Friday 29 July 2016

1️⃣1️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰1️⃣1️⃣

டிஸ்னியில் மிக்கிமவுஸ் காரக்டர் அலங்கார வண்டியில் வந்தபோது புகழ் பெற்ற மிக்கி மவுஸ் தீம் சாங் ஒலித்தது.. இளையராஜாவின் டிவி லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் காமிரா ஆடியன்ஸ் பக்கம் வரும் போது மேடையில் பாடகர் பாடுகின்ற பாடலை பார்வையாளர்களும் பாடுவதைப் பார்த்திருப்போம்.. இங்கும் அது தான் நிகழ்ந்தது தங்கள் பால்ய வயதில் அறிமுகமான மிக்கி மவுஸ் பாடலை அமெரிக்கர்கள் இணைந்து பாட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி குழந்தைகள் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட அதைப் பாடியது அமெரிக்க மக்களின் வாழ்வில் மிக்கி மவுஸ் எந்தளவு கலந்திருக்கும் என உணர முடிந்தது.. இந்த வண்டி வந்த போது மட்டும் நடனக் கலைஞர்களோடு பொதுமக்களும் ஆட அனுமதிக்கப் பட்டனர். அடுத்து அலபாமா பல்கலைக்கழகத்தின் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இசைத்து வந்த பேண்ட் அணிவகுப்பு. அடடா..

மிலிடரி ஒழுங்கில் டிரம்ஸ் & டிரம்பட் இசைத்துக் கொண்டே அவர்கள் நடந்து வந்தது மிடுக்குடன் இருந்தது.. டிஸ்னியில் பேண்ட் வாசிக்கும் வாய்ப்பு என்பது அமெரிக்காவில் உயரிய கவுரவம்.அந்த இடத்தை அடைய முயற்சிக்காத பேண்ட் குழுக்களே இல்லை எனச் சொன்னார்கள். கண்ணுக்குக் செவிக்கும் நல்ல விருந்து.. மணி 5:30 நேராக அந்த கடைசி விளையாட்டுக்கு செல்ல மேலும் 10 நிமிடங்கள் ஆகியிருந்தது.

அங்கே போனால் எங்கள் கார்டு அக்சஸ் நேரம் முடிந்திருந்தது.. அவ்வளவு தான் இந்த கார்டை வைத்து இனி எந்தக் குகையையும் திறக்க இயலாது அதனால் என்ன இது போல ரைடுகள் ஆறரை மணிக்கு மேல் முற்றிலும் நிறுத்தப்படும். எதிரே இருந்த கடைக்கு போய் 2 பர்கர் ஒரு அரைலிட்டர் கோக் 10 டாலர்கள் கொடுத்து வாங்கி ஒரு ஓரமாக அமர்ந்தோம்.. எதிரே
இருந்த எல்லார் கையிலும் தீப்பந்தம் சைசில் சிக்கன் லெக்பீஸ் இருந்தது..!

விசாரித்தோம் அது வான்கோழி கால் என்றார்கள்.. அமெரிக்காவில் வான்கோழி ஒரு முக்கிய உணவு.. வான்கோழி சமைத்து தேங்ஸ் கிவிங் டே என்றொரு நாளே கொண்டாடுகிறார்கள்.. சரி அதை பிறகு பார்ப்போம்.. பர்கர் கோக் தந்த புத்துணர்வில் எழுந்து நடந்தோம்.. இங்கே ஒரு குட்டி ப்ளாஷ் பேக்.. மதியம் மேஜிக் வேர்ல்டில் விண்டோ ஷாப்பிங் சென்றோம் அல்லவா அங்கு வித்யாசமான ஒரு கலைஞரைப் பார்த்தோம்.

பொதுவாக கேரிகேச்சர் எனப்படும் கார்ட்டூன் ஓவியங்களில் நம்மை வரைந்து தருவார்கள் அல்லவா.. வால்ட் டிஸ்னியில் அது இன்னும் நேர்த்தி ஆகயிருக்கும்.. என்ன கவர்ந்தது சில் அவுட் கட்டர் என்னும் கலையைக் கற்ற கலைஞர்.. அவர் ஒரு மூதாட்டி.. அதென்ன சில் அவுட் நல்ல இருளில் உங்கள் மீது ஒளி பட்டால் உங்கள் நிழல் சுவற்றில் விழுமே அந்த கரிய உருவம் தான் சில் அவுட் .. என்னை ஒரு நாற்காலியில் அமர வைத்தார்.

பக்கவாட்டில் பார்க்கச் சொல்லிவிட்டு கையில் ஒரு பேப்பரையும் ஒரு குட்டி கத்திரிக்கோலையும் வைத்துக்கொண்டு அந்தப் பேப்பரை வளைத்து வளைத்து வெட்டினார் அதிகபட்சம் 2 நிமிடம் அவர் எனது பக்கவாட்டு தோற்றத்தை பேப்பரில் கத்திரித்து முடித்து இருந்தார்.. வியந்து போனேன் என் உருவம் கத்தரித்து எடுத்த குட்டி நிழலாக என் கையில் அடடா.! ப்ரேம் போட்டு நீட்டினார் மொத்தம் 15 டாலர்கள் (₹1200) இருக்கட்டுமே..

அந்தக் கலைக்கு கொடுத்த பணமாக இருந்துவிட்டு போகிறது. அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.. விண்டோ ஷாப்பிங்கில் குட்டி மிக்கி மவுஸ் பொம்மையை கிறிஸ்டோவும் மிக்கிமவுஸ் வாட்ச் ஒன்றை சசியும் வாங்கினார்கள்.. மொத்தம் 70 டாலர்கள் செலவு.. டிஸ்னியில் எங்கள் மொத்த ஷாப்பிங்கே அது தான்.. ப்ளாஷ்பேக் ஸ்டாப்.. மணி ஆறரை ஆகியிருந்தது இனி இரவு 8 மணிக்குதான் எலக்ட்ரிக் பரேடு என்றது மேப்.

அதென்ன எலக்ட் ரிக் பரேடு.? இது  டிஸ்னியின் முக்கியமான பரேடு உலகெங்கும் புகழ் பெற்றது.. கண்கவர் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வருவார்கள்.. இரவில் அது கண்கொள்ளா காட்சி என இங்கு வரும்போதே சொல்லி இருந்தனர்.. காலையில் இடம் கிடைக்காததால் இப்போதே அங்கு இடம் பிடித்து அமர்ந்தோம்.. ஜாலியான அரட்டை.. மணி 8 ஆனது.. இசை ஒலிக்க விளக்கணைய அதோ அங்கே..!

(வரும்...)

No comments:

Post a Comment