Monday 23 February 2015

மதிமுகா...

மதிமுகா - பம்பரம்

{மறுபடியும் திரும்ப முடியாத காலம்}

பம்பரம். எத்தனை பேருக்கு இன்று சிறு வயதில் விளையாடியது போல் விளையாடத் தெரியும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கடந்த வாரம் மதுரைக்கு போயிருந்த போது ஒரு கிராமத்து விழாவில் பம்பரம் விடச் சொன்னார்கள்.! அதாவது பம்பரத்தை சாட்டையால் சுழற்றி தரையில் விடாமல் அப்படியே கையில் சுற்ற வைக்க வேண்டும்!

சிறுவயதில் இது எனக்கு கை "வந்த" கலை இப்போது சாத்தியமா என்னும் சந்தேகத்துடனே.. பம்பரத்தை வாங்கினேன். நல்ல மீடியமான பம்பரம் அடிப்புறத்தில் ஆணி சரியான அளவில் நீட்டியிருந்தது.. ஆணியின் கீழ்ப்புறம் கூர்மையாக இல்லாமல் உருளையாக தர்மா மீட்டரின் முனை போல் இருந்தது.!

இவ்வகை பம்பரங்கள் நீண்ட நேரம் சுற்றும்.. என்னுள் அமிழ்ந்து கிடந்த பம்பர மெக்கானிசங்கள் அத்தனையும் குபீரென்று வெளி வந்தன.. சற்று பட படப்புடன் சிவப்பு நிற சாட்டையை வாங்கி அதன் இறுதியில் உள்ள முடிச்சு எனக்கு சிறியதாக தெரிந்ததால் மேலும் ஒரு முடிச்சு போட்டு பம்பரத்தை சாட்டையால் சுற்றினேன்.

தோளுக்கு மேல் கொஞ்சம் கையை உயர்த்தி பம்பரத்தை சாட்டையால் ஒரு சுழற்று சுழற்றும் போதே அதை நம்மிடம் இழுக்க வேண்டும்.. கிரிக்கெட்டில் ஜாண்ட்டி ரோட்ஸ் எறியும் த்ரோ போல. சுழற்றல், இழுத்தல், கையை சரியாக பம்பரத்தின் அடியில் கொண்டு செல்லுதல் மூன்றும் ஒரே வினாடிக்குள் நடக்க வேண்டும்.!

இது சிறுவயதில் சாதாரணம்..26 வருடங்களுக்கு பிறகு.. ஒரு முறை சிறு வயதில் விளையாடியதெல்லாம் நினைவில் கொண்டு வந்து மிகுந்த யோசனையோடு சுழற்றுகிறேன் இழுக்கிறேன் கையை நீட்டுகிறேன்.. அட முதல் முயற்சியிலேயே என் உள்ளங்கையில் அழகாக சுற்றுகிறது அந்த வொயிலட் மஞ்சள்.. வெயிட்.. வெயிட்..

வொயிலட் மஞ்சள் என்றா சொன்னேன்.. அட சிறு வயதில் நான் "மார்ஷல்" என்று பெயர் வைத்திருந்த பம்பரமும் அதே கலர் தான் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.. அடடா சுற்றும் அந்த பமபரத்தின் உச்சியை பார்க்கிறேன் மஞ்சளும் வயலட்டும் குயவனின் சக்கரம் போல சுழல்கிறது..என் நினைவுகளும்..கட் பண்ணா..

1984.. சேலம்.. இந்தியாவை கிரிக்கெட் விளையாட்டு மோகம் ஆட்கொள்ளாத காலம்.. சிறுவர்களுக்கு கோலி, கில்லி, பம்பரம் தான் அப்போது எல்லாமே.! கோலியை காசு வைத்து சில முரட்டு அண்ணன்கள் ஆடுவார்கள்.. போலீசெல்லாம் துரத்தும்.. கில்லி தெருவில் நடப்போரை பதம் பார்க்கும்.. பம்பரம் தான் பாதுகாப்பு.!

