Wednesday 11 February 2015

காக்காயும்.. நரிக்குட்டியும்

5. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் மிஷ்கின்...

தூரத்தில் சிறியதாக தெரியும் ஒரு சிறு வெளிச்சப்பொட்டு பெரிதாகிக் கொண்டே வர அது ஒரு போலீஸ் வாகனம் அதிலிருந்து கை விலங்கோடு இறங்குறான் அவன்.! கண்ணை ஒரு பக்கம் தலைமுடி மறைத்திருக்க மெல்ல ஜெயில் காம்பவுண்ட்கதவு திறக்கப்படுகிறது காரிடாரில் நடந்து செல்லும் பூட்ஸ் ஒலிகள் மட்டும் பின்னணியில் ஒலிக்க இருளும் ஒளியும் கலந்த அந்த சிறைக்குள் அடைக்கபடுகிறான் அவன்.!

அவனை அழைத்து வந்த அதிகாரி அவன் கைவிலங்கை அவிழ்த்து விட்டு சிறைக்குள் அவனை தள்ளி பூட்டுகிறார்.. ஏதாவது சாப்பிடுறயா நீ? என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை எங்கோ வெறித்து பார்க்கிறான்.. உன்னை தான் கேக்குறேன் சாப்பிடுறியா.? ஒரு வினாடி அவன் திரும்பி அவர் முகத்தை பார்த்துவிட்டு கண்ணை மறைத்த முடியை ஒதுக்கிக் கொண்டு மீண்டும் பழைய இடத்திலேயே பார்க்கிறான்.

சாப்பிடாட்டி போஎன்றவர் திரும்பி ஜெயில் காவலரிடம் ஏம்பா எனக்கு சாப்பிட எதும் வாங்கிருக்கியா என்கிறார். யெஸ் ஸார் இட்லியும் வடையும் இருக்கு வாங்க சாப்பிடலாம்ன்னு சொல்லிக்கிட்டே அங்கிருந்து போறாங்க.. அந்த ஜெயிலர் வடைன்னு சொன்ன அதே செகண்ட் அந்த கைதியிடம் ஒரு சின்ன சிலிர்ப்பு அப்படியே சுவரில் சாய்ந்து கண் மூட திரையும் இருட்டாகிறது (ப்ளாஷ் பேக்)

இப்போ திரை வெளிச்சமாக அழகிய பூங்கா ஒன்றின் பென்ஞ்சில் நம்ம கைதி (இனிமே இவரை ஹீரோன்னு சொல்லிக்குவோம்) படுத்து இருக்க வாசலில் ஒரு கண்தெரியாத பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்கா.. பக்கதிலியே ஒரு நரிக்குட்டி அவங்க சுட்ட வடையை கவ்விகிட்டு தெரு முனைக்கு போவுது திரும்ப ஒரு வடையை கொண்டுவந்து வச்சிட்டு போகுது.! ஹீரோவுக்கு ஆச்சரியம்.!

இந்த நரிக்குட்டி ஏன் ஒவ்வொரு வடையா எடுக்குது திரும்ப ஏன் வைக்குது ஒரு வடைக்கும் இன்னொரு வடைக்கும் ஒரு கால் மணி நேரம் ஏன் கேப் விடுது.. சஸ்பென்சோட ஹீரோ அதை மெதுவா போயி பாக்க தெரு முனையில கருப்பு ஹெல்மெட் போட்ட ஆளுகிட்ட அந்த வடையை நரி குடுக்க அவர் அதை தான் கொண்டு வந்த ஹாட் பேகில் போட்டுட்டு இன்னொரு பேகில் இருந்து வடையை எடுத்து நரிக்குட்டி கிட்ட தர.. 

அப்ப இன்னொரு ஆச்சரியம்..! ஒரு காக்கா வடையை கொண்டு வந்து அதே ஹெல்மெட் காரர் கிட்ட தர அதையும் அந்தாளு வாங்கிட்டு வேற வடை தர்றாரு அந்த காக்கா அதை அடுத்த  தெருவில் இருக்கும் ரெண்டு காலும் இல்லாத ஒரு அப்பாவி பாட்டிக்கடையில வச்சிட்டு மறுபடி அங்கிருந்து ஒரு வடையை தூக்கிட்டு வருது. இதுல என்ன சதியிருக்க முடியும்ன்னு சந்தேகத்தோட பாலோ பண்ணி பாக்குறாரு ஹீரோ.!

