Tuesday 10 February 2015

ஏழாவது வடை.

2. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் முருகதாஸ்...

காப்பி அடிப்பது என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் இவரின் சொந்த கற்பனையில் உருவான கதை இது...!!!!

தஞ்சை டெல்டா பகுதிகளில் போதி தர்மர் வம்சத்தின் வழி வந்த ஒரு ஏழைப் பாட்டி வடை சுடுகிறாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற தன் தாத்தா போதி தர்மர் சீனர்களுக்காக சமைத்த உணவு தான் இன்றைய சைனீஸ் ஃபுட் என்பதும், அதன்பின் இந்தியாவுக்கு வரும் அதே சீன ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் வியாபரத்தால் அவளது வடை வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அப்போது அவளுக்குத்தெரியாது!

தினமும் பல வடைகள் பாட்டி சுட்டாலும் நாலு வடைக்கு மேல் சுடும் வடை உன்னுடையது அல்ல எனும் கம்யூனிச கோட்பாடு கொண்ட கத்தி ச்ச்சீ காக்கா ஒன்று அங்கு வருகிறது.. ஒவ்வொரு முறையும் பாட்டி சுடும் ஏழாவது வடையை அது சுடுகிறது.! ஏற்கனவே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளின் இடையூறால் வியாபாரம் இழந்த பாட்டி காக்காவின் திருட்டு செயலால் நஷ்டமடைந்து பாதிக்கப்படுகிறாள்.!

இந்நிலையில் பாட்டி வடை சுடுவது போல ஊரில் நிலங்களைச் சுடும் ஒரு வெள்ளைக்கார கம்பெனி... நரி போல உள்ளே நுழைகிறது. ஊரில் உள்ள எல்லா காக்காய்கள் சுடும் வடைகளையும் அது சுரண்டுகிறது. இதில் கம்யூனிச காக்காவின் ஏழாவது வடையும் பறிபோகிறது இப்போது தான் பாட்டியிடம் தான் வடை சுட்டது எவ்வளவு பெரிய தவறு என அந்த காகம் உணருகிறது..!

அந்நிய நரிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க.. கொதித்தெழுந்த காகம் அந்த நரியின் முகத்திரையைக் கிழிக்க நியாயமாகப் போராட துணிகிறது. ஆனால் அப்பாவி காகத்தை நரி ஆள் வைத்து கொல்லப் பார்க்க அந்த தாக்குதலில் காக்கா தப்பித்து ஓடி விடுகிறது.. இதையெல்லாம் பார்த்த இன்னொரு காக்கா அந்த ரியல் காக்காவின் இடத்துக்கு வருகிறது.! ஆனால் இது அதிரடி காக்கா.!

நம் மூதாதையர் நினைவாக சைனாவில் சுட்ட வடையை இந்தியாவிற்கு கொண்டு வர முடிவு செய்கிறது அதிரடி காகம். அங்கும் ஒரு சீனப்பாட்டி வடை சுடுவதை தெரிந்து கொண்ட காகம் அவளிடமிருந்து வடை சுட நினைக்கிறது. அந்த பாட்டியின் பேரன் தான் டாங்லீ எனும் சைனா வடை மாஸ்டர்.! டாங்லீ இருக்கும் வரை வடையை சுட முடியாது என்பதை தெரிந்து கொண்டது காகம்.

அவர் இல்லாத போது மேப் போட்டு அதை டேபிளுக்கு அடியில் பார்த்து ஸ்கெட்ச் போட்டு சீனாவில் இருந்து வடையை தூக்கிக் கொண்டு இந்தியா வந்துவிடுகிறது. வடையை இழந்த வேதனையில் சீன பாட்டி உயிரே போனது போல் சீன் போட அதை தாங்காத பேரன் டாங்லீ சீன வடையை திரும்ப பெற சபதம் போட்டு இந்தியா வருகிறார். அவருக்கு அந்த வெள்ளைக்கார நரி எல்லா உதவிகளும் செய்கிறது. 

டாங்லீ இந்தியாவில் சுட்ட வடை பலரை மயக்குகிறது. எல்லா வடைக் கடைகளுக்கும் வியாபாரம் நொடித்து போகிறது. இந்த நிலை நீடித்தால் வடை சுடும் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படுகிறது.. சென்னை, மதுரை,நெல்லை, திருச்சி என சகல நகரங்களும் வடையின்றி ஸ்தம்பிக்க டாங்லீ காகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார்அது தெரிந்தும் அவனுக்கு உடன் பட மறுக்கிறது காகம். 

டாங்லீ காகத்திற்கு எதிராக நோக்கு வர்மம் உபயோகிக்க.. அதை நோக்காமல் தவிர்க்கிறது காகம்.டோங்லீயின் சதி என்ன.? காக்கா சைனாவில் பறந்ததா?வெள்ளைக்கார நரி யார்? காகம் செய்தது துரோகமா? பாட்டி என்ன ஆனார்? திரையரங்கம் அதிரும் ஆரவாரத்துடன் காணத்தவறாதீர்கள்.. 

குரோஸ் பிலிம் கார்ப்பரேஷன் வழங்கும்

A.R.முருகதாஸின் #ஏழாவது _வடை

விரைவில்...

No comments:

Post a Comment