Saturday 9 July 2016

2️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈2️⃣

2️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈2️⃣

காலை சூரியனோடு போட்டி போட்டு அவன் எழும்போது ஷார்ட் கட்டில் ஞானப்பழம் பெற்ற கணபதி போல நாங்களும் எழுந்து பல் துலக்கி குளித்து ரெடியாக இருந்தோம்.. அவ்வளவு அதிகாலையிலும் சுடச்சுட இட்லி சாம்பார், புதினா சட்னி, பிரட் ஆம்லெட் தயாரித்து வைத்திருந்தார் வெங்கியின் துணைவியார் ரம்யா.. சில பல இட்லிகளை கபளீகரம் செய்து விட்டு அருமையான ஃபில்டர் காபியை கண்மூடி ரசித்துக் குடித்தோம்.

"இந்த பேக்கை எடுத்துக்கோங்க"என்ற ரம்யாவின் குரலில் கண்விழித்தோம் அழகான பிக்னிக் லஞ்ச் பேக் எங்கள் முன் இருந்தது.. லெமன் சாதம் உருளைக்கிழங்கு காரக்கறி, தயிர்சாதம், 2வகை ஊறுகாய், சிப்ஸ் பாக்கெட்டுகள், சில கோக் டின்கள், லெமன் ஃப்ளேவர் கூல்டிரிங்குகள் எல்லாம் இதுல இருக்கு  டிஸ்னியில் நம்ம ஊரு சாப்பாடு கிடைக்காது மேலும் அங்கு எல்லாம் காஸ்ட்லி அதான் என்றார் புன்னகைத்தபடி.

இவை அனைத்தையும் அதிகாலையில் எழுந்து தயாரித்திருக்கிறார் ரம்யா.! நியாயமாக ஞானப்பழம் இவருக்குத் தான் போகவேண்டும்.. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து காரில் கிளம்பினோம் கார் நண்பர் சீனிவாசன் வீட்டில் நின்றது.. சீனிவாசன் டிஸ்னிலாண்டில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பிரிவில் பணிபுரியும் தமிழர்.. அவர் வீடு டிஸ்னிலாண்டுக்கு அடுத்த சாலையில் டிஸ்னி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் இருந்தது.

அங்கிருந்து வெறும் 5 நிமிடத்தில் டிஸ்னியை அடைந்துவிடலாம்.. எனவே தேநீர் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.. ஏற்கனவே இட்லியும், பிரட்டும், காபியும் ஹவுஸ்ஃபுல் போர்டை வயிற்றில் மாட்டியிருந்தது..  தயங்கினோம் புரிந்து கொண்டவர் வீட்டின் சமையலறைக்கு போய் பத்து 200ML மினரல் வாட்டர் பாட்டில்களை கொண்டு வந்தார் இதை வச்சுக்கோங்க டிஸ்னி லேண்டில் எல்லாம் காஸ்ட்லி என்றார் ரம்யாவின் எதிரொலி போல.

டிஸ்னி பணியாளரின் விருந்தினர் என்பதால் எங்களுக்கு கெஸ்ட் பாஸ் கிடைத்தது.. கிரிடிட் கார்டு போல ஆளுக்கொரு அக்சஸ் கார்டு தந்தார். டிஸ்னியின் அண்டாகாகசம் பாஸ்வேர்டு இதில் இருக்கு அங்கு போய் எங்கு இதை ஸ்வைப்பினாலும் குகைகள் திறக்கும் என்றார். அடுத்து டிஸ்னி டூர் காலை 9 மணிக்கு உள்ளே போனால் இரவு 10 :30 வரை என்னென்ன பார்க்கலாம் எந்தெந்த விளையாட்டுக்கு அக்சஸ் கார்டு செல்லும் இப்படி..

பக்கா பிளான் போட்ட பேப்பரை 3 காப்பி எடுத்து எங்கள் மூவருக்கும் கொடுத்தார்..அடுத்து பார்க்கின் மேப்.. நாங்கள் போக வேண்டிய வழி விளையாட்டுகள், ஷோக்கள் நடக்கும் நேரம் அதை தவறவிட்டால் பதிலுக்கு எங்கு போகலாம் எனத்துல்லியமாக திட்டமிட்ட மேப் அதையும் கையில் தந்து ஏதாவது ஒரு இடத்தை மூவரும் அடையாளமாக வைத்துக் கொண்டு யாரும் வழி தவறிவிட்டால் அங்கே வரும்படி பார்த்து கொள்ளுங்கள் என்றார்

இதென்ன அவ்வளவு பெரிய பார்க்கா என்றேன்.. ஆமாம் வெங்கி முழுவதும் சுற்றிப்பார்க்க 7 நாட்கள் ஆகும் என்றார் !! மலைப்பாக இருந்தது அவர் அலுவலகமும் பக்கத்தில் இருப்பதால் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அழையுங்கள் வருவேன் என்று கூறிவிட்டு.. காரை கிளப்பினார்.. மிகச் சரியாக 5 நிமிடங்கள் கார் டிஸ்னி வாசலில் வந்து நின்றது மணி காலை 9:15 அந்த நேரத்திலேயே ஒரு 2000சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

வண்ண மலர்களில் பிரமிப்பூட்டும் மிக்கி மவுசின் உருவம் உள்ள புல் தரை லண்டன் கடிகாரம் போன்ற கட்டிடம் எங்கும் ஹோவென இரைச்சல் மிக்கி மவுஸ் காதுகளை ஹெட் பேண்டாக மாட்டிக்கொண்ட சிறுவர் சிறுமிகள் அனைவரின் கையிலும் அக்சஸ் வாட்ச் (எங்களுக்கு கார்டு) எல்லாரும் டிஸ்னிக்குள் நுழைந்து கொண்டிருந்தனர் செக்யூரிட்டி செக் நடந்து அனுமதித்தனர் உள்ளே நுழைந்தோம் அப்படியே வியந்தோம்.. (வரும்..)

No comments:

Post a Comment