அப்போ தான் ஹீரோக்கு அந்த பயங்கர உண்மை தெரிய வருது..!அந்த ஹெல்மெட் காரன் இந்த மாதிரி உடல் ஊனமுற்ற ஆட்களை வச்சி வட போட சொல்லுவான்.. அந்த வடைக்குள்ள போதை மருந்தை வச்சி நரிக்குட்டி கிட்டயும் காக்கா கிட்டயும் கொடுத்துடுவான் அதுங்க போய் வச்சிடும் வயதானவங்க ஊனமுற்றவங்க எந்த அனுதாபத்தில் யாரும் சந்தேகிக்க மாட்டாங்கன்னு தெளிவான ப்ளான் அது.!

இதை கண்டுபிடிச்ச ஹீரோ மெதுவா அந்த பாட்டிங்க வீட்டை கண்டுபிடிச்சு போயி உண்மையை சொல்றான்.. அதை கேட்டு அதிர்ச்சி அடைஞ்ச பாட்டிங்க ஹெல்மெட் காரன் கிட்ட இனி நாங்க வடை சுடலை இந்த கூட்டத்தில இருந்து விலகிக்கிறோம்ன்னு சொல்ல ஒழுங்கா வடைய சுடறிங்களா இல்ல உங்களை சுடவான்னு பாட்டிகளை மிரட்ட பாட்டிங்க ஹீரோ உதவியால தப்பிக்கிறாங்க.

கையில ஒரு பாட்டியை தூக்கிகிட்டு கண்ணு தெரியாத பாட்டியோட ஊரு முழுக்க ஓடுறாரு ஹீரோ.. ஹெல்மெட் காரனும் விரட்ட வில்லனுக்கு துணையா அந்த காக்காவும் நரிக்குட்டியும் உதவி செய்யுது.. இரவு முழுக்க ஓடுற ஹீரோ ஒரு இடத்துல நரியை கொன்னுட்டு ஒரு சுடுகாட்டுக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிறாரு.. விடியும் போது மரத்துல இருந்த காக்கா ஹீரோவை பார்த்துட்டு குரல் கொடுக்குது.

பாய்ஞ்சு வந்த வில்லன் கண்ணில்லாத பாட்டியை கொன்னுடுறான்.. காலில்லாத பாட்டியை தூக்கிட்டு மறுபடி ஓடுறான் ஹீரோ.. ஒடிகிட்டே ஒரு வடையை அவன் தூக்கி போட அந்த காக்கா அதை திங்குது.! அதுல அவன் ஏற்கனவே வச்ச விஷத்தால காக்காவும் செத்துடுது.. ஒரு பில்டிங் கார் பார்க்கிங்கில் நுழையுற ஹீரோ அங்க நடக்குற சண்டையில கண்ணில்லா பாட்டியையும் இழக்கிறான்..!

அந்த ஆவேசத்தோட வில்லனை அடிச்சு கொலை பண்ணிட்டு சரண்டர் ஆயிடுறான். இப்ப திரை மறுபடி இருள... வெளிச்சமாகும் போது சிறையில் மறுபடி ஹீரோ..! மெல்லிய வயலின் ஒலி இசைக்க கவலப்படாதே ராசா என்ற கோரஸ் குரல் ஒலிக்கிறது சிறைக்குள் தானாக ஒரு தட்டு நகர்ந்து வர அதில் சூடா 4 வடைகள்... பாட்டிகள் தான் பிசாசாக..!! இனி அடுத்து பாகம் 2 இல் சந்திப்போம் என முடிகிறது படம்.

காக்கா ப்ரேம்ஸ் வழங்கும்...

மிஷ்கினின்.. #காக்காயும்_நரிக்குட்டியும்


No comments:

Post a Comment