Saturday 7 February 2015

சாத்தமுது...

#சாத்தமுது_என்கிற_ரசம்சாதம்

ரசம்சாதம் சாப்பிட பிடிக்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.. படித்தால் அது பிடித்துப் போகும் அபாயம் இருக்கிறது.. அட சொல்லச் சொல்ல என்ன பண்றிங்க.. சரி இனி நான் ஒன்றும் பண்ணமுடியாது... வாங்க என் கூட..

ரசம் சாதம் என்பது எனக்கு 3 வயதில் அறிமுகமானது (பாட்டி சொன்னது) வெங்கி ரசஞ்சாதம் சாப்பிடுறியா என்று கேட்டாலே என் முகத்தில் நவரசமும் மிளிருமாம்.! சூடான சாதத்தில் கொஞ்சம் தக்காளி அதிகம் போட்டு புளிப்பு லேசாக இருக்கும் ரசம் எனது ஃபேவரிட். அதிலும் சூடாக ரசஞ்சாதம் சாப்பிடுவதே திவ்யம்.

பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், கொத்தமல்லி ரசம், இப்படி பல ரசங்கள் என் வாழ்வின் சுவையான பரவசங்கள். பொதுவாக ரசம் சாதத்திற்கு உருளைக் கிழங்கு காரக்கறி/ பொரியல் இரண்டும் திகிரி தோஸ்த்து.! சுட்ட அப்பளம் ரசத்தின் தாய்.! பொரித்த வடாம்/ அப்பளம் காதலி.! 

கூட்டு என்பது ரசத்தை பொறுத்து தொட்டுக் கொள்ள சில காம்பினேஷன்கள் உள்ளது... எலுமிச்சை ரசம் என்றால் தக்காளி கூட்டு, மிளகு ரசத்திற்கு முட்டை கோஸ் பருப்பு கூட்டு, பூண்டு ரசத்திற்கு பூசணிக்காய் கூட்டு இப்படி சாப்பிட வேண்டும்.. எலுமிச்சை ஊறுகாயும் பிரமாதம் அது கார சாரர்களின் விருப்பம்.!

எனக்கு மாவடு சாறுடன் எல்லா ரசஞ்சாதங்களும் சாப்பிட மிகப் பிடிக்கும்.. அடுத்த இடத்தில் மாகாளி கிழங்கும் மாங்காய் தொக்கும்.! அப்பளம் வந்த பிறகு எனது மிக மிகப் பிடித்த உணவாகிப்போனது ரசம்.! பூண்டு மற்றும் மிளகு ரசங்களுக்கு அப்பளம் செம ஜோடி.! அரிசி வடாம், வெங்காய வடாம் எலுமிச்சை ரசத்திற்கு.!

அரிசி அப்பளம் தக்காளி ரசத்திற்கு.! அசைவம் சாப்பிட பழகிய பின் ஆம்லேட்டுடன் ரசம் சாதம் புது அனுபவத்தை தந்தது.!அதிலும் வெங்காயம் சோம்பு வத்தல் பொடி மசாலுடன் அவித்த முட்டை பிரட்டல் எங்க வீட்டு ஸ்பெஷல்.! பருப்பு சாதம் ரசம் அவித்த முட்டை மசால் எங்கள் வீட்டு வாரத்தில் ஒரு நாளாவது இருக்கும்.!

பருப்பு போட்டு ரசம் என்றால் முதலிடம் மிளகு ரசத்திற்கு.! அடுத்த இடம் பூண்டு ரசத்திற்கு.! சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பருப்பு போட்டு பிசைந்து பிறகு ரசம் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.. இதைத்தான் தேவலோகத்தில் அமிர்தம் என்று அழைத்திருப்பார்கள் என்பீர்கள்.!அவ்வளவு ருசி.!

ரசம் சாதத்துடன் சாப்பிடத்தான் அப்பளம் கண்டுபிடிக்கப்பட்டது என்று யாரேனும் சொன்னால் நான் மறுக்காமல் ஒப்புக்கொள்வேன்.! ரசமும் அப்பளமும் அவ்வளவு இஷ்டம் எனக்கு. அதை விட ஒரு செளகரியம் சாதம் குழைந்து விட்டால் ரசம் அதகளம் தான்.. குழைந்த சாதத்தில் ரசம் என்றால் விசம் என்றாலும் சாப்பிடுவேன்.!

மதுரையில் குடியேறிய போது அங்கு எனக்கு துவையல் அறிமுகமானது.! கடலை பருப்பு துவையல், புதினா துவையல், இஞ்சி துவையல், பொட்டுகடலைத் துவையல் எல்லாமே ரசத்தின் காதலிகள் அதில் எலுமிச்சை ரசம் புதினா துவையல் பெஸ்ட் காதலர்கள்.! அதே போல பாகற்காய் பிட்லை தக்காளி ரசத்தின் ஆசை நாயகி.!

என் மனைவியை காதலித்த போது அவள் எனக்கு சாதம் வடிக்க மட்டுமே தெரியும் வேறு எதுவும் தெரியாதே என்ற போது.. நீ ரசம் வைக்க மட்டும் கற்றுக் கொள் ஆயுள் முழுவதும் அது போதும் எனக்கு என்றவன் நான்.. ( ஆனா இப்ப மேடம் சமையல் எக்ஸ்பர்ட்..! கேட்டரிங் படிச்சு முடிச்சு டிப்ளமோ வாங்கிட்டாங்க)

ரசத்தில் ஒரு ஸ்பெஷல் இதைத் தான் சூப்பாக குடிக்க முடியும்.. நீங்கள் சாப்பிடும் போது 2 கரண்டி ரசம் ஊற்றிக் கொள்கிற அதே அளவு சூடான குழைவான சாதத்தில் நான் 6 கரண்டி ஊற்றி தட்டெங்கும் அலையடிக்க பிசைந்து சாப்பிடுவேன்..!

அது என் வழக்கம்..! கூடவே அப்பளமும்.. அதிலும் கடைசியில் தட்டோடு எடுத்து வாய் வைத்து சுர்ர்ர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும் சுகம் இருக்கே... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.. சொர்க்கம்.! அலோ எங்க ஓடுறிங்க ரசம் சாதம் சாப்பிடத்தானே..!

1 comment:

  1. ரசம் பிடிக்குதோ இல்லையோ, நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை..

    ReplyDelete