Sunday 5 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

"வேணாங்க அரசியல் செல்வாக்கு இருக்குற அவங்க கூட நாம மோத முடியாது... பேசாம இந்த வீட்டை அவங்க கேட்ட விலைக்கே கொடுத்துடுங்க" என்றாள் கணவன் ரவியிடம் மஞ்சுளா. 

இல்லம்மா அவங்க அநியாயத்துக்கு குறைஞ்ச விலைக்கு கேக்குறாங்க இன்னிக்கு இந்த இடத்தோட வேல்யூவை விட பாதி கூட இல்லை அவங்க தரேன்னு சொன்ன தொகை அதான் யோசிக்கிறேன் என்றான் ரவி.

யோசிக்காதிங்க கிடைச்சது வரைக்கும் நல்லதுன்னு வாங்கிகிட்டு பேசாம போயிடுவோம்.. நீங்க இல்லாத நேரமா ரவுடிங்க வீட்டுக்கு வெளிய நின்னு மிரட்டுறாங்க.. நாம வேற எந்த ஊருக்காவது போயிடுலாங்க என அழுதாள்.

சரி சரி அழாதே.. அந்த பத்திரத்தை எடு அந்தாளுகிட்ட போய் கொடுத்துட்டு வர்றேன்.. அரசியல்வாதி அம்பலவாணனின் மிரட்டலில் அந்த அப்பாவி குடும்பத்தார் அந்த இடத்தை விற்றுவிட்டு வேறு ஊர் போனார்கள்.

ஆறு மாதங்களுக்குப் பின்... அம்பலவாணன் வீடு கோபத்தோடு உறுமிக் கொண்டிருந்தார்.. என்னடா சொல்ற தகவல் உண்மை தானா என்றார் உதவியாளிடம்.. ஆமாண்ணே இந்த இடத்துல தான் ஹைவேயை இணைக்கிற மேம்பாலம் வருதாம் அதான் நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.. 

இது மத்திய அரசு திட்டம்.. இப்ப நம்ம கட்சித் தலைவருக்கும் மத்திய அரசு ஆதரவு வேணுங்கறதால பிரச்சனை பண்ணாம இடத்தை இலவசமாவே கொடுத்துடுங்கன்னு தலைவர் சொல்லிட்டாரு. என்றபோது அம்பலவாணன் திகைத்து நின்றார்.

நீதி: பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

No comments:

Post a Comment