Wednesday 18 February 2015

நினைவு நாடா.

டேப்ரிகார்டரும் நானும்...!

நினைவு நாடா...

டேப் ரிகார்டர்..... கேசட் இவை எனக்கு அறிமுகமான போது உலகில் இதை விட ஒரு விஞ்ஞான வளர்ச்சி ஏதும் இருக்காது என்று நம்பினேன்... அந்தளவு என்னைக் கவர்ந்தது அது, அதிலும் கேசட்டில் பாடல்களை ரிகார்ட் செய்வது வாங்கி வருவது தனி சுகம். நமக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு அதனை மியூசிக்கல்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள கடைகளில் சென்று கொடுத்துவிட்டால் 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகு வரச்சொல்வார்கள். 

இதில் அரிசந்திரனாக சிலர்.! அரசாங்கமாக சிலர்.! அதாவது சொன்னபடி கொடுப்பதும் இழுத்தடிப்பதும் உண்டு. அதிலும் 60காசட்டில் 12 பாடல்களும், 90காசட்டில் 18 பாடல்களும் பதியலாம் கடை காரர்கள் நமக்கு 60 காசட்டையே பரிந்துரை செய்வார்கள்,90காசட் டைட் ஆவதாகவும் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் எனவும் கூறுவார்கள். 

உண்மையில் 60 என்றால் இன்னொரு காசட் அதிகமாக விற்கும் என்பது இதன் பின் ஒளிந்திருக்கும் வணிகம். முதலில் என்னை அறிவுத் தேடலில் விட்டவர்களும் மியூசிக்கல்ஸ் கடைக்காரர்கள் தான்... என்ன பாட்டு என்ன படம் என்பதே அவர்களுக்கு தெரியாது, என்ன படமுன்னு தெரியலையே கொஞ்சம் சொல்லுங்க தம்பி என்று நம்மிடம் கேட்பார்கள்.... இவர்கள் மிதவாதிகள்..!

இசை ஞானம் இல்லாது சம்பாதிக்க இத்தொழிலில் இறங்கியவர்கள் தீவிரவாதிகள்.! சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்களை இளையராஜா ஹிட்ஸில் பதிந்து தந்து விட்டு கேட்டால் இது இளையராஜா தான் என்று தீக்குண்டமே இறங்குவார்கள்.. நாமும் பயந்து ஆமாங்க அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும் என ஜகா வாங்க வேண்டியது இருக்கும். 

இதற்காகவே தேடித்தேடி பாடல்கள் பற்றிய விவரங்களை எடுக்கக் கற்றுக் கொண்டேன். இதனால் என் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது... பிறகு சில வருடங்கள் கழித்து ரசனையானவர்கள் இத்தொழிலுக்கு வந்தார்கள். இவர்கள் கடையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட பெரிய நோட் ஒன்று இருக்கும், அதில் அழகான கையெழுத்தில் படத்தின் பெயரும் பாடலின் முதல்வரியும் எழுதப்பட்டிருக்கும் அதற்கு நேராக ஒரு எண்ணும் குறிப்பிட்டு இருக்கும்,அதன் படிஎழுதி கொடுத்தால் போதும்.

அதிலும் சிலர் ரஜினி ஹிட்ஸ்,கமல்ஹிட்ஸ், ராஜாஹிட்ஸ் என பிரித்து எழுதி இருப்பார்கள். சிலர் கலர் கலரான ஸ்கெட்ச் பேனாவில் தென்றல், நிலா,பூ, நெஞ்சம், மல்லிகை, ரோஜா, காதல், மேகம், என தொடங்கும் பாடல்களாக தனித்தனி நோட்டுகளில் எழுதி வைத்து இருப்பார்கள் ரசனையாக இருக்கும். நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்கள் தந்து விட்ட அடுத்த நொடி வீட்டிற்கு ஆவலாக ஓடி வந்து டேப்ரிகார்டரில் அந்த பாடல்களைக் கேட்கும் சுகம் அடடா...!

எனது பால்யம் இளையராஜாவின் பொற்காலமான எண்பதுகள்... இது என் பிறவிப் பயன்..! அழகே உன்னை ஆராதிக்கிறேன், பன்னீர்புஷ்பங்கள்,ஆராதனை, உதிரிப்பூக்கள், நண்டு, மஞ்சள் நிலா, ஆனந்தக்கும்மி, காதல் ஓவியம், மெட்டிஒலி, சிட்டுக்குருவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அனைத்து பாரதிராஜா, பாக்யராஜ், கமல்,ரஜினி, படங்கள் என ராஜா பட்டையை கிளப்பி ராஜ பாட்டையில் நடை போட்ட நேரம்.. கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் வெளி வந்த காலமது.

சில மொக்கை படங்களில் கூட அற்புதமான பாடல்களை தந்து இருப்பார் ராஜா... அதை தேடி எடுத்துப் பதிவதில் எனக்கு ஆவல் அதிகம்.. அந்த படங்களின் பேரெல்லாம் தேடுவதற்கு இப்போதுள்ள கூகுள் வசதி அன்று இல்லை.. தனி நோட்டு வைத்து எழுதிக்கொள்வேன்.. அந்த நோட்டு தான் அப்போது என் பைபிள், குரான், கீதை... அந்த நோட்டை பின்னாளில் மதுரையில் தொலைத்தபோது 2 தினங்கள் சாப்பிடாமல் இருந்தது தனிக்கதை..!

இதற்குப் பிறகு அசெம்பிள் செட் வந்து சக்கை போடு போட்டது.. இதற்காக தனி ஸ்பீக்கர் பாக்ஸ் செய்து வைத்திருப்பேன்.. பானையில் வூஃபர் எஃபக்டில் ஒரு ஸ்பீக்கரும் அதில் அடக்கம். இப்போது மோகன்,விஜயகாந்த், ராமராஜன் பாடல்களின் காலம்... அந்த பாடல்கள் ஸ்டீரியோ இசையில் கிடைத்தன... அந்த பாடல்களின் ஸ்டீரியோ இசையை தெருவே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம் இது வீடா? இல்ல சவுண்ட் சர்வீஸ் கடையா? என்று திட்டு வாங்குவோம்.

இதில் டேப் சிக்கி கொள்வது அதை பென்சிலால் சரி செய்வது அறுந்து போன டேப்பை குய்க்ஃபிக்ஸ் வைத்து ஒட்டுவது போன்ற மெக்கானிக் வேலைகளும் தெரிந்து வைத்து கொண்டேன்... போன வாரம் ஒரு கடையில் என் மொபைலில் பழைய இளையராஜா பாடல்கள் பதிய வேண்டுமென்றேன்.. இதோ சார் என்றவர்...

அடுத்த 5 நிமிடங்களில் 345 பாடல்களை டவுன் லோட் செய்து கொடுத்தார், சட்டென்று எனக்கொரு வெறுமை தோன்றியது..! ஒரு உண்மையும் விளங்கியது.. ஆசைப்படுவது சீக்கிரம் கிடைத்து விட்டால் சில சுவாரஸ்யங்களை இழந்து விடுகிறோம்.! காலரை உயர்த்தி மிகப் பெருமையாகச் சொல்வேன் டேப்ரிகார்டர் காலம் தான் பொற்காலம் என்று.

No comments:

Post a Comment