Friday 29 July 2016

7️⃣🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰7️⃣

கரீபியன் பைரேட்ஸ் உலகிற்குள் படகு திரும்பிய வினாடி மொத்த குகையும் கும்மிருட்டானது சுவர்களில் மறைந்து இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து திடும் திடும் என இசை ஒலிக்கத் துவங்கியது மெல்ல அவ்விசை உயர உயர அதே வேளையில் அமெரிக்க பி.எஸ்.வீரப்பா ஒருத்தரின் இடிச்சிரிப்பும் ஒலிக்க குழந்தைகள் தம் பெற்றோரைக் கட்டிக்கொண்டனர் நானும் கட்டிக்  கொள்ள ஆள்தேடி பக்கத்தில் சசி கிறிஸ்டோ இருந்ததால் விட்டுவிட்டேன்.

கும்மிருட்டில் திடீரென பளிச் வெளிச்சம் எதிரே ஒரு அருவி கொட்டிக் கொண்டிருக்க அதில் பைரேட்ஸ் தலைவன் முகம் புரொஜக்டர் ஒளியில் தெரிந்தது அவன் தன் கரகர மொறு மொறு குரலில் பைரேட்ஸ் உலகிற்கு எங்களை அச்சுறுத்தி வரவேற்க படகு அந்த அருவி நோக்கி போக போச்சு இந்த முறை நனைவது உறுதின்னு நினைத்து எங்களை தயார் படுத்திக் கொள்ள அருவியில் நுழைந்தது படகு.. ஆனால் யாருமே நனையவில்லை.! 

அது விர்ச்சுவல் எஃபெக்டில் புரொஜக்ட் செய்யப்பட்ட அருவி என்பது படகு அதில் நுழையும் போது தான் தெரிந்தது இவ்வளவு நேரம் தண்ணீராக தெரிந்தது இப்போது புகையாய் சுருண்டு கலைந்தது.. அடுத்து போக போக இருபுறமும் கரீபியன்களின் உலகம், அந்த காரெக்டர்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ள பொம்மைகளாக அசைந்து பேசின இடையிடையில் துப்பாக்கி வெடித்தது அலறல் கேட்டது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம்.

குகையின் நடுவே தொங்கும் ஒற்றைக்கால் மனிதன், நடு மண்டையில் கோடாலியை கோல்டு மெடலாக குத்தியவன், ஒற்றைக் கண் முகமூடி அணிந்த எலும்புக்கூடு பைரேட், வெட்டிய தன் கையை தானே எடுத்து வைத்துக் கொண்ட தானைத் தலைவன், தண்ணிவண்டி டாஸ்மாக் பைரேட் என திகிலுக்கு ஏராளமான கேரக்டர்கள் இருந்தனர்.. குகை முடிவில் தங்கம்  வைரம் வைடூரியம் என கொள்ளையடித்த பொக்கிஷங்கள் இருக்கும் அறை.!

ஜொலிக்கும் அந்த அறையில் ஒரு தங்க சிம்மாசனத்தில் பைரேட்டுகளின் தலைவன் மகுடம் அணிந்து எங்களுக்கு போய்வா என கையாட்டினான். அதை கடந்த திருப்பத்தில் படகு திரும்பியதும் இயல்பு வெளிச்சத்திற்கு வந்தது.. அனைவரும் கைத்தட்டினார்கள்..உடலெங்கும் சிலிர்ப்பும் சொல்ல இயலாத ஒரு உணர்வும் ஓடிக்கொண்டிருந்தது.. வெளியே கரீபியன்கள் பயன்படுத்தும் பொருட்கள் உள்ள கடை.! இது டிஸ்னி வேர்ல்டில் சகஜம்.

அலாவுதீனோ கரிபியனோ டிஸ்னியின் கேரக்டர்கள் உள்ள அரங்கிற்கு போனாலே எக்சிட் ஆகும் போது இதுபோல கடைகள் இருக்கும் கைப்பைகள்,பர்சுகள், விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்கள், கைக்குட்டைகள், டேபிள்விரிப்புகள் இப்படி அந்த கான்செப்ட் அந்த காரெக்டருக்கு தகுந்தது போல வைத்து விற்பனை செய்கிறார்கள். நாங்கள் அதை வாங்குவதற்கு அமெரிக்காவில் சம்பாதித்தால் வாய்ப்பு. ம்ஹும்..

30 டாலருக்கு (₹2100) குறைந்து எதுவுமில்லை என்மனைவி மட்டும் அங்கு இருந்தால் ஐயோ கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கம் விலையா என அலறி
இருப்பாள். பைரட் அனுபவத்தை அசை போட்டுக் கொண்டே கிளம்பினோம் அடுத்து டிகி பேர்டு அரங்கம் ஆனால் அதற்கு நேரம் இருந்தது.. எதிரில் தான் அலாவுதீன் மீண்டும் போனால் நாங்கள் காலையில் பார்த்ததை விட கூட்டம் அதிகம் இருந்தது. அலாவுதீன் தீம் பொருட்கள் விற்கும் கடை தென்பட்டது.

டிகி பேர்டுக்கு எதிரே தான் என்பதாலும் எப்படி பார்த்தாலும் எதுவும் வாங்கப் போவதில்லை என்ற தெம்பினாலும் உள்ளே நுழைந்தோம். என்னை போல பருமனான ஒரு பெண் அலாவுதீன் பணிப்பெண் போல உடையணிந்து வரவேற்றாள். அராபிய தீமில் அழகழகான கலைப் பொருட்கள் இருந்தன அத்தனையும் எங்கள் மனதை கொள்ளையடித்தது அதற்கு விலை வைத்து வால்ட் டிஸ்னி கொள்ளையடித்தார் என்னை அங்கு கவர்ந்தது ஒரு பொருள். 

அது என்ன தெரியுமா? அலாவுதீன் விளக்கு மிக சிறிய சைசே 30 டாலர்கள் என்றார்கள் அது குழந்தைக்கு பால் புகட்டும் சங்கு சைசில் இருந்தது.. அதை விளக்குன்னா பூதமே நம்பாது ஒரளவிற்கு பெரிய சைசில் இருந்த விளக்கு 100 டாலர்கள் என்றார்கள் (₹7000) எடுத்து விட்டேன் அய்யோ இரண்டரை கிராம் தங்கம் என இந்தியாவில் இருந்து வந்த என் மனைவியின் மைண்ட் வாய்சை கேட்ச் செய்துவிட எடுத்த இடத்தில் வைத்துவிட்டேன்.

அந்தப் பெண் என்னிடம் வந்து ஹஸ்கியான விஸ்கி வாய்சில் விளக்கு வாங்கலியா தேனே (ஹனி) என ஆங்கிலத்தில் கேட்டாள் (என்னா யாவாரத் தந்திரம்) அதை தேய்த்தால் பூதம் வருமா அன்பே என்றேன்.. மேபீ என்றாள் கண்ணடித்து.. அதை தேய்த்தால் பூதம் வரும் ஆனால் ஆயுசுக்கும் எனக்கு சாதம் வராது எனக்கூறி அவளுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அடுத்து  டிகி பேர்ட் அரங்கம்.. உள்ளே சென்று அமர்ந்தோம். விளக்கு அணைந்து எரிய அங்கே...! வாவ்..!   (வரும்...)

No comments:

Post a Comment