பம்பர விளையாட்டிலும் ஆக்கராட்டம், அபீட்டாட்டம், என பல உண்டு.. அபீட் ஆட்டம் குரோர்பதியின் ஃபாஸ்டஸ்ட் ஃபிங்கர் போல வேகமாக பம்பரத்தை சுற்றி தரையில் சுழலவிட்டு சாட்டையால் அதை தூக்கி கேட்ச் செய்ய வேண்டும். பம்பரம் சுழலாமல் உருண்டுவிடும் அப்பாவிகளின் பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்படும்.

பிறகு அத்தனை பேரும் அந்த பம்பரத்தை குறிப்பிட எல்லை வரை பம்பரத்தாலேயே அடித்து தள்ளிக்கொண்டே போய் அந்த எல்லை வந்ததும் ஆணியால் ஒரு குத்து குத்துவார்கள்.. பதிவர்களிடம் மாட்டிக்கொண்ட லிங்குசாமி போல அந்த பம்பரம் நாயடி பேயடி வாங்கி உடலெல்லாம் அம்மை தழும்புகள் போல காயம் பெறும்.

ஷார்ட் அபீட்டில் குறைந்தது நான்கு பேராவது மாட்டுவார்கள் அவர்களது பம்பரத்தை வெளியில் எடுத்து கடைசியில் மாட்டும் அப்பாவிக்கு ஆக்கர் பரிசு தரப்படும்.. கிச்சிப் பாளையத்தின் குறுகலான சாக்கடைகள் நிறைந்த வீதிகளில் அவ்வப்போது எங்கள் பம்பரங்கள் சாக்கடை நீராடும்.! மீண்டும் அதை கழுவி எடுத்து விளையாடுவோம்.!

பம்பரங்களில் சட்டி பம்பரம், நீள பம்பரம், தலையாட்டி பம்பரம், சாதா பம்பரம், என பலவகையுண்டு.. லேத்தில் கொடுத்து கூரான ஆணியடித்தால் நாம் ஆக்கரில் நிபுணன், மழு மழு முனை என்றால் சாகசத்திற்கு.. பம்பரத்திற்கு ஆணியடிப்பது ஒரு கலை சில பம்பரங்கள் ஆணியடிக்கும் போதே இரண்டாக பிளந்து உயிரை விடும்.!

சரியாக ஆணியடிக்காத பம்பரங்கள் குதிக்கும்..! தெற்கே விட்டால் மீதி ஏழு திசையிலும் ஓடும் அதற்கு தய்யத்தக்கா பம்பரம் எனப்பெயர். பூப்போல சுற்றும் பம்பரங்களை நாங்கள் பம்பரம் மயங்குது என்போம் நெடு நேரம் சுற்றும் பம்பரம் அது அதற்குதான் மழுமழு முனை ஆணி. சட்டி பம்பரம் ஷார்ட் அபீட்டுக்கு, 

அதே போல பம்பரம் நம் பேச்சு கேட்க சாட்டை தேர்ந்தெடுப்பது முக்கியம்.சாட்டை ரொம்ப நீளமாகவும் இருக்கக் கூடாது, குட்டையாகவும் இருக்கக்கூடாது. நீளமான சாட்டை பம்பரத்தை நழுவ விடும்.. குட்டையானது பம்பரத்தை உருட்டி விடும் சாக்கடைக்குளியல் குட்டை சாட்டையால் தான்.. ஆக சாட்டை மிக முக்கியம்.!

சாட்டை பம்பரத்தின் முக்கோணப்பகுதி நிறைவடையும் வரை நீளம் இருக்க வேண்டும். சாட்டையின் முடிவில் போடப்படும் முடிச்சு இருகப்பிடிக்க அதற்கு நாங்கள் கூல்டிரிங்க் பாட்டிலின் மூடியை (சோடா மூடி) வாங்கி அதை தட்டையாக்கி துளையிட்டு அதில் சாட்டையை நுழைத்து முடி போட்டு இருப்போம்..!

பம்பரத்தை சுற்றுகையில் மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவே சாட்டை இருக்க இரு விரல்களின் மீதும் தாமரைக்கனியின் மோதிரம் போல அந்த வட்டத் தகடு கம்பீரமாய் இருக்கும் பிடியும் நழுவாது. சாட்டையின்  முனையை திரிபோல இரண்டாக பிரித்து சுற்றும் பம்பரத்தின் ஆணியிடம் கொண்டு போனால்..

