Tuesday 7 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"ஐயாவை நம்பி வந்துட்டேனுங்க அடுத்த மாசம் பொண்ணுக்கு காலேஜ் திறக்குறாங்க நீங்க கொடுத்த காசுல தான் புள்ளை ஸ்கூல் படிப்பே முடிச்சா இப்ப காலேஜுக்கும் பணம் கட்டிட்டா என் காலம் இருக்குறவரைக்கும் மறக்கமாட்டேனுங்க" என அந்த ஏழை தகப்பன் சாமிக்கண்ணு தேவராஜனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

தேவராஜன் மிகப்பெரிய செல்வந்தர்..! பிறருக்கு கொடுத்து உதவும் நல்ல மனம் உடையவர்.. ஆனால் இப்போது நொடித்துவிட்டார்.. இப்போது இருக்கும் இந்த பங்களாவையும் விலை பேசி தான் பட்ட எல்லா கடனையும் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரு வார அவகாசத்தில் இதை காலி செய்யவேண்டும். இந்த நேரத்தில் தான் சாமிக்கண்ணு உதவி கேட்கிறார்.

சாமிக்கண்ணுவின் மகள் நன்றாகப் படிப்பாள்.. உண்மையில் அவள் பத்தாவது படிக்கும் போதே தேவராஜ் பணம் இல்லாததால் உதவி செய்வதை நிறுத்திவிட்டார்.. அதற்கே அவருக்கு மனவேதனை இருந்தது நல்ல வேளையாக அந்தப்பெண்ணுக்கு கடைசி 2 வருடங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க நிம்மதியடைந்தார். இப்போது 10 பைசா கூட அவரிடம் இல்லை.

ஐயா.. என்ன யோசிக்கிறிங்க.. என்றார் சாமிக்கண்ணு.. ஒண்ணுமில்லப்பா நாளைக்கு காலையிலவா ஏற்பாடு பண்றேன் என்றார் தேவராஜ். மகிழ்வோடு சாமிக்கண்ணு கிளம்ப..அவர் போனதும் தேவராஜின் மனைவி கேட்டார் என்னங்க இப்படி சொல்லிட்டிங்க பணத்துக்கு என்ன பண்ணபோறிங்க?

அதுதாம்மா தெரியலை ..இல்லைன்னு சொல்லவும் வாய் வரலை..உங்கிட்ட ஏதாச்சும் நகை நட்டு இருக்கா.. என்னங்க இது அது இருந்தா நான் தரமாட்டேனா தாலியில இருந்த தங்கத்தை கூட வித்தாச்சுங்களே  என்றார் தேவராஜின் மனைவி.. அய்யோ அவருக்கு காலையில் தர்றேன்னு சொல்லிட்டனே இப்ப என்ன பண்ணுவேன்.. புலம்ப ஆரம்பித்தார் அவர்.

சரி விடுங்க கடவுள் இருக்கான் அவன் பாத்துக்குவான் என மனைவி ஆறுதல் படுத்த திரும்ப திரும்ப அதையே புலம்பியபடி வேதனையான முகத்துடன் கண்ணீர்விட்டார் அவரை தேற்றியபடியே மனைவி தட்டிக்கொடுக்க இருவருமே தூங்கிவிட்டனர். விடிந்தது மனைவி எழுந்தார்..கட்டிலில் உறங்கிய நிலையில் தேவராஜ் இறந்திருந்தார்.

அவரது முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சிறு புன்னகையும் நிம்மதியும் தெரிந்தது.

நீதி : வறியவர்க்கு உதவ முடியாத வேளையில் வரும் மரணமும் இனிமையானது.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

No comments:

Post a Comment