Friday 29 July 2016

4️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰🎈4️⃣

டிஸ்னி வேர்ல்டில் சாலையில் நடக்காமல் பிளாட்பாரத்தில் மக்கள் நின்றிருந்தால் அங்கு ரோட் ஷோ நடைபெறப்போகிறது என அர்த்தம்.. ரோட் ஷோ இல்லாத நேரத்தில் தான் மக்கள் சாலையில் இறங்கி நடப்பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் பலப்பல ஷோக்கள் நடக்கும். அத்தனையும் நம் கண்களுக்கு சிறந்த புஃபே.. குழந்தைகளையும் மிகுந்த குதூகலத்தில் ஆழ்த்தும்.

இப்போது பார்க்கில் நுழையும் இடத்தில் சாலையோரம் மக்கள் நின்று கொண்டிருக்க மெயின் ஸ்டிரீட் வெல்கம் என்ற குழுவினரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.. எட்டு அடி உயர போஷாக்கான உயர் ஜாதி குதிரைகள் இரண்டு பூட்டப்பட்ட நீளமாஆஆஆஆஆன சாரட் வண்டி பைலட்டுகள் போல உடையணிந்த வீரர்கள் நிற்க பாரம்பரிய உடையணிந்த ஆடல்கலைஞர்கள் அந்த சாரட்டின் இருபக்கமும் ஆடி வரவேற்றனர்.

ஆட்டம் முடிந்ததும் கரகோஷம்.. மீண்டும் நடைமேடையில் இருந்து சாலைக்கு மக்கள் இறங்க அவர்களோடு கலந்தோம்.. சித்திரைத் திருவிழா கூட்டத்தில் நடப்பது போல மெதுவாகத் தான் நடக்க முடிந்தது.. மேஜிக் வேர்ல்டின் முகப்பில் ஹாரிபாட்டர் படங்களில் வருவது போல கட்டிடம் அதன் முன் அமெரிக்க அறிஞர் அண்ணா போல கை நீட்டி நின்ற ஒருவரின் சிலை இந்த டிஸ்னி உலகத்தை சிருஷ்டித்த வால்ட் டிஸ்னியின் சிலை தான்.

விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் வால்ட் டிஸ்னி. இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் பொழுது போக்கு தொழிலை தன் சந்ததிக்கு விட்டுச்சென்றவர். இந்த மேஜிக் வேர்ல்டு நுழை வாயில் தான் இந்த பார்க்கினை மூன்றாக பிரிக்கிறது இந்த கட்டிடத்தின் உள்பகுதி வலப்பகுதி இடப்பகுதி இங்கெல்லாம் தான் பல விளையாட்டுகள் அரங்கங்கள் உள்ளன.. மேலும்..

டிஸ்னி சிலை அருகே தான் இனி அத்தனை ரோட் ஷோக்களும் நடக்கும் ஆகவே நாங்கள் எங்கள் லாண்ட்மார்க்கை இங்கு மாற்றிக் கொண்டோம் யார் வழி தவறினாலும் டிஸ்னி சிலைக்கு வந்து காத்திருக்கும்படி திட்டம் இட்டோம்.. எப்படியோ டிஸ்னி எங்களுக்கு வழிகாட்டியானார். முதலில் இடதுபக்கம் சாலையில் உள்ள பார்க்குக்கு போனோம் 10:30க்கு அங்கு மலை ரயில் எனப்படும் ரயில் சாகசப் பயணம் என எங்கள் மேப் கூறியது.

5 நிமிட நடை சரியான கூட்டம் நீண்ட க்யூ.. ஆனால் கெஸ்ட் பாஸ் பக்கம் கூட்டமே இல்லை எங்கள் கார்டினை ஸ்கேனரில் காட்டியபோது நீல நிறத்தில் மிக்கி மவுசின் தலை ஒளிர்ந்து அக்செப்ட்டட் என்றது. வாசல் போர்டில் பேரிடி மலை ரயில்பாதை என்னும் அர்த்தத்தில் Big Thunder Mountain Rail Road எழுதியிருந்ததை அலட்சியமாக படித்துவிட்டு உள்ளே போனோம்.. உண்மையில் அந்த பேரிடி என்பது எவ்வளவு உண்மை என..

அடுத்த 10ஆவது நிமிடத்தில் தெரிந்து கொண்டோம்.. ஒரு ரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசை ஒவ்வொன்றிலும் 2 பேர் வீதம் மொத்தம் 6 பேர் அமரலாம்..முதல் வரிசையில் வெளிநாட்டு ஜோடி இரண்டாவதில் சசியும் கிறிஸ்டோவும் கடைசியில் நான் ஒருவன் மட்டுமே.. என்னுடன் உட்கார வந்த ஒரு அழகிய பெண்ணை வயித்தெரிச்சல் பிடித்த பார்க் ஊழியன் தடுத்துவிட்டு என்னை மட்டும் அமரச் சொன்னான் வெயிட் பாலன்சாம்.

அவனுக்கு தமிழ் தெரியாது என்பதால் சிரித்த முகத்துடன் எல்லா கெட்ட வார்த்தையிலும் திட்டினேன்.. பதிலுக்கு அவனும் சிரித்தான்.. சீட் பெல்ட் அணிவித்து மேலே ஒரு டிவைடர் போன்ற கம்பியை இறக்கி அதற்குள் என்னை சிறைபிடித்தான் மேல் பாக்கெட்டில் இருக்கும் செல்போன் கண்ணாடி பர்ஸ் போன்ற பொருட்களை பேகில் வைத்துக்கொள்ளச் சொன்னான் இதையெல்லாம் செய்து கொண்டே ஓரக்கண்ணால்..

தவிப்புடன் நின்று கொண்டிருந்த அந்த அமெரிக்க அழகியை பார்த்தேன் கண்ணடித்து கட்டை விரல் உயர்த்தினாள் ச்சே டோனெட் போச்சே என அமெரிக்க வெர்ஷனில் புலம்பினேன். ரெயில் மெல்ல நகர அமெரிக்க அழகி கையசைக்க கண்களால் அவளிடம் விடை பெற்றுக் கொண்ட அடுத்த நொடி அய்ய்ய்யோ..ரயில் தரையிலிருந்து  50 அடி பள்ளத்தில் செங்குத்தாக பாய்ந்து உடலின் ரத்த ஓட்டத்தை உச்சந்தலையில் உணர விட்டது.!

(வரும்..)

No comments:

Post a Comment