அது சிக்கிக்கொள்ளும்.. இதற்கு எலி பிடிப்பது என்று பெயர்.. பொதுவாக பெண்களை கவரவே கையில் பம்பரம் விடுவது காற்றில் அண்டர் ஆர்மில் இழுத்து கைக்கு கொண்டு வருவது போன்றவை அந்த காலத்து பைக் வீலிங்கிற்கு சமம். என்னிடம் 5 பம்பரங்கள் இருந்தன.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

அதிலும் வயிலட் மஞ்சள் கலந்த பம்பரத்தை நீண்ட நாள் வைத்திருந்தேன்.. அதற்கு மார்ஷல் எனப்பெயர்.. பெயர் காரணம் முத்துகாமிக்ஸில் கெளபாய் கதையில் வரும் போலீசுக்கு மார்ஷல் எனப்பெயர்.. அதில் ஒருமுறை மார்ஷல் சொல்லுவார் நான் எந்த சாட்டைக்கும் கட்டுப்படாத பம்பரம் என்று" அது எனக்குப் பிடித்துப் போக... 

அப்பெயரை சூட்டிவிட்டேன்.. மாப்ள தென்றல் தான் ஆக்கர் கிங் அவன் மிகக்கூரான ஆணியில் வைத்திருக்கும் பம்பரங்கள் நண்பர்களுக்கு கிலி ஏற்படுத்தும் அதிலும் சில பம்பரங்கள் மீது அவன் வைக்கும் ஆக்கர்கள் விக்ரமாதித்தன் தோளில் அமர்ந்த வேதாளம் போல நன்கு பதிந்து கொள்ளும்.. பிரிக்கவே முடியாது.!

சில வேளைகளில் இரண்டு பம்பரங்களுமே உடைந்துவிடும்.. பல நாள் என்னிடம் இருந்த மார்ஷலும் தென்றலில் ஆக்கரில் ஒரு நாள் உடைந்து போனான்.. இன்று உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் தென்றல் சொல்லுவான் மாப்ள அப்படி ஒரு காலம் திரும்ப வராதுடா என்று.. சென்னையில் இதுவரை நான் பார்க்காதது.!

தெருக்களில் குழந்தைகள் விளையாடும் காட்சியை.! இது சென்னை மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதே தான்.. டென்னிஸ், நீச்சல், கிரிக்கெட், என எல்லா விளையாட்டுக்கும் வகுப்பு, அதற்கு கட்டணம் இது தான் பெரு நகர வாழ்வு.. காசிருந்தால் திறமையை வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.. அது தவறு.

சேலத்தின் வீதிகளில் விளையாடிய நான் தான் பிறகு மாநில அளவிலான கிரிக்கெட் அணிக்கு தேர்வானேன்..பம்பர ஆட்டம் எனது பந்து எறியும் திறனைத் தந்திருந்தது பார்வைக் கூர்மையை மேம்படுத்தியிருந்தது. இயல்பிலேயே இருந்த திறமை மற்ற விளையாட்டுகளால் மேம்பட வேண்டும்.. அது தான் உணமையான பயிற்சி.!

உங்கள் குழந்தைகள் திறமைசாலிகளாக வேண்டுமா எங்களிடம் வாருங்கள் என்று விளம்பரப்படுத்தி இப்போது சம்மர் கேம்ப் என்னும் பெயரில் வகுப்புகள் நடக்கிறது.. அதை போய் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது..!அதில் ஒரு வகுப்பு.!"க்ளே ப்ளே" என்று களிமண்ணை குழைத்து விளையாட வேண்டுமாம்.. அடப்பாவிகளா..!

இதைத்தானே சிறு வயதில் தெருவில் விளையாடினோம்.. இதற்கு கட்டணமா.! ஒரு வேளை கில்லி, மணல் வீடு கட்டுவது, பம்பரம் எல்லாம் சம்மர் க்ளாசில் வந்துவிடும் போல..! மாநகர மனிதனுக்கு பணம் கட்டி எதையும் வாங்குவது தான் மதிப்பாக தோன்றுகிறது.. சரிதானே நான் சொன்னது..!

No comments:

Post a Comment