Saturday 9 July 2016

தசரதனானோம்..

கலைநிகழ்ச்சிகள் டிவி நிகழ்ச்சிகள் என பொதுவாகவே ஊர் சுற்றி நான்.. என் சொந்தத் தொழிலான விளம்பரத் துறையும் பல ஊர்களுக்கு போகும் படி இருப்பதால் நான் எப்போதும் வீட்டின் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பேன்.. சாமுராய் போர் வீரனைப் போல 2 மாதங்கள் வரை எல்லாம் கழித்து வீடு திரும்பியது உண்டு இது கடந்த 20ஆண்டுகளாக அப்போதெல்லாம் கலங்காத என் மனைவி இப்போது கலங்கியிருக்கிறாள்.

காரணம் எங்கள் ஒரே மகள்.! பிறந்ததிலிருந்து எங்களை விட்டுப் பிரிந்திராத அக்குழந்தை இப்போது கல்லூரி படிப்பிற்காக சென்னை விடுதியில்.. அவளை அங்கு விட்டு விட்டு திரும்பிய முதலிரண்டு நாட்கள் சாதாரணமாக தெரிந்தாலும் இப்போது ஒரு வெறுமை வீட்டில் தெரிகிறது ஆழ்ந்த அமைதியில் இருக்கிறது என் வீடு.. யாருக்காக எழுந்து யாருக்காக உணவு தயாரிப்பது.? காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள தேவையில்லை.

நன்கு தூங்கலாம்.. அறிபறி வேலைகள் இல்லை நிதானமாக எழுந்து இஷ்டம் போல சமைத்து இருக்கலாம்.. ஆனால் இப்போது தான் அதிகாலை விழிப்பு வருகிறது.. மகளின் அறைக்குள் சிறு சப்தம் கேட்டாலும் ஓடிப்போய் பார்க்கிறோம்.. அவள் நினைவுகளில் எங்கள் தலையணை ஈரமாகிறது.. ஒரு செல்போனில் அவள் குரல் கேட்டாலும் குரல் உடையாது இருக்க பிரம்ம பிரயத்னம் செய்யவேண்டியிருக்கிறது.. வாட்ஸப்பில் அவள் குரல் கேட்டால்..

வாசலுக்கு ஓடி வந்து பார்க்கக் தூண்டுகிறது.. நான் இல்லாத போது மகளின் அருகாமையை வைத்து என்னை மறந்த என் மனைவியின் பாடு தான் இன்னும் மோசம் பெண் தசரதனாய் புத்திர சோகத்தில் வாடுகிறார். என்னை உங்களுக்கென்ன பழகிட்டிங்க எனக்கு தான் தாங்க முடியலை என்கிறாள் அடிக்கடி.. அடி பைத்தியக்காரி நான் பிரிவை பழகிட்டேனா எனக்குத் தானே தெரியும் ஆண்டாளை காணாத பெரியாழ்வானைப் போல புலம்புகிறேன்..

நல்லது ஓர் தாமரைப்பொய்கை
நாண் மலர் மேல் பனி சோர,
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,
அழகழிந்தால் ஒத்ததாலோ!
இல்லம் வெறியோடிற்றாலோ!
என் மகளை எங்கும் காணேன்;

(தாது - உள்ளிதழ் (மொட்டு)

தாமரைப் பொய்கையில் மலர்களின் மேல் பனி படர்ந்து அல்லி மலரும் மொட்டுக்களும் உதிர்ந்து அழகிழந்தது போல வீடு வெறிச்சோடிப் போயிற்று என் மகளைஎங்கும் காணவில்லை...

இதை எழுதும்போதே கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. என்ன செய்ய நாளை எப்படியும் ஒருவனை மணந்து கொண்டு பிரிந்து தானே செல்வாள் செல்வமகள் அதற்கான முன் தேர்வு இது என ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்கிறோம். இதுவும் கடந்து போகும் அது தானே உலக நியதி.!

No comments:

Post a Comment