Sunday 28 February 2016

டாலர் Note(d)..

#நோட்டு_அடித்ததை_நோட்டம்_விட்டோம்

டாலஸ் நகரில் நண்பர் சவுந்தரிடம் இந்த ஊரில் சுற்றிப்பார்க்க முக்கியமான இடங்கள் என்னென்ன? எனக் கேட்டபோது அமெரிக்க டாலர் நோட்டு ப்ரிண்ட் பண்ற ப்ரஸ் இங்க தான் இருக்கு பார்க்குறிங்களா என்றார். கண்கள் விரிய அங்க எல்லாம் பப்ளிக் அலவ் பண்றாங்களா என்றோம் வியப்புடன்.! ஆம் என்றவர் அன்று காலையே நண்பர் நந்தாவுடன் எங்களை அனுப்பி வைத்தார். தீபாவளி பட்டாசை கையில் கொடுத்துவிட்டு சத்தமில்லாம வெடிங்க என்று சொல்வது போல வாசலில் இருந்த செக்யூரிட்டி முக்கியமாக உள்ளே காமிரா செல்போனுக்கு அனுமதி இல்லை என்றார்.. கட்டிடத்தின் நான்கு புறமும் இரும்பு வேலிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்க மெயின் பில்டிங்கிற்கும் ரிசப்ஷனுக்கும் இடையே ஒரு சேப்பாக்கம் கிரவுண்ட்டே கட்டலாம்.

ரிசப்ஷன் மெட்டல் ஸ்கேனர் எங்களை கற்பழித்து புனிதமானவர்கள் என சான்றிதழ் அளிக்க உள்ளே அனுமதிக்கப் பட்டோம். உள்ளே சென்று ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்ற 35 விநாடி பேட்டரி கார் வந்தது.. வெளுத்த வெள்ளரிப்பழ நிறத்தில் போலீஸ்  சீருடையில் ஒரு பெண்மணி கண்ணிலேயே சிரித்து வரவேற்று வண்டியேற்றினார். 5 நிமிட பிரயாணம் மெயின் பில்டிங் உள்ளே மீண்டும் மெட்டல் யாக குண்டத்தில் இறங்கி எங்களை நிரூபித்து உள்ளே நுழைந்தோம்.. முதலில் இருந்தது இன்பர்மேஷன் சென்டர்.. அங்கு டாலர்கள் பற்றிய  அச்சிடப்பட்ட அழகிய ப்ரவுஷர்களாக இருந்தன அவை இலவசம் தான். எடுத்துக் கொண்டோம். 
அடுத்து டாலர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் ரூபாய் நோட்டுகளின் பிளாக்குகள் டாலரில் உள்ள வாட்டர் மார்க்குகள் டாலர் நோட்டின் சீரியல் எண்கள் இவற்றின் மாதிரிகளை கண்டோம்.. சிலவற்றை ஐபேடுகளில் டச் செய்து நாமே பார்க்கும் வசதி இருந்தது.. அடுத்து டாலர் நோட்டு பற்றிய விநோத செய்திகள் அரங்கு.

அமெரிக்காவில் மட்டுமே டாலர் நோட்டை கிழித்து தந்தாலும் செல்லும்.. ஒரு மாடு விவசாயியின் 6000 டாலர்களை தின்றுவிட அந்த மாட்டை வெட்டி அதன் வயிற்றில் இருந்த் நோட்டுகளை சரிபார்த்து அந்த விவசாயிக்கு 5000 டாலர்களை திருப்பித் தந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது.. தீ விபத்தில் பாதி எரிந்த நோட்டுகள், முழுதும் கருகியவை, கரையான் அரித்த நோட்டுகள், மழை வெள்ளத்தில் ஊறிய நோட்டுகள் இப்படி எந்த நிலையில் பணம் தந்தாலும் அதற்கு நிகரான டாலராக மாற்றித் தருகிறார்கள். அவர்கள் பணம் எந்நிலையிலும் மதிப்பு மாறாத பணம் அடுத்து டாலர் ப்ரிண்ட்டிங் செய்யும் ப்ரஸ்.. இங்கு நுழைபவர்களுக்கு ஒரு வாக்கி டாக்கி தரப்படுகிறது அதில் ஆங்கிலம் ஸ்பானிஷ் சீனம்  முதலான 8 மொழிகளில் அறிவிப்பு வரும். குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று அங்கு அறிவிப்பு பலகையில் உள்ள எண்ணை வாக்கி டாக்கியில் அழுத்தினால் அந்த இடத்தைப் பற்றிய அறிவிப்பை வாக்கி டாக்கியில் கேட்கலாம்.

டாலர் ப்ரிண்ட் செய்யும் இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்கும் படி ஏற்பாடு..புல்லட் ஃப்ரூப் கண்ணாடிகள் வழியாக துல்லியமாக தெரிந்தது. உலகின் மதிப்பு மிக்க பணம் அங்கு ஷீட் ஷீட்டாக ப்ரிண்ட் ஆகி தனித் தனியாக கட் செய்து மிஷின் மூலம் கட்டுகளாகியது. ஒரு இடத்தில் இருந்த சிறிய குவியலில் நீங்கள் பார்க்கும் குவியல் 16 மில்லியன் என எழுதியிருந்தனர். லட்சகணக்கில் அடிக்கும் கட்சி போஸ்டர்கள் போல பணம் அச்சடிக்கப்பட்டு அதை குவியல் குவியலாக அடுக்கியிருந்தனர்.. அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மட்டுமே டாலர் அச்சிடப்படுகிறதாம் ஒன்று வாஷிங்டன் இன்னொன்று டாலஸ்.. பலவிதமான வாட்டர் மார்க் நுணுக்கமான எண்கள் குறியீடுகள் எல்லாம் ஒவ்வொரு செக்ஷனில் பூர்த்தியாக இறுதியில் கட்டுகளாகிறது.

பிறகு டாலர் பற்றி ஒரு திரைப்பட காட்சியையும் பார்த்து விட்டு.. வெளியேறினால் டாலர் ஷாப்.. வித விதமான கீ செயின்கள், போஸ்டர்கள், டேபிள் வெயிட்டுகள், பொம்மைகள் எல்லாம் டாலர் படம் போட்டு ஒரு புறம் ப்ரிண்ட் ஆன டாலர் ஷீட் கூட விற்றார்கள்.. ஞாபகத்துக்கு ஒரு போஸ்டர் மட்டும் வாங்கினேன்.. இந்த இடத்தை பற்றி ஃபேஸ்புக்கில் எழுதப் போவதால் சில புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் செக்யூரிட்டி அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர் கஞ்சா கருப்புவை பார்த்த வீனஸ் வில்லியம்ஸ் பார்வையில் என்னை பார்த்து அதோ தூரத்தில் (சுமார் 2கி.மீ) இருக்கும் நுழைவு வாயிலில் போட்டோ எடுத்துக் கொள் என்றார் வெகு அலட்சியமாக.. கண்ணால் சிரித்த கண்ணழகி மெரிலின் தான் ஐடியா சொன்னார் கூகுளில் போட்டோ கிடைக்கும் என்று அவர் சொன்னதன்படி எடுத்து பதிவிட்டு உள்ளேன்..அவருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை  டாலர் பற்றி எழுத உதவி செய்த அவருக்கு அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் டாலரை நேரில் பரிசளிக்க அந்த மீனாட்சி அருள வேண்டும்.

No comments:

Post a Comment