Friday 29 July 2016

5️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈5️⃣

பேரிடி மலைரயில் எனப் பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருந்தார்கள்.. 10 நிமிட ரைடில் உலுக்கி குலுக்கி எடுத்து விட்டார்கள்.. ஆனால் அந்த திரில்.. நிச்சயம் விலை மதிப்பில்லாதது.. சாண்டில்யன் எழுதுவது போல சரேல் சரேல் என ஒரு பாம்பு போல பள்ளம் மேடு வலப்பக்கம் இடப்பக்கம் மேலே கீழே என அது திரும்பும் போதெல்லாம் ஒரு பரவசம்.. அதிலும் எதிரே அருவி நீர் கொட்டிக்கொண்டிருக்க கிட்டத்தட்ட அதை நோக்கிப் போய்...

போச்சு நாம தெப்பலா நனைய போகிறோம் என நினைக்கும் வினாடியில் அருவிக்கு ஒரு அடி தூரம் முன்பு சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் எதிர்க் கட்சி போல சட்டென வலதுபுறம் திரும்பிய கணம் இருக்கிறதே அடடா! அப்போது மெல்லிய நீர்ச்சாரல் நம்மீது விழ டிஸ்னியின் முதல் விளையாட்டே எங்களை பன்னீர் தூவி வரவேற்றதைப் போல இருந்தது. சாகசப் பயணம் முடிந்து இறங்கினோம் பேரிடி இடித்ததில் திரில் மழை பொழிந்தது.

சசி தான் கொஞ்சம் முகம் வெளிறி இறங்கினான்.. நான் என் அமெரிக்க டோனட்டை தேடினேன்..காணவில்லை இந்நேரம் அவள் அந்த அருவி அனுபவத்தை என் போல ரசித்துக் கொண்டிருக்கலாம்.. கிளம்பினோம் எங்களது அடுத்த ஷோ கரீபியன் பைரட்ஸ் என்னும் நிகழ்வு அது 12:00 மணிக்கு தான் 10: 45 க்கு வாட்டர் ப்ளாஷ் என்னும் விளையாட்டு இருந்தது என்னவென்று போய் பார்த்தால் 20 அல்லது 30 நபர்கள் ஒரு வண்டியில்..

அந்த வண்டி 50 அடி உச்சிக்கு ஏறிப் போய் அங்கிருந்து தொபுக்கடிர்னு கீழே இறங்கி தண்ணீர் தொட்டியில் இறங்கி இரு புறமும் நீரை பிளந்து வரும் விளையாட்டு... நம்மூர் தீம் பார்க்குகளில் உள்ளது தான் இருப்பினும் இங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.. மீண்டும் உச்சியில் இருந்து குதிக்கவா என சசி தயங்க நண்பேன்டா என நாங்களும் அவனுடன் நடந்தோம்.. கரீபியன் பைரட்ஸ் அரங்கம் வரும் போது சரியாக 10:50 மணி.

11மணி ஷோவிற்கு ஆட்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்க ஆவலுடன் போய் நாங்க 12 மணி ஷோ ஆனா அதுக்கு பதில் இப்போது போக முடியுமா என வரவேற்பாளினி பெண்ணிடம் கேட்டோம்.. சிரித்த முகத்துடன் ஆணியே பிடுங்க முடியாது என்றாள் அமெரிக்க அசெண்டில்.. வடிவேலு போல் அவ்வ்வ்விக் கொண்டே வெளியேறினோம்.. எங்கள் கை மேப் அடுத்து அலாவுதீன் அற்புத விளக்கு பறக்கும் பாய் விளையாட்டு என்றது.

அதற்கு நேரம் ஏதுமில்லை எப்போது வேண்டுமானாலும் போகலாம் ஆகவே அங்கே போக முடிவெடுத்தோம் அடுத்த 2 நிமிட நடையில் இருந்தது அலாவுதீன் அரங்கு.. ஓரளவு இப்போது இந்தப் பகுதியின் வரைபடம் புரிந்து கொள்ள முடிந்தது எங்களுக்கு குறித்து தந்த அரங்குகளே எங்களைக் கைப்பிடித்து நூல் பிடித்தால் போல அடுத்தடுத்து அழைத்துப் போயின.. இதோ அலாவுதீன் அரங்கம் வந்துவிட்டது மலைத்து போனோம்.

க்யூ வளைந்து வளைந்து வளைந்து நின்றது ஆல் இன் ஆல் அழகுராஜ் போல அதை பெண்டெடுத்து நேராக்கினால் அது சில கிலோமீட்டர்கள் நீளம் வரும் போல.. அலாவுதீன் அரங்கில் இருந்தது ஒரு ராட்டினம் ஆக்டோபஸ் போல பல கைகள் விரிந்திருந்தது.. ஒவ்வொரு கையிலும் ஒரு பறக்கும் பாய் போன்ற வடிவமைப்பில் பைபர் பாய்கள் இது சுற்றிக்கொண்டே மேலும் கீழும் எழும் தாழும் அப்படியே நிஜமாக பறக்கும் உணர்வு தரும் ராட்டினம்.

மிக எளிதான எல்லா வயது குழந்தைகளும் ஏறும் ராட்டினம் ஆகவே கூட்டம் அள்ளியது.. கூட்டத்தில் நின்ற ஒருவரிடம் எத்தனை மணிக்கு வந்தீர்கள் என்றேன் 10:30 என்றார் மணி இப்போது 11.10 இனி அவர் நின்ற இடத்தில் இருந்து பாய் ஏறப்போகும் தொலைவிற்கு அடுத்து 30 நிமிடம் நிச்சயம்.. ஆக இங்கு நாங்கள் நின்றால் கரீபியன் ஷோ பார்க்க முடியாது.. கரீபியன் பைரட்டா? அலாவுதீன் பறக்கும் பாயா? டாஸ் போட்டுப் பார்க்காமல்..

நண்பர் சீனிவாசனுக்கு போன் போட்டுக் கேட்டோம்..சட்டென கரீபியன் பைரட் தான் பெஸ்ட் அலாவுதீனுக்கு தான் எப்ப வேணா அப்படின்னு டைம் இருக்கே கூட்டம் குறைந்ததும் போங்கள் என்றார் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பினால்..அட அங்கே யாரு.! கண்ணை நம்ப முடிய வில்லை அலாவுதீன் லைலாவுடன் உயிருடன் நின்று மக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.! சத்தியமாகச் சிலை அல்ல! இது எப்படி!!! 

(வரும்...)

No comments:

Post a Comment