Friday 29 July 2016

8️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰8️⃣

டிகி பேர்டுகள் பற்றி என் குழந்தை பிராயத்தில் அறிந்ததில்லை ஆனால் அமெரிக்காவில் புகழ்பெற்ற கார்ட்டூன் அது அந்த அரங்கத்தில் நாங்கள் சென்று அமர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே ஷோ ஆரம்பித்து விட்டதால் அரங்கை கவனிக்க முடியவில்லை. இதோ ஷோ ஆரம்பித்து விட்டது ஒளி வந்த பின்பு தான் பார்த்தேன் அது 180 டிகிரியில் அரைக்கோள வடிவில் அமைந்த அரங்கம் எங்களுக்கு எதிரே சர்க்கஸ் வளையம் போல வட்டம்.

அதன் கூரையில் இருந்து ஷாண்ட்லியர் போல ஒரு கதவில்லாத பறவைக் கூண்டு கீழிறங்கியது அதன் ஒவ்வொரு கிளையிலும் வரிசையாக கிளிகள், மைனாக்கள், வானம்பாடிகள் என பல பறவை இனங்கள் அமர்ந்திருக்க ஒலித்த இசைக்கு அனைத்தும் அப்படியே வாயசைத்து பாடின..அத்தனையும் பொம்மைகள் தான் ஆனால் நிஜப் பறவைகள் போலவே இருந்தன. அடுத்த 15 நிமிடமும் அந்த காட்டில் நடை பெறும் சம்பவங்கள் தான் பாடல்.

மழை வரும் அறிகுறி வானில் இடித்த இடி பட்ட மரமொன்றில் விழ காடு தீப்பிடிக்கிறது மழை ஒரு புறம் வருமா என தவிப்புடனும் தீ சூழ்ந்து இருக்கும் அக்காட்டில் தன் பறவையினங்களை பறவை ராஜா காப்பாற்றுகிறார்.. இது தான் கதை (நான் புரிந்துகொண்ட) இதில் பூக்கள் செடிகள் எல்லாம் பாடல்கள் பாடி நம்மை வியப்பில் ஆழ்த்தின.. சைடில் இருந்த ஆதிவாசிகள் சிலை அலங்காரத்திற்கு என பார்த்தால் க்ளைமேக்சில் அதுவும் பாடியது.

கிட்டத்தட்ட ஒரு பறவைகள் விக்ரமன் படம் பார்த்த திருப்தி 12 நிமிட ஷோ நிறைவடைய வெளியேறினோம். கையில் இருந்த வாட்டர் பாட்டில்களில் பாதியை காலி செய்து எங்கள் சுமையைக் குறைத்தோம். மணி 12:25தான் இன்னும் நாங்கள் பார்க்க இரண்டு இடம் இருக்கிறது என்றது மேப் அவை என்ன எனப் பார்த்தோம் கோஸ்ட் பேலஸ் & ஜங்கிள் சபாரி.. இரண்டையும் பார்த்துவிட்டு பிறகு லஞ்ச் சாப்பிடலாம் என முடிவெடுத்தோம்.

ஜங்கிள் சபாரி எங்கள் எதிரிலேயே இருந்தது மரத்தால் கட்டப்பட்ட படகுத் துறை வரிசையில் நின்று படகில் ஏறினோம் டிஸ்கவரி சானலில் வரும் ஸ்டீவ் இர்வின் போல காக்கி & காக்கி அணிந்த சபாரி கோ ஆர்டினேட்டர்கள்.. எங்கள் படகில் என்னைப்போல் மும்மடங்கு பருமனில் ஒரு லேடி. அவர் தான் கோ ஆர்டினேட்டர் படகு மெல்லக் கிளம்பி ஒரு யூடர்ன் அடித்ததும் காடு வந்தது அமேசான் நதிப்பயணம் போல இருபுறமும் அடர்ந்த காடு. 

நடுவே எங்கள் படகு சென்றது.. கரையின் இரு புறமும் ஆதிவாசிகள், புலிகள், அனகோண்டா பாம்பு, யானைக்குட்டிகள் குளிப்பது இவை எல்லாம் உயிரோட்டம் உள்ள பொம்மைகளாகச் செய்து அதற்கு உயிரும் கொடுத்து இருந்தார்கள். அவ்வப்போது சிங்கத்தின் கர்ஜனை பறவைகள் இரைச்சல் என ஆடியோ கசிந்தது. ஹோவெனக் கொட்டும் ஒரு அருவிக்கு பின்பக்கம் எங்களை நனையாது படகை ஓட்டிச் சென்றாள்.. புதுமையான அனுபவம். 

அவ்வப்போது முதலைகள் கீழே இருக்கு ஜாக்கிரதை தண்ணீருக்குள் விரலை கடித்து துண்டாக்கும் அமேசான் நன்னீர் ஆற்று மீன்கள் கவனம்.. காட்டாறு வெள்ளம் பாய்ந்தால் சேஃப்டி கார்டை எடுத்து மாட்டிக் கொள்ளுங்கள் என விளையாட்டாக பயமுறுத்தியபடியே வந்தாள்... காட்டு அருவி ஒன்றின் நீரோட்டம் இங்கு இருக்கிறது அதில் மாட்டினால் நம் படகு அருவியின் உச்சிக்கு போய் தலைகுப்புற விழுவோம் ஆடாதீர்கள் என்றாள்.

அவள் சொன்ன அடுத்த வினாடி படகு ஒரு பக்கம் வேகமாக இழுத்து செல்லப்பட்டது.. அவள் போச்சு காட்டு அருவி நீரோட்டத்தில் மாட்டி விட்டோம் என்றாள்.. அங்குமிங்குமாக படகு அலைய சில மீட்டர் தூரத்தில் அருவியின் தலை தெரிந்தது அங்கு போனால் தலை குப்புற விழவேண்டியது தான் நிச்சயம் இதில் ஏதோ ஒரு திரில் இருக்கும் என அனுமானிக்க முடிந்ததால் பதட்டம் இல்லை இருப்பினும் கொஞ்சம் பயம் இருந்தது.

அந்த அருவியின் விளிம்புக்கு போவது போல போன படகு சடாரென வலது பக்கம் திரும்பியது.. பார்த்தால் நாங்கள் படகு ஏறிய அதே இடம் அந்தப் பள்ளம் வெறும் 2 அடி தான் படகு போனால் கூட இறங்கியிருக்குமே தவிர கவிழ்ந்து இருக்காது.. அசடு வழிந்த எங்கள் முகங்களை சிரித்தபடி பார்த்தாள்.. எல்லாரும் ஒரு ஆக்ஷன் படத்தில் நேரடியாக நடித்த அனுபவம் பெற்றதால் எங்கள் இயல்பு நிலைக்கு வர கொஞ்சம் நேரமாகியிருந்தது.

அடுத்து கோஸ்ட் பேலஸ்.. (வரும்..)

No comments:

Post a Comment