  இப்படி எத்தனை படங்கள்.. அதே போல கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன்.. அபூர்வ சகோதரர்களில் அந்த இன்ஸ்பெக்டர் காரெக்டர்.. முத்தாய்ப்பாக நாயகனின் கமலின் நண்பன் என ஜனகராஜ் திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் பிரும்மாண்ட சிக்ஸர்கள்.



சத்யராஜுடன் பல படங்கள் அதில் மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெய பாஸ்கர் என அலும்பும் அலம்பல்.. இளமை காலங்கள் படத்தில் ஊட்டிக்கு போகாதிங்க.. என கத்தும் பைத்தியமாக, கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் அடித்த லூட்டி.. பிரபுவுடன் கன்னிராசி இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார். இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது.

அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே.. இவரை காமெடி நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது அருமையான குணசித்திர நடிகரும் கூட நாயகன் ஒருபடம் போதும்.. ஆரம்ப காலத்தில் பாலைவனச்சோலை படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே அது தெரியும் ஆனால் இவர் பிரமாதமான நகைச்சுவை நடிகர் என்பார் பாண்டியராஜன்.

இயக்குனர் பாண்டியராஜன் படங்களில் செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் நிச்சயம் ஜனகராஜ் இருப்பார்.. கன்னிராசியில் பாட்டு வாத்தியார்.. ஆண்பாவத்தில்.. ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா.. நெத்தியடியில்.. வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா.. என வித்யாசமான குரல் மாடுலேஷனில் பாண்டியராஜன் அப்பா என தூள் கிளப்பியிருப்பார். பாலச்சந்தர் படங்களிலும் அவர் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.

சிந்துபைரவி புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும் புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர்.. இன்னொரு விஷயம் கவனித்தால் தெரியும்.. ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.. கவுண்டமணி செந்திலை விட அதிக பாடல்களில் நடித்தவர் ஜனகராஜாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.. பூஞ்சிட்டு குருவிகளான்னு ஒரு பாட்டு.. அதை பாடியது..

இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. அந்த படம் வந்த காலங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என விவாதித்தது உண்டு.. அந்த அளவிற்கு சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ்.. வாய்ப்புகள் குறைவினால் அவர் இவருக்காக அதிகம் பாடியதில்லை என்பதே உண்மை.. கவுண்டமணி கோலோச்சிய காலத்தில் எல்லா கதாநாயகர்களுடனும் தவிர்க்க முடியாத நடிகனாக சிறந்து விளங்கியது ஜனகராஜின் திறமைக்கு ஒரு சான்று.

உண்மையில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது ஜனகராஜிற்கு தான் பொருந்தும்.. தமிழ்சினிமாவின் தனி ஒருவன் என்பது ஜனகராஜே தான்.. இவரை தொலைகாட்சி ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.. இந்த முகனூல் காலத்தில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள் கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே என்னும் ஒற்றை மீம்சில் இங்கும் தனிஒருவன் ஜனகராஜ்.

No comments:

Post a Comment