Tuesday 21 July 2015

குறள் குறுங்கதைகள்

#குறள்நெறிக்_குட்டிக்கதைகள்

ஹாய் ரவி குட்மார்னிங் என்றான் ஹரி.. பதிலுக்கு புன்னகையுடன் பதில் கூறிவிட்டு தன் கேபினுக்குள் நுழைந்தான் ரவி. இருவரும் ஒரே அலுவலகத்தில் ஒரே நிலையில் பணி புரிபவர்கள். அது ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம்.. தற்போது ஒரு புராஜக்ட்டுக்காக இருவருக்குமே ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதில் சிறப்பாக அதை வடிவமைப்பவருக்கு பதவி உயர்வு வெளிநாட்டு சுற்றுலா 3 மாதம் சம்பளத்துடன் விடுமுறை சொகுசுக்கார் போன்றவை கிடைக்கும். ஹரியை காட்டிலும் ரவி திறமையானவன்.. அவனது சாஃப்ட்வேர் நேர்த்தியாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான தகவல்களுடனும் அதை தயாரித்து வைத்து இருந்தான். ஹரிக்கும் இது நன்கு தெரியும்.

எப்படியாவது இந்த சலுகைகளை தான் பெறவேண்டும் என ஆசைப்பட்டான். அதற்காக காய் நகர்த்தி ரவியிடம் நண்பன் போல நெருங்கிப் பழகினான் சாதுர்யமாக அவனது கணினியின் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டான் ஒருநாள் ரவி அவசர வேலையாக கிளம்பிப்போக அந்த வேளையில் நைசாக அவனது சாஃப்ட்வேரை காப்பி எடுத்துவிட்டான்.

அடுத்தவாரம் ஹரியின் சாஃப்ட்வேர் தான் தேர்வானது. ரவியால் ஊகிக்க முடிந்தது நிச்சயம் ஹரி இதை தன்னிடம் இருந்துதான் திருடியிருப்பான் என்று நேராக மேலதிகாரியிடம் சென்று இதைப்பற்றி கூறினான்.. அவரும் என்ன செய்ய இதை எப்படி நான் நம்புவது என்றார்.. 

உடனே ரவி அவன் உருவாக்கிய சாஃப்ட்வேரில் இப்படி ஒரு பிரச்சனை வந்தால் எப்படி தீர்வு காண்பது எனக் கேளுங்கள் அது ஹரி உருவாக்கியதாய் இருந்தால் அவன் தீர்வு சொல்லட்டும், இல்லாவிட்டால் நான் சொல்கிறேன் என்றான். மேலதிகாரியும் இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டு தனித்தனியாக இருவரிடமும் அதைக் கேட்க ஹரி வசமாக சிக்கினான்.. ரவி சுலபமாக அதை தீர்த்துவைத்தான்.

மேலதிகாரி சாரி ரவி.. இது உங்க சாஃப்ட்வேர் தான்.. ஒத்துக்குறேன் இந்தச் சலுகைகள் எல்லாம்.... ஹரிக்கே கொடுத்துடுங்க என்றான் ரவி.!
ஆச்சர்யத்துடன் அவர் அவனைப் பார்க்க.. ஆமா சார் எனக்கு நம்பிக்கை இருக்கு இது ஒரு சின்ன புராஜக்ட் தான் இந்த நிறுவனத்துல இதைவிட அதிக சலுகைகளை நான் உழைத்து பெற முடியும்.

ஆனா.. ஒரு போலியான நண்பனை தெரிஞ்சிக்க நான் கொடுத்த விலை தான் இது. இனி அவன் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டேன்.. உங்களுக்கு இது என் சாஃப்ட்வேர்ன்னு நிரூபிச்சதே போதும் இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் ஸார் எனக்கூறிவிட்டு ரவி கம்பீரமாக கிளம்பினான்.

நீதி: மனத்தில் கெடுதல் இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசுள்ள நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.


No comments:

Post a Comment